களமுனையில் தரித்த கானவியின் கருணைநதி.

போர்க்களத்திலும் போர்முனை வைத்திய சாலைகளிலும் 
ஓர் முன்னனி மருத்துவராக வீரநடைபோட்ட நங்கை கானவியின் இரண்டாவது நாவலாகிய “கருணைநதி” பிரென்சு மொழியில் வெளிவரவுள்ளது.

இந்த மகிழ்வான தருணத்தில் என் மனப்பறவை 22 ஆண்டுகள் பின்னோக்கிப் பறக்கிறது.

இந்த நாவலாசிரியர் கானவியை குயில் என்ற பெயருடன் அடியேன் முதன் முறை சந்தித்தது 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் இக்கட்டான போர்முனையில் ஆகும்.

1996 ஆம் ஆண்டு “சத்ஜய – 01” இராணுவநடவடிக்கை ஆரம்பித்த போது திடீரென ஓரிடத்தில் ஓர் குழுவாக களமருத்துவப்பணியை (Pre-Hospital Care) ஆரம்பிக்க வேண்டி இருந்தது.

சத்ஜய இராணுவநடவடிக்கை என்பது ஆனையிறவுப் பெரும் தளத்தில் நிலைகொண்டிருந்த இராணுவம் பெரும் ஆளணி வளத்துடன் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றும்
நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு படைத்தளத்தை தகர்த்தழித்த எமது படையணிகளில் பெரும்பாலனவை அந்த பிரதேசத்தை நிலைப்படுத்துவதற்காக வெடி பொருட்களை அகற்றுவதற்காகவும் 
அங்கே தளமிட்டிருப்பதை அனுமானித்திருந்தது.

எமது முன்னரங்க அணிகளைக் கடந்து 
சிங்களப்படை ஒரே நாளில் சிறிய எதிர்ப்புடன் எங்களின் பெரும் பகுதிக்குள் பிரவேசித்துவிட்டான்.

ஆம் , எதிரியின் இரகசிய திட்டத்தை 
நாங்கள் அறிந்து கொள்ள முன்னரே மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளுக்கு ஊடாக அவன் எங்களருகில் வந்து சண்டையைத் தொடங்கியிருந்தான்.

எதிரி கூப்பிடு தொலைவில் வந்துவிட்டான் என்பதை உணர்ந்த போது பதட்டத்தை அதிகரித்து மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய எங்கள் பணியை மென்மேலும் சிக்கலாக்கியது.

நாவலாசிரியர் அன்புச் சோதரி குயிலும் நானும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைப் (Paranthan Chemical Factory) பகுதியில் லெப்.கேணல் நீலன் தலைமையில் செயற்பட்டுக்கொண்டிருந்தோம்.

எங்களின் சிறு அணியில் 
மேஜர் சிந்தனைச்செல்வனையும் இணைத்துக் கொண்டோம்.

 அப்போது சிந்தனைச்செல்வன் மருத்துவப் பிரிவுக்கு புதிய போராளியாக இருந்தாலும் பதறாமல் சிதறாமல் களநிலைமைக்கு ஏற்ப விவேகமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

விழுப்புண் ஏற்றவர்களைச் சிகிச்சை அளித்தல், எம்மைத் தற்காத்தல், வாகனம் வரமுடியாத அந்த இடத்திலிருந்து அனைவரையும் தோள்மீது சுமந்து பின் நகர்த்தல் போன்ற பணிச்சுமைகள் கடலெனவே கண் முன் விரிந்து காணப்பட்டது.

அந்தக் களத்தின் நடுவே கவனம் இம்மியளவும் சிதறாமல் உற்சாகமாகப்பணி செய்தவர்தான் இந்தக் குயில் அல்லது கானவி!

எனக்கு திருமதி குயில் அவர்கள் அறிமுகமாகிய 
அந்த நாளில் இருந்து எங்கள் சோதரி குயில் இறுதிநாள் வரை அதேயளவு நெஞ்சுரத்துடனும் கருணையுடனும் பணியாற்றி வந்தார்.

தமிழீழ மருத்துவத்துறையின் மாத இதழான 
எழுகதிர் இதழுக்கு இதழாசிரியராக இருந்ததுடன் அதனை வெற்றிப் பாதையில் இட்டுச் 
சென்றதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

போரிலக்கியம் படைக்கும் பணியிலும் “கானவி” எனும் பெயரில் எங்கள் சோதரி குயில் தடம் பதித்தவர்.


 


2005 ஆண்டு 
 மருத்துவ மடியில் என்ற 13 சிறுகதைகள் அடங்கிய உண்மைச்சம்பவங்களின்தொகுப்பொன்றையும் தந்திருந்தார்.

உலகில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் படிக்கும் Harry Potter எனும் சிறுவர் நாவலைப் படைத்தவர் ஜே கே ரௌலிங் என்ற இங்கிலாந்துப் பெண்மணி.

அந்தப் பெண்மணியின் மனதில் கதை கருக்கொண்ட போது அவர் புகையிரத்திலேயே பயணித்துக் கொண்டிருந்தார். 


கதையின் கருவைக் குறித்துக் கொள்ள அவரிடம் கடதாசி ஒன்று கூட இருக்கவில்லையாதலால் கைதுடைக்கும் பேப்பரிலேயே (Hand Tissue) உடனடியாக எழுதி வைத்தார்.

Harry Potter தொடர் எழுதி உலகில் உள்ள பல கோடி மானுட உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்த பிரித்தானியாவின் 
ஜே கே ரௌலிங் 
போல எங்கள் குயிலும் “கருணைநதி கதை“யின் கரு மனதில் கருக்கொண்ட போது தனது பால்மா பெட்டியைக் கிழித்தெடுத்து அதிலேயே எழுதினார்.

காரணம் 
 “கருணை நதி”என்ற நாவலைப் படைக்கும் போது எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற பம்பைமடு தடுப்பு முகாமில் இருந்தார்.

ஜெ .கே. ரௌலிங்கின் 
“ஹரிப் பொட்டர் தொடர் நாவல்கள்” விற்பனையில் சாதனை படைத்தது. 
அதே போல 
நாவலாசிரியர் குயில் அவர்களின் நாவல்களும் அதிகம் அதிகம் வெளிநாட்டவர்களின் இதயங்களைத் தொடும் என்பது திண்ணம்.

தமிழர்களின் நீதிக்கான தேடலுக்கு இந்த நாவலும் துணை நிற்க வேண்டும்.

தமிழ் மண்ணின் “விளக்கேந்திய பெருமாட்டி”
 இன்றும் அதே வேகத்துடன் செயற்படுவதும் சிந்திப்பதும் ஓர் தெம்பையும் பெருமையையும் எங்களுக்குத் தந்து நிற்கிறது.

– வயவையூர் அறத்தலைவன் –