கடவுளரை யார் கண்டார் ..?

எங்கே?
தூணிலும் துரும்பிலும்
காற்றிலும் கடலிலும்
கல்லில் வடித்த சிலையிலும்
இருப்பார் என்றார்
நிசம் தான்
ஆம்!
எங்கள் நிலத்தில்
நாம் கண்டோம் .

எங்கள் வீடுகளில்
எங்கள் வீதிகளில்
எங்களோடு பள்ளியில்
ஒன்றாகத் கைகோர்த்து
கதை பேசி மகிழ்ந்தவர்கள்
கையில் கருவியோடு
காவலுக்கு நின்றார்கள்.

ஆம்! நாம் கண்டோம்

தங்கத்தில் கோபுரமில்லை
தங்க நகை ஏதும் அணிந்ததுமில்லை
மஞ்சள் பூசியதுமில்லை
மலரள்ளிச் சொருகியதுமில்லை
பட்டுக் கனவெல்லாம் விட்டுத்தள்ளி
இனம் பட்டுப் போகாமல்
பச்சையம் காத்த கடவுளர்கள் அவர்கள்

ஆம்! நாம் கண்டோம்

தீட்டு நாட்களிலும்
துன்புற்றுச் சோராமல்
துவக்கு தாழாமல்
எதிர்வரும் துயரழிக்க
இரவிலும் உறங்காமல்
உலவித் திரிந்தார்கள்
எங்கள் அம்மன்கள்.

ஆறுகாலப் பூசை
ஆராத்தி அர்ச்சனை
அபிசேகம் அலங்காரம்
எதை அவர்க்களித்தோம்
இருந்தும் அவர் எமக்காய்
தமையழி(ளி)த்தார்.

ஆம் !
மீட்பர்களோடு
மண்ணில் வாழ்ந்த வரமும்
மீதியரைக் கைவிட்ட சாபமும்
எங்களையே சாரும்.

“கார்த்திகை எங்கள் கடவுளரின் மாதம்”
க.குவேந்திரன்
01/11/2019