ஒட்சியைக் கொன்றது யார்?

416

1991 ஆம் ஆண்டு வட இத்தாலிக்குட்பட்ட அல்ப்ஸ் மலைத்தொடரில், பனிப்பாறைகளுக்கு நடுவில் இறந்த மனிதனின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒட்சி எனப் பெயரிடப்பட்ட இம்மனிதனின் உடலம் பனிப்பிரதேசத்தில் இருந்தமையால் இயற்கையால் பதப்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ள தோற்றுவாய்களை கொண்டிருந்தது.

இற்றைக்கு 5300 ஆண்டுகளுக்கு உட்பட்ட மனிதன் என ஆராய்ச்சியாளர்களால் அடையாளப்படுத்தப்பட்ட இப்பனி மனிதன் தமிழன் என்ற ஆதாரதப்படுத்தல் இணைய உலகின் ஆராய்ச்சியாளர்களால் ஆயப்பட்டுக்கொண்டிருக்க, இம்மனிதனின் உடலம் டைரொல் தொல்லியல் நிலையத்தில் காக்கப்பட்டு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

உலகில் உள்ள மிகப் பழைமையான பதப்படுத்தப்பட்ட உடலமாக அறியப்படுகின்ற ஒட்சி கடையாக உண்ட உணவில் பழங்காலக் கோதுமையும், மான் இறைச்சியும், ஆட்டி இறைச்சியும், சில இலை தழைகளும் கலந்துள்ளமையை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதை விடப் பெரு வியப்பு என்ன எனில், ஒட்சியின் இடது தோளின் பின்புறம் அம்பு நுனி ஒன்றிருப்பதைக் கண்டறிந்த ஆராச்சியாளர் குழு, பின் புறமிருந்து அம்பினால் தாக்கப்பட்டு ஒட்சி கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.

இப்புதினமான புகாரை ஏற்ற காவல் துறையும், தொல்லியல் துறையும் இணைந்து கொலையாளியை கண்டு பிடிக்க முழுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் முயற்சியின் பலனாக கொல்லப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் மான், ஆடு போன்ற மாமிசங்களையும், கோதுமையை ஒத்த தானியத்தையும், இலை வகையையும் ஒட்சி உண்டிருப்பதை இவ்விரு சாராரும் கண்டு பிடித்துள்ளனர்.

அதே போல் ஒட்சியின் வலது கையில் காயம் ஒன்றையும் கண்டுள்ளனர் இக்குழுவினர். அம்பினால் தாக்கப்படுவதுக்கு சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட இக்காயத்தை வைத்து காவல் துறை துப்புத் துலக்க தொடங்கியது.

முதலில் நேரடி தாக்குதலில் ஈடுபட்டதால் கையில் காயம் ஏற்பட்டதாகவும் அவ்வெதிரிகளே பின்னர் மறைந்திருந்து அம்பினால் முதுகில் தாக்கிக் கொன்றுள்ளார்கள் என்றும் தெரிவித்த காவல் துறை 5300 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட இக்கொலையின் கொலையாளிகளை கண்டு பிடித்தே தீருவோம் என உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

வியப்பும், விசித்திரமும் மிக்க இக்கொலை வழக்கு நகைப்பைத் தந்தாலும் பத்து ஆண்டுகளுக்கு முன் கொத்துக் கொத்தாகக் கொன்றவர்கள் தண்டிக்கடாமல் இருப்பது நினைவில் வந்து கண்ணை நனைப்பதை தவிர்க்க முடியவில்லை.