போர்க்குணம் ஆறல் ஆகாது பாப்பா

557

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் பதிவை பதித்துவிட்டு அன்பர் ஒருவர் அலைபேசினார். 200மக்களோடு சேர்ந்து போராடாமல் போராளிகளை ஓரமாப் போய் போராடுங்கப்பா என்று சொல்வது சரியில்லை என்றார்.. சரி என்றேன். சரியா? சரியில்லையா? என்றார் மறுபடியுல்.. சரி.. சரி.. சொல்லு என்றேன்.. சட்டென்று வடிவேல் ஆயிட்டார்.. சப்பா… என்றார்..

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.

வேற கதைகள் கதைத்து விட்டு திரும்பவும் விடயப்பரப்புக்குள் நுழைந்தார்.. மக்களோடு சேர்ந்து போராளிகள் போராட வேண்டாம் என்கிறாய்.. அப்போ மக்கள் போராளிகளோடு சேர்ந்து போரடினால் என்ன நடக்கும் என்றார்.. சிறிது நேர மௌனத்துக்குப் பின் சொன்னேன்.. ஒட்டு மொத்த உலகமும் சேர்ந்து மக்களையும் போராளிகளையும் அழிக்கும்.

என்ன நினைத்தாரோ.. என்ன புரிந்து கொண்டாரோ.. நீ சரியான பாதையில்தான் போகிறாய் என்று சொல்லி விட்டு தொடர்பைத் துண்டித்தார்..

மக்களும் போராளிகளும் இரு தண்டவாளங்கள் போல. அந்த இரு தண்டவாளங்கள் சமாந்தரமாக இருக்கும் வரைதான் போராட்டம் எனும் பயணம் நிறைவானதாகவும் நிறைவை எட்டுவதாகவும் இருக்கும். ஈழத்தைப் பொறுத்தவரை எங்கள் வீரர்கள் அதை சரிவரச் செய்தார்கள் என்பதே என் கணிப்பு.

2009 இல் தாயத்தில் திட்டமிட்டு எங்கள் இனம் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரம்.. பனிப்புலமெங்கும் மக்கள் தன்னெழுச்சி கொண்டு வீதிக்கு வந்து அறப்போராட்டம் நடத்தினர். அவ்வழிப்பைத் தடுத்தக் கோரி நடைபெற்ற அப்போராட்டங்களில் மாணவர் சமூகம் கலந்து கொண்ட பிறகு எங்கள் விருப்பம் தமிழீழம்/ எங்கள் தேவை தமிழீழம்/எங்கள் தலைவர் பிரபாகரன் போன்ற போரொலிகள் ஒலிக்கத் துவங்கியது.

இவ்வகைப் போரொலிகள் தமிழர்தம் தாரக மந்திரம்.. உயிரின் ஓசை.. அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இராது.. ஆனால் எமது அந்த நேரத்துத் தேவை அதுவல்ல.. அங்கே கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருக்க வேண்டிய தாயகம் காப்பாற்ற வேண்டும். அதைத்தான், அதை மட்டும்தான் நாங்கள் முன்னிறுத்த வேண்டும். இதை அம்மாணவர் சமூகத்துக்குச் சொன்னபோது அவர்கள் அதை ஏற்கப் பின்னடித்தனர். இதையே ஒரு பிரெஞ்சுப் போராட்ட ஊக்குவிப்பாளர் கூறிய போது ஏற்றுக்கொண்டு சரியான பாதையில் அறப்போராட்டத்தின் சாரதியானார்கள்.

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் அண்மையில் நடந்த தூத்துக்குடிப் போராட்டத்திலும் மாணவர் இயக்கப் பிரதிதிகள் போராட்ட நெறிப்படுத்துனராகவோ போராட்ட ஒருங்கிணைப்பாளராகவோ செயற்பட்டிருக்கின்றார்கள். அவ்வியக்கங்களின் கொள்கைகளும் போராட்டக்களங்களில் தாக்கம் செலுத்தி போராட்டக் களங்களில் கலகச் சூழலை ஏற்படுத்த வாய்ப்பை நல்கின. இது தேவையில்லாத ஒன்று என்பதே என் நிலைப்பாடு.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக மட்டும் போர்முரசு கொட்டி இருக்க வேண்டும். தாமிர ஆலையை மூடுவதற்கு மட்டும் போர்க்குரல் எழுப்பி இருக்க வேண்டும். போராட்டத்தை நசுக்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது போராட்ட தந்திரங்களில் முக்கியமான ஒன்று.  எவை எல்லாம் போராட்டத்தைக் குலைக்க எதிரிக்கு வாய்ப்பை வழங்குமோ அதை எல்லாம் தவிர்த்திருக்க வேண்டும்.  வாய்ப்பை நாங்கள் வழங்கி விட்டு தமிழக அரசை நோக்கியும், நடுவண் அரசை நோக்கியும் தமிழக மக்கள் குற்ற விரல் நீட்டுவது நியாயம் அன்று.

அதற்கான அவ்வரசுகள் செய்தது சரி என்று அர்த்தம் அல்ல. அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கிய நாங்களும் போன உயிருக்கு பதில் சொல்ல வேண்டியவர்களதான். இதனால் நடக்கப் போவது மக்களாகிய எங்களுடைய போர்க்குணம் அற்றுப் போதலே. இதை மிகவும் காத்திரமான முறையில் பதிவு செய்ய வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை என்றே கருதுகிறேன்.

நம்மை நாமே செதுக்குவோம்.