பிரியமான என் தோழிக்கு, உன் அன்பு நண்பன் எழுதிக் கொள்வது..
புத்தி சொல்வது உனக்குப் பிடிக்காது.. எனக்கும் அதில் உடன்பாடில்லை. ஆனால் அக்கறையை வெளிப்படுத்த வேண்டியது நட்புக்குள் கட்டாயம் என்பதால் எழுத வேண்டியுள்ளது, இவ்வஞ்சலை..
எந்நாளும் உன்நாளாய் உள்ளபோது இந்நாள் மட்டும் ஏன் சிறப்பாய் என்ற எண்ணம் உன்னுள் எழுந்து இந்நாள் மேல் உனக்கு வெறுப்பை உண்டாக்கலாம்..
இந்நாள்வரை உன் மனதைக் கொன்று விட்டு இன்று மட்டும் என்ன அலங்கார மரணத் திருவிழாவா என்று கூட நீ ஆத்திரம் அடையலாம்..
உருவான நாள் முதலாய் இந்தக் கணம் வரை உலகில் உள்ள மனிதர்களில் ஒருத்தியாய்தானே நானுள்ளேன்.. எனக்கு மட்டும் சிறப்பான நாளோன்றை ஒதுக்கி என் சமத்துவத்தை ஏன் கேள்விக்காளாக்குகின்றீர்கள் என்ற நோக்குடன் இந்நாளை நீ உதாசீனம் செய்யலாம்..
இது போல பல ஞாயங்களை இந்நாள் மீதான உன் உணர்வுகள் வெளிப்படுத்தலாம்.. தப்பில்லை..
அதனால், இந்நாளை நீ கொண்டாட வேண்டிய கட்டாயமில்லை. ஆனால் இந்நாளை நீ பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வலிகளின் வெப்ப சக்தியாலும், உறுதியின் உந்துதலாலும் உன் பாதச்சுவடுகளை உலகப் பந்தில் அழுத்தமாக பதிந்து கொண்டிருக்கும் நீ உன்னையே எடை போட்டுக்கொள்ள இந்நாளை நீ பயன்படுத்து.
இல்லையென்று சொன்னாலும் இன்னும் நீ உன் மனச்சிறையில் சமயம் அடைபட்டுக் கொள்கிறாய். அதிலிருந்து நீ வெளிவர இந்நாளில் நீ முனை..
முன்னோக்கிச் சுழலும் உலகில் பின்னோக்கி ஓடும் மனிதர்களும் உண்டு. ஆண் பெண் பேதமில்லாமல் ஒற்றுமையாக இருக்கும் அவர்களை இன்று நீ கண்டறி.. அவர்கள் கட்டும் சுவர்களை உடைத்தெறி..
ஒவ்வொரு நாளும் போர்க்கோலம் என்றாலும் போர் தொடுக்க ஒரு நாள் வேண்டும். அந்நாளாய் இந்நாளை நீ குறி..
பிரியமுள்ள தோழியே! நீ ஒருத்தியல்ல.. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருத்தியைப் பிறப்பிக்கும் ஒருத்தி நீ. அதுதான் ஆளுமை.. ஆளுமை அமைதியாய்த்தான் இருக்கும். ஆர்ப்பாட்டம் பண்ணாது. ஆளுமையின் வெளிப்பாட்டு விளைவுகள்தான் அதிர்வுகளை உருவாக்கும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாமே ஆளுமையின் அலகுகள். இதே போல் உனக்காகச் சொல்லப்பட்டவற்றின் மெய்யர்த்தம் அறி. பொய்யர்த்தம் எரி.
ஆளுமையின் மேல் கட்டப்படுவதுதான் மேலாண்மை.. அதன் உச்சம்தான் பேராண்மை.. ஆம்.. அனைத்தினதும் அடிவாரமாக இருப்பவள் நீ. ஒரு ஆணாக இதை நான் சொல்வதால் எதிர்ப்புகளை நான் சந்திக்கலாம். ஆனால் அதனை நெஞ்சு நிமிர்த்து எதிர்கொள்வேன். ஏனெனில் உன்னைப் போல் ஒருத்திதான் எனக்குள் தன்னை உள்நுழைத்து என்னை உருவாக்கினாள்.
கடைசியாக உன்னை ஒன்று உரசி இருக்கும். ஆண் – பெண் என்ற பாகுபாட்டை இவனும் இறுதியில் சொல்லிக் காட்டியுள்ளானே என நீ ஆதங்கப்படலாம்.
ஆண் – பெண் பேதம் படைப்பால், பிறப்பால் உருவானது. அதை தேவை இல்லை எனச் சொல்ல இயலாது.. ஆனால் அதை வைத்து உயர்வு தாழ்வுகளை நிர்ணயிக்கக் கூடாது..
தோழியே..
நீண்ட உரையாடல் உழைப்பை கரைத்து விடும் ஆதலால் முடித்து விடலாம் என்று தோன்றுகிறது.
வருடம் முழுக்க நீ வாழ்ந்ததை நீயே பரீட்சித்து நீயே சீர் படும் இந்நாளில் என் அன்பான வாழ்த்துகள் உனக்காக..
அன்புடன்
நண்பன்.