இன்று உலகப் பெண்கள் நாள். மார்ச் 8 ஐ உலகப் பெண்கள் நாளாகப் பிரகடனப் படுத்திய ஆண்டு 1911 ஆகும். ஆனாலும் உத்தியோகப் பூர்வமாகக் கொண்டாடத் தொடங்கியது 1913 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் நாளே. இந்த நாள் தேவையா? இல்லையா என்று ஆளாளுக்குச் சர்ச்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
புரட்சியின் விளை நிலமாகிய பிரான்சில் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியின் போது பெண்கள் குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. பெண்கள் குரல் என்பதை விட பெண்பாட்டாளிகள் குரல் என்பதுதான் மிகவும் பொருத்தமானது. ஆம்.. அக்காலப்பகுதியில் ஆண்களை விடப் பெண்கள் குறைந்தளவு நேரமே வேலை செய்தார்கள். நேரம் மட்டும் அல்லாமல் சம்பளமும் சமமாக இருக்கவில்லை. மணித்தியாலம் ஒன்றுக்கு ஆணுக்குக் கொடுக்கும் சம்பளத்தை விட பெண்ணுக்குக் கொடுக்கும் சம்பளம் குறைவாக இருந்தது. எனவே புரட்சியின் ஒரு பகுதியாகப் பாட்டாளிப் பெண்களின் சம உரிமைக் குரலும் எழ, பெண்களுக்கு மறுக்கப்பட்ட உயர் மட்டப் பணிகளில் அங்கத்துவம், சமூக உரிமைகள் போன்றனவும் சேர்ந்து ஒட்டு மொத்தா பெண்கள் குரலானது. அக்குரல் அடைந்த வெற்றியின் நினைவாகவே உலகப் பெண்கள் நாள் கொண்டாடடப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
பெண்கள் நாள்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்; அவர்களுக்கு இப்படி ஒரு சிறப்பு நாள் தேவை இல்லை என்ற பெண்ணாதிக்க வாதங்களும், பெண்கள் சமூகத்தின் அங்கங்கள்; இந்நாள் கொண்டாட்டம் பெண்களை சமூகத்திலிருந்து பிரித்துக் காட்டுகிறது; இது கூட ஒரு வித அடிமைத்தனம்தான் என்ற பெண்ணிய வாதங்களும், அடிமை விலங்கை அறுத்த நாள்; கட்டாயம் கொண்டாட வேண்டும் எனும் பிரதி வாதங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.
என்னைப் பொறுத்தவரை இந்நாளைக் கொண்டாடுவதால் நேர்மறை எண்ணங்கள் தோன்றுமானால் மகிழ்வாகக் கொண்டாடுவோம். எதிர்மறை எண்ணங்கள் எழுமானால் கொண்டாடாதீர்கள். ஆண்கள் எம்மை அடிமையாக வைத்திருந்தார்கள்; வைத்திருக்க நினைப்பார்கள் என்று எந்தப் பெண்ணாவது இந்நாளில் வன்மம் வளர்த்தால் ஆணிவேரே ஆட்டம் கண்டுவிடும். எனக்குக் கீழ இருந்தவள்; இப்ப எனக்குச் சமமாக இருக்கிறாள்; எனக்கு மேல இருக்கிறாள் என்று எண்ணம் கொண்டாலும் அதே நிலமைதான். அப்படிப்பட்டோருக்கு இது இன்னொரு நாளாகக் கடந்து போகட்டும்.
பாடுபட்டுக் கிடைத்த சமத்துவம்; பழுதில்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று பெண்களுக்குத் தோன்றினால், தடல்ப்புடலாகக் கொண்டாடுவோம். இனி ஒருக்காலும் பழைய நிலைக்கு திரும்ப விடக்கூடாது என்று ஆண்மனசு சொன்னால் சரவெடிக் கொண்டாட்டமாக்கலாம். தமீழீழ மண்ணில் பிறந்தவர்கள் எல்லாருமே பெருங்கொண்ட்டாட்டமாகக் கொண்டாடலாம். ஏனெனில் ஆண் பெண் பேதம் இல்லாத எழுச்சியைக் கண்டவர்கள் நாங்கள். இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுண்டு. எங்களில் பலர் “ஆணுக்கு நிகராக பெண்கள் எழுச்சி கொண்ட தமிழீழம்” என்று சொல்வார்கள். இது கூட நுட்பமான பழமைவாதம்தான். ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் எழுச்சி கண்ட தேசம் என்பதே பொருத்தமான பயன்பாடு.
இது தொடர்பாகத் தொடர்ந்து கதைக்கலாம்.
அதுவரை இந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.