மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.

571

தமிழகத்தில் மக்கள் மயமான இரு போராட்டங்கள் அண்மையில் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் அர்த்தம் மக்களாகிய நாம் தோற்று விட்டோம் என்பதல்ல. ஆனால், இந்த வன்முறை எங்கள் மனதில் படர்த்திய மரணபயத்தால், எங்கள் போர்க்குணம் காணாமல் போகுமாயின், அப்போதான் நாம் உண்மையில் தோற்கின்றோம். போர்க்குணம் அழியாமல் பேணப்பட வேண்டுமானால் நாம் விட்ட தவறுகளைக் கண்டறிந்து திருத்திக் கொண்டு மாற்று வழி காண வேண்டும்.

மக்கள் போராட்டத்தை நாங்கள் நசுக்கவில்லை; மக்கள் போராட்டங்களில் கலந்த சமூக விரோதிகளால் சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றே அடக்குமுறையாளர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் கூற்றில் கபடத்தனம் உண்டு. ஆனால் அக்கூற்றை அவர்கள் பயன்படுத்த, தங்கள் வன்செயலை  அவர்கள் ஞாயப்படுத்த நாங்களே வாய்ப்பு வழங்கி உள்ளோம்.

எங்கள் மீது திணிக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைக்கு எதிராகவும் அறச்சீற்றம் கொண்டோம். எழுச்சி கண்டோம். ஒன்று திரண்டோம். அறப்போர்க்கோலம் பூண்டோம். எங்கள் போர்நோக்கம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஆலையை மூட வேண்டும். நோக்கத்தை விட்டு இம்மியும் விலகாமல் உறுதியாக களத்தில் நின்றோம். எங்கே தவறினோம்.

எங்களோடு கலந்து போராட வந்தவர்களில் ஒரு பகுதியினர் அரசியல்வாதிகள் என்றார்கள். ஆதாயம் தேட வந்தீர்களோ.. போங்கள் என விரட்டினோம். இன்னொரு பகுதியினர் போராளிகள் என்றார்கள். நம்பிக்கையோடும் மகிழ்வோடும் கட்டி இணைத்துக்கொண்டோம். அந்த நேரம்தான் நாங்கள் தவறிழைத்த தருணம்.

நாங்கள் ஜல்லிக்கட்டு உரிமைக்காகப் போராய களத்தில் அவர்கள் எங்கள் எல்லா உரிமைக்காவும் போராடினார்கள்; ஆரியத்துக்கு எதிராகப் போராடினார்கள்; காவிக்கு எதிராகப் போராடினார்கள்; மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.

நாங்கள் ஆலையை மூடுங்கள் எனப் போராடிய இடத்தில் அவர்கள் முதலாளித்துவத்துக்கு எதிராகப் போராடினார்கள்; திராவிடக் குடும்பத்தின் சகோதரத்துக்கு எதிராகப் போராடினார்கள்; காவிக்கு கறுப்புக் கொடி காட்டினார்கள்; மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாநில, மத்திய அரசுகளுக்கு எதிராகப் போர்க்கொடி காட்டினார்கள்.

கூராக்கிக் கூறினால் நாம் புரட்சி செய்தோம்.. அவர்கள் கிளர்ச்சி செய்தார்கள். கிளர்ச்சியாளர்கள் எப்போதும் சமூக விரோதிகளாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சமூகக்களைகளாகவே வரிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் அழிக்கபட வேண்டியவர்களாவே அடக்குமுறையாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளர். எங்களுக்குப் பக்கத்தில் வைத்து அவர்களை அழித்தார்கள். அதனால் எங்கள் போர்க்குணம் பொசுங்கும் என்று கனவு காண்கின்றார்கள். பலிக்க விடலமா?

மக்களணி, செம்மையணி, கருமையணி,இன்னபிற அணியெனத் தனியனாக படை நகர்த்தி, திக்கெட்டும் இருந்து அடக்குறையாளர்களை முற்றுகைக்குள் கொண்டு வருவோம்.

பொது மக்கள் நாம் எங்கள் வழியில் போராட, போராளிகள் வேறு வேறு இடங்களில் மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் அவர்கள் வழியில் போராடினால் வெற்றி என்ற ஒற்றைப் புள்ளியில் மீண்டும் நாம் சந்திக்கலாம்.