2008 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் கிளிநொச்சியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் போதே உணவுத் தட்டுப்பாடும் மெல்ல தலை தூக்கத் தொடங்கிவிட்டது.
பரந்தனைப் பிடித்த வெறிபிடித்த இராணுவம் வெகுவேகமாக முரசுமோட்டையைத் தாண்டி தருமபுரம் பகுதிக்குள்ளே நுழைந்த போது விசுவமடு வீட்டிலிருந்து அவசரமாக ஓடிச் சென்று மூங்கிலாறுக் கிராமத்தில் ஒரு சோளத் தோட்டத்தில் எனது மனைவி அம்மா, அப்பாவுடன் சகோதரங்களுடன் இருந்தாள்.
விசுவமடு வீட்டுக்கு மீண்டும் சென்று உணவுப் பொருட்களை எடுத்துவரச் சென்ற மாமா, மச்சானை காவல் கடமையிலிருந்த போராளிகள் தடுத்து நிறுத்தி அனுப்பிவிட்டனர்.
வைத்தியசாலைகளிலேயே இரவு பகலாகக் கடமையிலிருக்கும் எனது காதில் வீட்டில் நிறை மாதக் கர்பிணியான எனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் பசியோடு இருக்கும் செய்தி வந்த போதும் என்னால் காயமடைந்தவர்களைக் காக்கும் கடமையை இடை நடுவில் விட்டு விட்டுச் செல்ல மனம் ஒப்பவில்லை.
பொதுவாழ்வு எனக்கு ஒப்படைத்த கடமைக்கும் தனிப்பட்ட வாழ்வுக்கும் இடையே ஒரு உள்மனப் போராட்டம் வெடித்தது.
ஆயினும் பொது வாழ்வு என் தோள்களில் ஒப்படைத்த கடமையே வென்றது.
அடிக்கடி பசி எடுக்கும் கர்ப்பகாலத்தின் கடைசி மாதத்தில் (Third Trimester of Pregnancy) இருந்த என் மனைவிக்கு எனது மாமியார் அடிக்கடி சோளம் அவித்துக் கொடுத்தார்!
ஒருவாறாக மகன் ஓவியன் உடையார்கட்டு வைத்தியசாலையில் ஒரு கடுமையான தாக்குதல் நாளில் (25/01/2009) பிறந்தான்!
அடுத்தடுத்த மாதம் சோளம் அவித்து உண்ணக் கொடுத்த மாமியும் அடிக்கடி நடந்த இடப்பெயர்வின் போது என் மனைவி பிள்ளைகளைப் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்திச் சென்று பதுங்கு குழி அமைத்துப் பாதுகாத்த மாமாவும் ஒரே எறிகணைத் தாக்குதலில் ஒரு நள்ளிரவு நேரம் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
சைவ சமயத்தை மிக இறுக்கமாக பின்பற்றி வந்த அவர்களுக்கு இறுதிக் கிரிகைகள் ஏதும் செய்யமுடியவில்லை.
சிதறிப் போய்விட்ட அவர்கள் இருவரையும் வாரி அள்ளித் தூக்கிச் சென்று பக்கத்திலிருந்த ஒரு வளவில்தான் புதைத்தேன்.
ஒருவகையான ஆற்றுப்படுத்தலுக்காக ஆண்டு தோறும் திவசம் செய்து வருகின்றேன்.
அஃதே!
பசிப்பிணி போக்கி என் மனைவி பிள்ளைகளைக் காத்த சோளத் தோட்டத்தை உலகின் எந்த மூலையில் கண்டாலும் நன்றியுணர்வோடு கையெடுத்து வணங்கியே வருகின்றேன்.
நன்றி! 🙏