26.6 C
Jaffna
Tuesday, December 3, 2024

மரபுக்கவிதை எழுதுவது எப்படி – பாகம் – 06

597

4. தளை

எழுத்துக்கள் சேர்வதால் அசை உண்டாகிறது. அசைகள் சேர்வதால் சீர்கள் அமைகின்றன.
இவற்றுள் சீர்களுக்குள்ளே இடையில் ஏற்படும் ஒலி உச்சரிப்பே தளை என இலக்கணத்தில் பேசப்படுகிறது.
அதாவது, சொற்களின் இடையில் காணப்பெறும் ஒலிக்கூற்று இது. இத்தகைய ஒலி ஒழுங்கினை யாப்பிசை எனவும்
கூறலாம். சந்த இனிமை என்று கூறுவதும் உண்டு.
கவிதையின் அமைப்பிற்குச் சந்தம் விளங்கும் தன்மையே மெருகை உண்டாக்குகின்றது.

கவிதைகளுக்குள் சீர்கள் அடிப்படை. சீர்களைக்கொண்டு அமையப்பெறும் கவிதைகளை வடிவம்பெறச் செய்வது தளை என்பதே. ஒவ்வொரு
பா வகையும் அவை பெறுகின்ற தளைகளின் அமைப்பைச் சார்ந்தே தனித்துவம் பெறுகின்றன.

பாவினத்திற்கு உரிய தளைகள் கொண்டு சீர்கள் அமைதல் வேண்டும் என்பதாம். ஒரு பாவினத்திற்கு
உரியதல்லாத தளை ஆங்கு அமையப்பெற்றால் அறிஞர் பெருமக்கள் அவற்றைத் தளை தட்டுகிறது என்று கூறி ஏற்றுக்
கொள்வதில்லை.

ஒவ்வொரு பா இனத்திற்கும் தனித்தனியே தளைகள் உண்டு. இத்தன்மையில்,
1. ஆசிரியப்பா அமைதல் வேண்டும்.
2. வெண்பா அமைதல் வேண்டும்.
3. கலிப்பா அமைய வேண்டும்.
4. வஞ்சிப்பா அமைய வேண்டும்.

எனவே, ஒரு சீரினை அடுத்துவரும் பிறிதொரு சீரினைக்கொண்டு தளையைக் கணக்கிட வேண்டும்.
இன்ன தளையுடையது இன்ன பா என்று இலக்கண நூலார் வகுத்தவாறு கொள்ளவேண்டும். இப்போது
அத்தகைய தளைகளைப் பற்றிச் சிறிது காண்போம். அதற்கு முன்னர் ஒரு முக்கிய உண்மையை மனதில் இருத்திக்
கொள்ள வேண்டும்.

முக்கியக் குறிப்பு:-
பொதுவாக “முன்” என்னும் சொல்லை ஒரு சொல்லுக்கு முன்னால் வந்த சொல்லென்றே கருதுவார்கள்.
புற நானூற்றில் ஒரு பாடல்,
ஒருநாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
பலநாள் பயின்று பலருடன் செல்லினும்”
இதில்,
இருநாள் செல்லலம் என்ற தொடருக்கு முன்னதாக ஒருநாள் செல்லலம் என்ற தொடர் உள்ளது என்று கூறுதல்
வழக்குமுறை. ஆனால் இலக்கணத்தில் நிலைமொழி என முதற்சொல்லையும் வருமொழி என அடுத்து வரும் சொல்லையும்,
ன்றோர்கள் குறித்துள்ளார்கள். எனவே இக்கருத்தின்படி ஒரு நாள் செல்லலம் என்பதன் முன்னால் இரு நாள் செல்லலம்
என்பது வந்ததாகக் கொள்ளுதல் வேண்டும்.
நாம் எழுத்துக்களை முன்னோக்கி எழுதுகின்றோம். எனவே ‘வணக்கம்’ என்னும் சொல்லை எழுதும்போது ‘வ’ என்ற எழுத்தும்,
அதற்கு முன்னே ‘ண’ என்னும் எழுத்து வருமாறும், அதற்கு முன்னே ‘க்’ என்னும் எழுத்து வருமாறும், அதற்கு முன்னே ‘க’ என்னும்
எழுத்து வருமாறும், அதற்கு முன்னே ‘ம்’ என்னும் எழுத்து வருமாறும் எழுதுகிறோம். இவையாவும் பின்னோக்கி எழுதப்படுவதில்லை.
எனவே யாப்பிலக்கணத்தில் முன் என்று கூறப்படுதல் என்பது, ஓரெழுத்தை அடுத்து வரும் எழுத்து என்று கொள்ள வேண்டும்.

தளைகளை இரண்டாகப் பிரிக்கலாம்.
4.1. ஒன்றிய தளைகள்
4.2. ஒன்றாத தளைகள்
அதாவது நேர் முன் நேரும், நிரை முன் நிரையும் ஒன்றி வந்தால் அவை ஒன்றிய தளைகள் என்றும்
வெவ்வேறாக மாறி வந்தால் ஒன்றாத தளைகள் என்றும் வகைப்படும்.
4.1. ஒன்றிய தளைகள்
4.1.1. நேரொன்று ஆசிரியத் தளை
4.1.2. நிரையொன்று ஆசிரியத் தளை
4.1.3. வெண்சீர் வெண் தளை
4.1.4. ஒன்றிய வஞ்சித்தளை
ஆகியவையும்
4.2. ஒன்றாத தளைகள்
4.2.1. இயற்சீர் வெண் தளை
4.2.2. கலித்தளை
4.2.3. ஒன்றாத வஞ்சித்தளை
ஆகியவையும் மொத்தம் ஏழு வகையான தளைகள் உள்ளன.

இவைகளைப்பற்றி விரிவாகக் காண்போம்.

4.1.1. நேரொன்று ஆசிரியத் தளை:-
ஈரசைச் சீர்களில் நேர் முன் நேர் வருவது, அதாவது நிலைமொழியின் கடைசி அசை நேராகவும்
வரும்மொழியின் முதல் அசை நேராகவும் இருப்பது நேரொன்று ஆசிரியத் தளை எனப்படும்.

எ.டு:-
பல்சான் றீரே பல்சான் றீரே
நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமா தேமா தேமா தேமா
நேர் முன் நேர் வந்ததால் ஒன்றிய ஆசிரியத் தளை ஆயிற்று.

4.1.2. நிரையொன்று ஆசிரியத் தளை:-
இதுவும் ஈரசைச்சீரில் நிரை முன் நிரை வருவதால் நிரையொன்று ஆசிரியத்தளை எனப்பட்டது.
எ.டு:-
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
நிரை நேர் நேர் நிரை நிரை நிரை நிரை நேர்
புளி மா கூவிளம் கருவிளம் புளி மா
நிரை முன் நிரை வந்ததால் ஒன்றிய சிரியத் தளை யிற்று.

4.1.3. வெண்சீர் வெண்டளை:-
காய்ச்சீர் முன்னால் நேரசை வருவது வெண்சீர் வெண்டளையாகும்.
எ.டு:-
மல்லிகையே வெண்சங்கா வண்தே
நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாங்காய் தேமாங்காய் தேமா

4.1.4. ஒன்றிய வஞ்சித்தளை:-
நேரசையில் வரும் காய்ச்சீரை வெண் சீர்நிரையசையில் வரும் கனிச்சீரை
வஞ்சிச் சீர் அல்லது வஞ்சி உரிச்சீர் என்று உரைக்கப்படும்.
‘காய்ச்சீர்’ என்றாலும் ‘கனிச்சீர்’ என்றாலும் அவை மூவசைச் சீர்களே. இவற்றுள் கனிச்சீர் முன்னே நிரையசை
வருவது ஒன்றிய வஞ்சித்தளையாகும்.
எ.டு:-
கூறாமொழி கொடுங்கூற்றென
வாராதொழி மடநெஞ்சமே – இதில்
கூ றா மொழி கொடுங் கூற் றென
நேர்| நேர்| நிரை நிரை| நேர்| நேர்
தேமாங்கனி புளிமாங்கனி

வா ரா தொழி மட நெஞ் சமே
நேர்| நேர்| நிரை நிரை| நேர்| நேர்
தேமாங்கனி புளிமாங்கனி

இனி ஒன்றாத தளைகளைப்பற்றி பார்ப்போம்.

4.2.1. இயற்சீர் வெண்டளை:-
இது ஈரசைச் சீர்கள் ஒன்றையொன்று அடுத்து வரும்போது ஒன்றாத அசைகளால் வரும் ஒலி நயமே
‘இயற்சீர் வெண்டளை’ எனப்படுகிறது.
எ.டு:-
ஈயென இரத்தல் இழிந்தன்(று) அதன்எதிர்
கூவிளம் புளிமா புளிமா கருவிளம்
நேர்| நிரை நிரை| நேர் நிரை| நேர் நிரை| நிரை
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
தேமா தேமா கருவிளம் புளிமாங்காய்
நேர்| நேர் நேர்| நேர் நிரை| நிரை நிரை| நேர்| நேர்
நேரசையின் முன்னால் நிரையசை வந்ததால் இது ‘இயற்சீர் வெண்தளை’ கும்.
இதே போல் நிரையசை முன்னால் நேரசையும் வரும்.
எ.டு:-
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
கூவிளம் கருவிளம் தேமா தேமா
நேர்| நிரை நிரை| நிரை நேர்| நேர் நேர்| நேர்
தினையனைத்(து) யினும் இனி(து)அவர்
கருவிளம் கூவிளம் கருவிளம்
நிரை| நிரை நேர்| நிரை நிரை| நிரை
துணையள(வு) அறிந்து நல்கினர் விடினே
கருவிளம் புளிமா கூவிளம் புளிமா
நிரை| நிரை நிரை| நேர் நேர்| நிரை நிரை| நேர்

மேற்குறித்த பாடலில் கோடிட்ட இடத்தில் நிரை முன் நேர் வந்து ‘இயற்சீர் வெண்தளை’ னதைக்காணலாம்.

4.2.2. கலித்தளை:-
காய்ச்சீர் வெண்பா உரிச்சீர் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே! காய்ச்சீரின் முன்னால் நிரையசை
வருமானால் அது கலித்தளை வருதலாம்.
எ.டு:-
அரனதிகன் உலகளந்த அரியதிகன்
கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
நிரை| நிரை| நேர் நிரை| நிரை| நேர் நிரை| நிரை| நேர்
என்றுரைக்கும் அறிவிலார்க்குப்
கூவிளங்காய் கருவிளங்காய்
நேர்| நிரை| நேர் நிரை| நிரை| நேர்
பரகதிசென்(று) அடைவரிய பரிசேபோல்
கருவிளங்காய் கருவிளங்காய் புளிமாங்காய்
நிரை| நிரை| நேர் நிரை| நிரை| நேர் நிரை| நேர்| நேர்
புகலரிய பிண்பிற்றாமல்
கருவிளங்காய் தேமாந்தண்பூ
நிரை| நிரை| நேர் நேர்| நேர்| நேர்| நேர்

குறிப்பு :-
காய்ச்சீர் முன்னால் நேரசை எனவும்
கனிச்சீர் முன்னால் நிரையசை எனவும்
அழைக்கப்படும். இவை, மூவசைச்சீர் கொண்டு வரும்.

4.2.3. ஒன்றாத வஞ்சித் தளை:-

கனிச்சீர் வஞ்சிப்பா உரிச்சீர் என்பதும் நாம் முன்பே கண்டதே!
கனிச்சீர் முன் நேரசை வருவது ஒன்றாத வஞ்சித்தளையாகும்.

எ.டு:-
பாடுங்கிளி வாராமுனம் நாடுங்கனி சேர்காதலர்
தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி
நேர்| நேர்| நிரை நேர்| நேர்| நிரை நேர்| நேர்| நிரை நேர்| நேர்| நிரை

இதுவரை 7 தளைகளைப்பற்றிப் படித்தோம்.
ஒரு மீள்பார்வைப் பார்ப்போமா?

ஒன்றிய தளைகள்
1. நேர் ஒன்றிய ஆசிரியத் தளை – ஈரசைச்சீர்
=> மா முன் நேர் அசை வரும்.
2. நிரை ஒன்றிய ஆசிரியத் தளை – ஈரசைச்சீர்
=> விளம் முன் நிரை அசை வரும்.
3. வெண்சீர் வெண்டளை – மூவசைச்சீர்
=> காய் முன் நேரசை வரும்.
4. ஒன்றிய வஞ்சித் தளை – மூவசைச்சீர்
=> கனி முன் நிரை அசை வரும்.
ஒன்றாத தளைகள்
1. இயற்சீர் வெண்டளை – ஈரசைச்சீர்
=> மா முன் நிரை அசையும்
=> விளம் முன் நேர் அசையும் வரும்.
2. கலித்தளை – மூவசைச்சீர்
=> காய்முன் நிரையசை வரும்.
3. ஒன்றாத வஞ்சித்தளை – மூவசைச்சீர்
=> கனிமுன் நேர் அசை வரும்.
(தொடரும்…)