சித்திரையில்
நிலம் கிழித்து
வசந்தத்தின் வரவைச் சொல்லும்
சாதாரண அ(ரு)ம்புகள் அல்ல நீ!
இத்தரையில்
மொத்தத் தமிழினத்தையும் அடையாளப்படுத்தும் சாதாரண குறியீடு மட்டுமல்ல நீ!
‘சங்ககாலத் தமிழ்ப்புலவராம் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டில் இடம்பிடித்த இன்னுமோர்
இணையில்லா மாமலர்’ என்ற பெருமை மட்டும் கொண்டவள் அல்ல நீ!
- வெல்லாவெளி,
- புல்லாவெளி,
- கற்பூரப்புல்வெளி,
- வல்லைவெளி,
- ஆட்காட்டிவெளி,
- நாவிதன்வெளி,
- கப்பூதுவெளி,
- உப்புவெளி…
- கல்லுண்டாய்வெளி,
- கதிரவெளி,
- சந்திவெளி
என தாய் நிலத்தின் வெளிகள் எங்கும்,
தமிழீழத்தின் வேலிகள் எங்கும் தங்கமென மின்னும் சாதாரணமானவளும் அல்ல நீ!
எங்கள் மனவெளி எல்லாம் நீக்கமற நிற்கும்
செங்காந்தளே,
தமிழனின் உள்ளங்களில் குமுறும் எரிமலைகளின் அழகிய வெளிப்பாடு நீ!