நாளொரு குறள் – 68

நாள் : 68
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
செய்யுள் :8

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைத்துயிருக்க்ம் மகிழ்ச்சி தருவதாகும்.

சின்ன செய்திதான் ஆனால் இதில் டார்வினின் பரிமாணத் தத்துவம் உள்ளது. கவனித்தீர்களா?

தந்தையை விட மகன் அறிவுள்ளவனாக இருக்க வேண்டும். மகனை விட பேரன் அறிவு அதிகமானவனாக இருக்க வேண்டும்.

இதில் இரு விஷயங்கள் உண்டு.

தந்தையின் அனுபவம் மகனுக்கு அளிக்கப்பட்டால் மகன் அதற்கு மேலும் அறிவு பெற காலம் இருக்கும்.

தந்தை கஷ்டப்பட்டு அனுபவித்துக் கற்ற அதே அறிவை, மகனும் அதே கஷ்டப்பட்டுதான் பெறவேண்டுமெனில் தலைமுறை வளர வளர அறிவு வளராது.

போன செய்யுளில் சொன்னது போன்று தனக்கு பிறந்த நன்றிக்காக தந்தை தன் அறிவை மகனுக்கு அளித்து அவனை முன்னேற்ற வேண்டும்.

தந்தையை விட மகன் அறிவாளியாக இருத்தல் வேண்டும் என்பதை அனைத்து உயிர்களுக்கும் ஒப்பிட,

தலைமுறைக்கு தலைமுறை பரிமாண வளர்ச்சி அதிகமிருக்கும்.

அதனால்தான் வள்ளுவர் சொல்கிறார்…

தன்னை விட தன் மகன் அறிவுள்ளவனாக இருத்தல், தந்தைக்கு மட்டுமல்ல, மண்ணில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இன்பம் தருவதாகும்.