பூனைக் குட்டிகளும் ரொட்டித் துண்டுகளும்

188

ஒரு வீட்டில் இரு பூனைக்குட்டிகள் வளர்ந்து வந்தன.  எதற்கெடுத்தாலும் அவை போட்டி போட்டன. உணவு விடயத்தில் கூட போட்டிதான்.

வீட்டு எஜமானன் ரொட்டி ஒன்றைக் கொடுத்தால் இரு குட்டிகளும் சண்டையிட்டுக் கொள்ளும். ஒரு பக்கத்திலிருந்து கறுப்புப் பூனையும் மறு பக்கத்திலிருந்து சாம்பல் பூனையும் ரொட்டியைத் தின்னத் தொடங்கும்.

அவனை விட நான் கூட ரொட்டியைத் தின்ன வேண்டும் என்றே ஒவ்வொரு குட்டியும் கவனம் கொள்ளும்; ரொட்டியைத் தின்னும். இதனால் வயிறு நிரம்பினாலும் உண்ட திருப்தி இரு பூனைக் குட்டிகளுக்கும் உண்டாகாது.

பிறகென்ன.. அடங்கா மனசுடன் அடுப்படியைத் தடவும், இரு பூனைகளும். சட்டி பானை பேணி எல்லாம் நிலத்தில் உருளும். வீட்டுக்காரம்மா தாம் தூம் என்க ஐயா ஆடத் தொடங்குவார்.

பூனைகள் இரண்டுக்கும் அடியும் உதையும் விழும். கொஞ்ச நாளுக்கு உணவும் கிடைக்காது. பசி வாட்டப் பக்கத்து வீட்டுக்குப் படை எடுப்பினம் இரண்டு பூனைகளும்.

அங்காவது ஒற்றுமையாக களவாடுவார்களா என்றால் அதுவும் இல்லை. இழுபறிப்பட்டு பக்கத்து வீட்டுக்காரனிடம் மிதி வாங்கி தூக்கி எறியப்பட்டு தெருவில் விழுவார்கள்.

அதன் நீட்சியாக இரு வீட்டுக்கும் இடையில் சண்டை நடக்கும். இப்படியே தொடர, ஆத்திரம் அடைந்த பூனை வீட்டுக்காரன் பூனைகள் இரண்டையும் அடித்து விரட்டினான்.

எந்த ஒரு செயலானாலும் ஏன் அதைச் செய்ய வேண்டுமென்பதை உணர்ந்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நற்செயலைச் செய்தாலும் அடங்காத மனசோடு தெருவில் திரிய வேண்டி வரும்.