அமைதி வில்லன் : ஹெப்படைட்டிஸ் C

431

சேகர் : வணக்கம் டாக்டர்!

டாக்டர் அருள் : வணக்கம், உட்காருங்க!

சே: என் பேர் சேகர் டாக்டர்; வயசு 28.

டா: சொல்லுங்க, என்ன பிரச்னை உங்களுக்கு?

சே: நான் ஒரு சா·ப்ட்வேர் என்ஜினியர் டாக்டர். துபாய் போக பாஸ்போர்ட், விசா எல்லாம்
ரெடி ஆகி, இந்த மாசம் மெடிக்கல் செக்கப்புக்கு பாம்பே போனேன். அங்க ப்ளட் டெஸ்ட்
பண்ணதுல, இந்த ஹெப்பட்டைடிஸ் C பாஸீட்டீவ்னு ரிப்போர்ட் வந்து அன்·பிட் பண்ணிட்டாங்க.
ஆக்சுவலா நான் ரொம்ப ஹெல்த்தியா இருக்கன் டாக்டர். எனக்கு மஞ்சள் காமாலையே வந்தது
இல்லை. சின்ன வயசில் கூட. அப்புறம் எப்படி டாக்டர்…

என் ·பியூச்சரே இதுனால ஒரு கேள்விக்குறியா இருக்கு டாக்டர். அம்மா -அப்பால்லாம் ரொம்ப
·பீல் பண்றாங்க. உங்களைப் பத்தி ·பேமிலி ·பிரண்ட் சொல்லி , நம்பிக்கையோட வந்திருக்கன்
டாக்டர்.. சரியாகிடுமில்ல..? நான் திரும்ப விசா கிடச்சி , துபாய் போயே ஆகணும் டாக்டர்…

டா: ம்ம் சேகர், முதல்ல அந்த ரிப்போர்ட்டை காண்பிங்க..
ம்ம்ம்.. இந்த வைரஸ¤க்கான எதிர்புரதம் ( antibody assay) அளக்கும் சோதனைகள்
பிழையா வர வாய்ப்பிருக்கு.
… அதனால முதல் தலைமுறை, அடுத்து இரண்டாம் தலைமுறைன்னு பிழை
கம்மியான தரமான இரத்தச்சோதனைகள்தான் பண்ணி இருக்காங்களான்னு
பாக்கிறதுதான் முதல் ஸ்டெப்.

உங்களுக்கு இரண்டும் பண்ணி இருக்காங்க.
எலிசா (ELISA) முதல் தலைமுறை. கொஞ்சம் இது இல்லாதவங்களுக்கும்
இருக்காப்ல ரிஸல்ட் தரும் . அதால் இது பாஸீட்டீவ்னா அடுத்து …
ரிபா (RIBA) இரண்டாம் தலைமுறை.

உங்கள் இரத்தத்தில் இரண்டு டெஸ்ட்டுமே பாஸீட்டீவ்வா இருந்திருக்கு.
நல்ல தரமான லாபில் செய்யப்பட்டதால் நம்பலாம்.
இது உங்கள் உடல் சி வைரசை சந்தித்திருக்கு என்பதற்கான அடையாளம். அவ்ளோதான்.
உடம்பில் இன்னும் வைரஸ் இருக்குன்னு நிரூபிக்க சி வைரஸின் ஆர். என் ஏ. (RNA) -வை
நேரடியாய் அளந்து பாக்கணும். இதோ அதுவும் செய்திருக்காங்க. ம்.. அதுவும்
பாஸீட்டீவாய்த்தான் இருக்கு.
ஸோ, உங்களுக்கு ஹெப்பட்டைடிஸ் சி இருப்பது உண்மைதான்.

சே: இதுக்கு என்ன ட் ரீட்மெண்ட் டாக்டர்… எவ்வளவு செலவானாலும் பரவால்ல..
இதைக் க்ளியர் பண்ணி என்னை க்யூர் ஆக்கிடுங்க..ப்ளீஸ்..

டா: முதல்ல, இந்த வைரஸ், அதன் தன்மை, பாதிப்பு பத்தி பேசலாம்.
அப்புறம் உங்கள் உடல் நிலை எந்த அளவில் இந்த வைரஸால் பாதிச்சிருக்கு,
எந்த வகை சிகிச்சை அதிக பலன், குறைந்த பாதகம் தரும்னு ஆலோசிக்கலாம்.
அதன் செலவு எவ்வளவுன்னும் யோசிக்கலாம். சரீங்களா?

சே: சரீங்க டாக்டர்.. சொல்லுங்க.

டா: பிரத்தியேகமா கல்லீரலை குறிவச்சு தாக்குற வைரஸ்களை ஹெப்பட்டைடிஸ்
வைரஸ்கள்னு சொல்றோம். இதில் நான்கு பேர் முக்கியமானவங்க.

ஏ -வும், இ -யும் அசுத்த நீர், உணவு வழியா வர்றவங்க. குடலில் நுழைந்து ஈரலை
அவசரமா அதீதமா பாதிச்சு மஞ்சள் காமாலை, பசி இல்லாமை, சாப்பாடு தாளிக்கும்
வாசம் வந்தால் கூட குமட்டல், இப்படி தம்மை தைரியமா வெளிப்படுத்திக்கக் கூடியவங்க.

நோய்க்குறீடுகள் ஒரு கிருமியால் அதிகம் வெளிப்பட்டாலே, நம் உடலின் எதிர்ப்புச் சக்தி
(இம்மியூனிட்டி – Immunity), அந்தக் கிருமியோடு ஜரூரா சண்டை போட ஆரம்பிச்சான்னு
அர்த்தம். சண்டைன்னு வந்தாலே வெற்றி -தோல்வியில்தான் முடியும் இல்லீங்களா?

இந்த வைரஸ் ஏவும் இயும் பொதுவா சில வாரங்களில் முழுதுமாய் நம் போர்வீரர்களால்
வெல்லப்படும்.கொல்லப்படும். 99.9 சதம் ஜெயம் நம்ம பக்கந்தான்.

லேசான காய்ச்சல், வாந்திபேதி, உடல்வலிக்குப்பிறகு நம்மை தாக்கும் மஞ்சள் காமாலைகளில்
அருதிப்பெரும்பான்மையும் இந்த வகைதான்.

தானாகவே நாம் இதை சரிப்படுத்தி விடுவோம். இந்த வகை காமாலைகள்தான்
என்னோட “நாட்டு மருந்தால்” குணமாச்சுன்னு பல பேர் பொழைக்க வைக்கும் வள்ளல்.

ஏ -வும், இ -யும் அபூர்வமா சாவில் கொண்டு விடலாம். கர்ப்பிணிகள், வேறு காரணங்களால்
நம் நோய் எதிர்ப்பு குறைந்திருப்பது ( Immune Deficiency) இப்படி…
சாதாரணமா நல்ல உடல் நிலையில் உள்ளவருக்கு – பொதுவாய் ஸ்கூல் பிள்ளைகளுக்குத்தான் –
ஐஸ்கிரீம், கழுவாத நாவல் பழம்…போல இன்ட்ட்ரவல் சந்தோசங்களால் – இது அதிகம் வரும்.

இந்த வைரஸ்கள் முற்றிலுமாக விரட்டப்படும் நம்மால், மீண்டும் தாக்காது.
ஈரலுக்கு நீண்ட நாள் பாதிப்பு எதுவும் இருக்காது….

அடுத்த குரூப் B மற்றும் C…

இவை ரத்தம், விந்து , கர்ப்பம் மூலம் சிசுவுக்கு பரவுவதால்…
குருதிப்புனல் வழி – Serum (பரவும்) ஹெப்பட்டைடிஸ் என்று கூட்டாக
அழைக்கப்பட்டன முன்பு..

இப்போது இரண்டு நீண்ட நாள் ( CHRONIC) வில்லங்களையும்
தனித்தனியே நாம் அடையாளம் கண்டு கொண்டதால்
உரிய மரியாதை கொடுத்து சி. என்றும் பி என்றும் அழைக்கிறோம்.

வீட்டுக்குப்போய் படிச்சுக்குங்க.. சரியா..

இப்ப உங்களை பாதிச்ச சி வைரஸ் பத்தி விளக்கமா சொல்றேன்..
கவனமா கேளுங்க.. இடையிடையில் எந்த சந்தேகம் வந்தாலும்
தயங்காம கேளுங்க..

சின்ன தம்பி… ரெண்டு லெமன் ஜூஸ் கொண்டுவரீங்களா.. ப்ளீஸ்..
(கிளினிக் பாய் சி.த. ஜூஸ் கொண்டு வருகிறார், ..)

சி.த: வேற பேசண்ட் யாரும் வெய்ட்டிங்கில் இல்ல சார்.. பொறுமையா
பாருங்க இவரை…

டா: சின்ன தம்பி.. நீங்க உடனே முனைக்கடைக்கிப்போயி..

சி.த: கோல்ட்பிளேக் கிங்ஸ் ஒரு பாக்கிட்டும், பெரியவர் சிறியவர் அனைவரும்
விரும்பும் நிஜாம் பாக்கும் வாங்கியாரவா சார்?

டா: ஹாஹ்ஹா.. நல்ல காமெடியான ஆளு நம்ம சின்னதம்பி…
முனைக்கடைக்குப்போயி இன்னிக்கு ஜூ.வி. வந்திருக்கும் வாங்கியாங்க..

சி.த: ஆமாம் சார், இந்த ஒரு பேசண்ட்டும் போயிட்டா அப்புறம்
டைம் பாஸ் பண்ணனுமில்ல…

(சி த. ஒருவழியாய் கடைக்குப் போக, ஆலோசனை உரையாடல்
தொடர்கிறது…)