ஒரு காலத்தில் குறுகிய ஒரு வட்டத்தில் மட்டும் நடமிட்ட பரதக்கலை, தேச விடுதலைப் பாடல்களுக்கும் தமிழுணர்வுப் பாடல்களுக்கும் பரதம் ஆடப்பட ஆரம்பித்த பின் பெருமவினரை சென்றடைந்தது. குறிப்பாக புலம்பெயர் தமிழர்களிடம் பரதம் பெரு விருப்பைப் பெற்றது.
நேர நெருக்கடிக்கு நடுவில் நேரம் ஒதுக்கி, பிள்ளைகளை பரத வகுப்புக்குக் கொண்டு போய் விட்டு, கஷ்டப்பட்டு உழைத்த காசை செலவிட்டு மேடை ஏற்றி பேரானந்தப் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் பலமான விருப்பு வாக்குகளுடன் ஆட்சி அமைத்தது பரதம்.
வேறெந்தக் கலையும் உட்புகாதவாறு மனப் புணைப்புக் காப்பரண்களைக் கொண்டிருந்த அத்தேசத்தில் தமிழ்மரபுக் கலைகளாக ஊரகக்கலைகளை (கிராமிய நடனக் கலை) போட்டியாக நடாத்த முடிவு செய்தது தமிழ் ஒளி தொலைக்காட்சி.
முடிவான கையோடு முதன்மையான மூன்று சவால்கள் பட்டியலிடப்பட்டது.
- போட்டியாளர்களை உள்ளிழுக்கும் சவால்
- போட்டிக்கான அனுசரணையாளர்களைத் தேடும் சவால்.
- பார்வையாளர்களை அழைத்து வரும் சவால்.
மூன்றையும் உடைக்க முத்தரப்பு மனங்களை வெல்ல வேண்டி இருந்தது. பயிற்றுனர், பிள்ளைகள், பெற்றோர் போன்ற முத்தரப்பினரும், நடைமுறையில் உள்ள போட்டிகளில் சில இடங்களில் அதிருப்தியுடன் உள்ளமையை உணர்ந்து அத்தகு நிலை இப்போட்டியில் இராது என்பதையும் இப்போட்டி நடத்துனர்கள் வித்தியாசமானவர்கள் என்பதையும் காட்ட திட்டமிடப்பட்டது.
போட்டி நோக்கம், எதிர்கால திட்டம், போட்டி நடத்துனருக்குரிய நெறிகள், போட்டியாளர்களுக்குரிய நெறிகள், நடுவர்களுக்குரிய நெறிகள் என்ன ஒவ்வொருவருக்குமான, ஒவ்வொன்றுக்குமான நெறிகள் அடங்கிய 20 பக்க யாப்பு உருவாக்கப்பட்டது. அடுத்த கட்டமாக போட்டிக் குழுவை உருவாக்கும் கட்டத்தை தாண்ட முயலப்பட்டது.
கிராமிய நடனம் என்றதுமே எல்லாரும் நாலடி பின்னே போனார்கள். “எடுபடாது”, “படுதோல்வி அடையும்” என்ற புத்திமதிகள் பலரால் வழங்கப்பட, உங்களுக்காக வருகின்றோம் என்ற நால்வருடனும் யாப்புடனும் பயிற்றுனர்கள் சந்திக்கப்பட்டார்கள்.
போட்டிப் பொறுப்பாளர், போட்டி ஒருங்கிணைப்பாளர், மக்கள் தொடர்பாளர் போன்ற மூவர் அறிமுகப்படுத்தப்பட்டு போட்டி அறிமுகப்படுத்தியதும் அறுமுகங்கள் அரங்கேறின.
10% ஆதரவும் 90% எதிர்ப்பும் இருந்த போது யாப்பு வாசிக்கப்பட்டது. 90% எதிர்ப்பு 70% ஆகக் குறைந்தது. வாதப்பிரதி வாதங்கள், திருத்தங்களின் பின் 50:50 ஆனது. யாப்பு எனும் ஆயுதம் வெற்றிக்கான முதலடியை தந்த சந்தோசத்துடன் அடுத்த அடி வைக்கப்பட்டது.
பொறுப்பாளர், ஒருங்கிணைப்பாளர் இருவருமே தாள வாத்தியக் கலைஞர்கள் ஆதலால் சாதகமான கருத்துகளும் நடனமணிகள் இல்லையே என்ற பாதகமான கருத்தும் முன் வைக்கப்பட்டிருந்தது. மேலும் கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்விகள் அவர்களை கூர்மைப்படுத்த வேண்டிய தேவையையும் கூறின.
கிழக்கிலங்கை முன்னால் துணைவேந்தரும் இலண்டனில் வசிப்பவரும், கூத்து அடங்கலான ஊரகக்கலைகளை மீட்டெடுத்தவர்களில் ஒருவருமான பேரன்புக்குரிய பேராசானிடமும், இதே மதிப்புக்குரிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசனிடமும் உரையாடப்பட்டது. இருவரில் ஒருவரை சிறப்பு அழைப்பாளராக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இவ்விருவர் மூலமும் தமிழக தொடர்புகள் மூலமும் பெறப்பட்ட அறிவுகளின் அடிப்படையில் யாப்பு திருத்தப்பட்டு போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. வரவேற்பு எதிர்பார்த்தபடி கடுகளவே கிடைத்தது. விளம்பரமெனும் அடுத்த ஆயுதத்தை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
பயிற்றுனர்களில் ஆர்வமாக இருந்த நால்வரில் ஒருவரின் பிள்ளைகளை வைத்து அவசர கதியில் விளம்பரம் ஒன்று உருவாக்கப்பட்டது. அவ்விளம்பரம் நன்றாக இருந்தாலும் அடிக்கக் கூடியவாறோ நகர்த்தக் கூடியவாறோ இல்லை என்பதால் அடுத்த பயிற்றுனரின் கலைக்கூடத்தை வைத்து விளம்பரம் எடுக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. அதைப் பார்த்து விட்டு முதலாவதாக எடுத்த விளம்பரக் கலைக்கூடம் “நாங்கள் சாதரணமாக நினைத்து விட்டோம்.. எங்களை வைத்து மீண்டும் ஒன்றை எடுப்பீர்களா” என்று கேட்டதும் வெற்றி வெற்றி என்றது மன மணி ஓசை..
அதன் பின் தொற்றிக் கொண்ட உற்சாகத்துடன் செலவே செய்யாமல் செய்த விளம்பரங்கள் பயிற்றுனர்கள், பிள்ளைகள், அனுசரணையாளர்கள், ஆர்வலர்கள், பெற்றோர்கள் என பல தரப்பு ஆதரவை திரட்டித் தந்தது.
இந்த விசையால் அரங்கம் நிரம்பி வழியும் வண்ணம் போட்டியை நடத்த முடிந்தது. மட்டுமல்லாமல் இன்று ஊரக நடனம் இல்லாத பிரான்சுக் கலைமேடை இல்லை எனும் அளவுக்கு ஊரகக்கலை இளையோர், பெரியோர் என்ற பாகுபாடின்றி அனைவர் விருப்பையும் பெற்றிருக்கிறது.
இப்போட்டி நிகழ்வு எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை தேவைப்பாட்டால் பின்பு பார்ப்போம். இப்போது பலரையும் மயக்கிய அந்த விளம்பர வீச்சுகளைக் காண்போம்..