எங்கள் வயவை முல்லையா? மருதமா? – வயாவிளானின் வரலாறு – 02

822

வயாவிளான் முந்தி காடாக இருந்தது என்றும், மீண்டும் மலரும் மருதம் வயாவிளான் என்றும் முரண்பட்ட கருத்துகளை ஒரே நேரத்தில் வயவன் வெளியிட்டுள்ளது. இதில் உண்மை எது? என்று கேட்டிருந்தார் வாசக நண்பர் ஒருவர்.

அந்த இரண்டு பதிவுகளும், பழைய வயவை முல்லையா, மருதமா என்ற கருத்து மயக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.  அம்மயக்கம் தெளிய இப்பகுதியிலும் தமிழர் தம் அகத்திணை இலக்கிய வழியில் பயணிப்போம்.

இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு (கிட்டத்தட்ட) முன் வயவையூர் காட்டு நிலமாகவே இருந்தது. அங்கே வாழ்ந்த பூர்வக் குடிகள் முல்லைத்தினைக்குரிய பண்புகளுடன் வாழ்ந்தார்கள்.

பல்வேறுபட்ட காரணங்களால் காலத்துக்குக் காலம் வயவையில் குடியேற்றங்கள் நிகழ்ந்தன. இவ்வாறு வேறு இடங்களிலிருந்து வயவையில் குடியேற்றப்பட்ட தமிழர்களாலும் பிற இனத்தவர்களாலும் வயவைக் காடுகள் மக்கள் குடியேற்ற நிலங்களாக மாறின.

வயவையில் குடியேறியோரில் பலர் மருத நில மக்களாக இருந்ததால், அவர்களுடன் சேர்ந்து மருத நிலப் பண்புகளும் வயவையில் குடியேறின.

இவ்வாறு குடியேறிய மருத நிலப் பண்புகளும், பூர்வீக முல்லை நிலப் பண்புகளும் கலந்த ஒரு நிலமாக வயவையூர் திரிபடைந்தது. எம்மில் பலருக்குத் தெரிந்த வயவையூர் திரிபடைந்த வயவையே.

இவ்வரலாற்று உண்மையை வயவையூரில் உள்ள அடையாளங்கள் மூலம் தமிழிலக்கிய அடிப்படையில் உறுதிப்படுத்தலாம்.

சாமை விதைத்தல், மாடு மேய்த்தல், கொன்றை மரம் போன்றன வயவையூரில் காணப்படும் முல்லை நில அடையாளங்கள் எனக் கண்டோம்.

வயவையூரில் வீட்டுக்கு வீடு கிணறுகள் இருப்பதும், அக்கிணறுகளின் தோற்ற அமைப்பு மருத நிலத்தின் மனைக்கிணறை ஒத்து இருப்பதும் வயவையில் காணப்படும் மருத நில அடையாளம் ஆகும்.

அதே போல், ஊரின் ஒவ்வொரு குறிச்சியிலும் இருக்கும் ஆலயங்களில் நாம் செய்யும் வெகு விமரிசையான திருவிழாக்கள் மருத நில மக்களின் பழக்கம் ஆகும்.

இவ்விரு அகத்தினை அடையாளங்களை வைத்துப் பார்க்கும் போது, காடாக இருந்த வயவையூர் குடியேற்றங்கள் காரணமாக தற்போதைய நிலையை அடைந்தது என நாம் முடிவு கொள்ளலாம்.

இதை மேலும் உறுதிப்படுத்த யாழ்ப்பாண மன்னன் முதலாம் சங்கிலியன், போர்த்துக்கேயரை எதிர்க்க, தென்னிந்தியப் படையணி ஒன்றை வயாவிளானின் நிறுத்தினான் என்ற வரலாற்று நிகழ்வு சான்றாகும்.

மக்களின்றிக் காடான வயவை மீள்குடியேற்றம் காண்பதைத் திரும்பிய வரலாறு எனவும் சொல்லலாம்.

பயணம் தொடரும்