தமிழைத் தமிழாய்க் கற்போம் 2

473

இப்பதிப்பில் தனித்தமிழென்று கூறிய நானே பிறமொழிச் சொற்களை ஆங்காங்கே கையாண்டு இருக்கிறேன். அது உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கலாம். என்ன செய்வது? தமிழையும் தமிழரையும் அழித்தொழிப்பதற்காக நன்கு திட்டமிடப்பட்டுக் கொணரப்பட்ட ஆரியக் கல்வித்திட்டதுனூடாகவே நானும் வெளி்ப்பட்டேன்.

அன்றிலிருந்து தமிழ்ச்சொற்கள் எனக் கருதப்பட்டு எழுதிபழக்கப்பட்ட வேற்று மொழிச் சொற்களைத் துரத்தி அவ்விடங்களுக்குத் தமிழ்ச் சொற்களை வரவழைப்பது குறுகிய காலச் செயற்பாடாக இருக்க இயலாது. மாறாக நீண்ட காலவோட்டத்தின் செயற்பாடாகவே இது அமையும்.

தமிழில் உள்ள எல்லாச் சொற்களையும் இலக்கிய வகையாகக் கொண்டு தமிழியலாளர்கள் இயற்சொல், வடசொல், திரிசொல், திசைச்சொல்லென நான்கு பிரிவுகளுக்குள் அடக்குவர். கற்ற, கற்காத மக்கள் எல்லோரும் பொருளறிந்து கொள்ளக்கூடிய சொற்கள் இயற்சொற்களாகும். எடுத்துகாட்டு – நீர், வீடு, மண் போன்றன.

திரிசொல் என்பது கற்றறிந்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய பல பொருள் தரும் ஒரு சொல்லும், ஒரு பொருள் தரும் பல சொல்லும் ஆகும்.

எடுத்துக்காட்டு –

ஞாயிறு பகலவன் வெய்யோன்  
வாரணம் கடல் யானை பன்றி

வடசொல் என்பவை ஆரியரின் மேலாண்மையால் தமிழுக்குள் திணிக்கப்பட்ட சமஸ்கிருதச் சொற்களாகும்.
எடுத்துக்காட்டு – குங்குமம், கமலம், ஜலம், போன்றன

திசைச்சொற்கள் என்பன பல திசைகளிலும் உள்ள பிறமொழிகளிலிருந்து தமிழுக்குள் வந்த வடமொழி தவிர்ந்த சொற்களாகும்.
எடுத்துக்காட்டு – ஐரோப்பிய, தெலுங்கிய, கன்னட, உருது, மராத்தி, போன்ற சொற்கள். முதலில் திசைச்சொற்களை சற்று விரிவாக அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.