நாள் : 52
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
செய்யுள் :2
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
இப்போது போன செய்யுளில் சொன்னதில் முதல் வரியை மிக அழுத்தமாக மீண்டும் சொல்கிறார் வள்ளுவர்,
மனை மாட்சி – வீட்டிற்கேற்ற பண்பு, குடும்பத்திற்கேற்ற குணம் இது இது சிறந்த குணம் என வள்ளுவர் பிரித்துச் சொல்லாததின் காரணம் அவர் பல குலங்கள், மதங்கள், இனங்கள் கண்டு பட்டறிவு பெற்றவராக இருப்பதைக் காட்டுகிறது.
மிகச் சிறந்த குணம் அன்பு. அதை இல்லறத்தின் பண்பாக வைத்தார் வள்ளுவர். அது அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒன்று. மற்றபடி கொல்லாமை சில குடும்பங்களில் சிறப்பு. விடைக் கோழி விருந்து சில குடும்பங்களில் சிறப்பு.. சிக்கனம் சில வீடுகளில் சிறப்பு, வாரி வழங்குதல் சில் வீடுகளில் சிறப்பு. ஆகவே மனை மாட்சி என்பது என்ன என அறியாதவர்கள் இருக்க முடியாது. பிறந்ததிலிருந்து இதெல்லாம் நம் பெருமைக்குரிய இயல்புகள் எனத் தாயும் தந்தையும் பாட்டனும் பாட்டியும் நமக்குச் சொல்லியே வளர்த்திருக்கிறார்கள். அந்தப் பண்புகள் என்ன என்ன என முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
பின்பு அந்தப் பண்புகள் உடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அது குடும்பத்தை உயர்த்தும். அப்படிப்பட்ட குணங்கள் இல்லத்து வருவாரிடம் இல்லாது போனால் எவ்வளவு பெருமைகள் அடைந்தாலும் மனதில் ஒரு வெறுமை இருந்து கொண்டே இருக்கும்.
கோடி கோடியாக பணமிருந்தும், சுற்றிப் பல நண்பர்கள், சொந்தங்கள் இருந்தும், ஆயிரம் பெருமை இருந்தும் பலரின் வாழ்க்கை வெறுமையாக உணர்வதைக் கண்டிருக்கிறோம். அதன் காரணம் இதுவே என வள்ளுவர் சொல்கிறார்.
குடும்பத்தின் சிறப்புப் பண்புகள் யாரிடம் உள்ளனவோ அவரை துணையாக்கிக் கொள். வாழ்க்கை நிறைவாய் இருக்கும். இல்லாவிடில் வெறுமையாகும்.
ஒருவேளை இந்த இரு செய்யுள்கள் சரியாக உரை சொல்லப்பட்டு மக்கள் கடைபிடித்திருந்தால், இன்று விவாகரத்துகள் இருந்திருக்காது.