திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்
****************
மயிலேறி விளையாடி
மாங்கனிக்காக மலையேறி
உலகைச் சுற்றி வந்த
உமையாள் மகன் திருக்குமரனுக்கு
திருக்கல்யாணம் நேற்று.

தாய் கொடுத்த வேலுடுத்தி
வினையறுத்த மறுநாளில்
அழுதழுது குமைந்த இனப்
பகையழித்த பின்நாளில்
வள்ளியொடு தெய்வானையாய்
வீற்றிருந்த வேலவனை
போற்றித் தொழுதுப் பாக்கள்
இசைத்தேயின்பம் காணும்
நன்நாள் இதுவென்று
கண்களொற்றிக் கைகூப்பி
ஊரு கூடி நின்றது .
உமையாள் மகன் வடிவேலனுக்கு
திருக்கல்யாணம் நேற்று.

நானும் போயிருந்தேன்!

தெருவெல்லாம் தினம் ஓலம்
தீராது குலம் நோகப்
போர்க்கோலம் பூண்ட
எங்கள் முப்பாட்டன்
வெற்றிக்கொடி நிறுத்தி
மணக் கோலம் அமர்கையிலே
புலித்தாலி கட்டிய
புலிவீரர் திருமணங்கள்
கண்ணுக்கு முன்னாளே
வந்து வந்து போயின
அன்றவர் சிலரின் திருமணத்திற்கு
எந்தையும் தாயோடும்
நானும் போயிருக்கிறேன்

தலை வாசலில் பகையிருக்க
தாலியேந்த மாட்டேன் என்று
பெரும் வெற்றிகள் கண்ட பின்னே
சம்சாரிக்க சம்மதித்த
வேலாயுதக் கடவுளர்கள்!
எம்மண்ணில் எத்தனை எத்தனை பேர்?
கல்யாணக் கனவொறுத்தி
கருவிகள் ஏந்தி இன மானம் காத்தவரில்
இன்னும் கன்னி கழியாத கன்னியர்கள்!
எத்தனை எத்தனை பேர்?

பூவுக்குள் இருக்கும் வாசம்
நாருக்கும் பரவும் என்பார்
போருக்குள் புசித்த நஞ்சு
தொண்டை நாசிக்குள் கசக்குதின்னும்
நாடற்று நாதியற்று நாங்கள்
தொலைத்ததெல்லாம்
கைகூடிக் கிடைக்கும் வரம்
நீ தருவாய் வேலவனே!

க.குவேந்திரன்
04/11/2019