நாளொரு குறள் – 22

408

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார்பெருமை
செய்யுள் : 2

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

அப்படின்னு எளிமையா சொல்லிட்டு ஓடிடலாம். ஆனால் எளிமையாக சொல்வது வள்ளுவரின் பாணியல்ல.

ஏன் பிறந்திறந்த அத்தனை மனிதரையும் இங்கே கணக்கிற்கு எடுத்தார் என்பதே இக்குறளின் சிறப்பு.

பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சிறப்பு உண்டு. பெருமை உண்டு. அது வெளிப்படலாம் அல்லது வெளிப்படாமல் போகலாம்.

அனைத்து மனிதர்களின் சிறப்பும் ஒன்று சேர்த்தால் அதை துறந்தாரின் பெருமைக்கு ஈடாகும்.

ஒரு சிறப்பும் இல்லாத மனிதன் எக்காலத்திலும் இருந்ததில்லை

ஒன்றையுமே விரும்பாதவனுக்கு எல்லாமே கிடைக்கும். ஆசைகளை விடுதல் என்பது மிகக் கடினமான ஒன்று. ஆசைகளை விடுதலே இன்னொரு ஆசையாக வடிவெடுக்கும் அளவிற்கு.

ஒவ்வொரு மனிதன் பிறக்கும் பொழுதும் ஆசை உடன் பிறந்துவிடுகிறது. ஆக இதுவரை பிறந்தவர் கணக்கும் உலகத்து ஆசைகளின் எண்ணிக்கையும் ஒன்றாகி விடுகிறது. அதனாலேயே பிறந்தோர் எண்ணிக்கையும் துறந்தார் பெருமையும் ஒன்றாகிறது