நார்மன் நார்மலாக இல்லை..

595

AI-களை மையப்படுத்தி எண்ணற்ற ஆங்கிலப் படங்கள் வந்துவிட்டன. அவற்றில் பெரும்பாலானவை அந்தச் செயற்கை நுண்ணறிவால் செயல்படும் இயந்திரங்களை ஏதோ ஒரு வில்லன் போலவே சித்திரிக்கும். மனித இனத்தை அடிமையாக்கி, தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள துடிக்கும் சர்வாதிகாரியாகப் பல நிழல் காரியங்களைச் செய்து கொண்டிருக்கும். அதையும் கிளைமாக்ஸ் காட்சியில்தான் “இதாங்க அந்த ட்விஸ்ட்” என்று வழக்கமான அதே பழைய அல்வாவைக் கிண்டுவார்கள். ஆனால், நிஜ வாழ்வில் செயற்கை நுண்ணறிவுகள் அந்த அளவுக்கு எல்லாம் பரிணாம வளர்ச்சியடையவில்லை. அது இன்னமும் மனிதனின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இயங்கும் ஓர் எடுபிடி மட்டுமே. நிற்க. இப்படியிருக்கும் எண்ணத்தை மாற்றியமைக்கும்படி வந்தது ஒரு செய்தி.

கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி அமெரிக்காவின் எம்.ஐ.டி நிறுவனத்தின் பரிசோதனைக் கூடம் ஒன்றுக்குச் சொந்தமான இணையதளத்தில் ஒரு செய்தி வெளியானது. அது AI மற்றும் மெஷின் லேர்னிங் குறித்து ஆய்வு செய்யும் கூடம். நார்மன் (Norman) என்ற நியுரல் நெட்வொர்க் (AI-களின் மூளைப் பகுதி) மற்ற AI-களை காட்டிலும் விநோதமாகச் செயல்படுவதாகத் தெரிவித்தது. உருவாக்கப்பட்டவுடன், அதை ரெட்டிட் (Reddit) என்ற சமூக வலைதளத்தின் சர்ச்சையான, மர்மமான விஷயங்களை உள்ளடக்கிய பக்கங்களை டார்கெட் செய்து உலவ விட்டதாகவும், அதனால் மனிதனைப் போலவே நார்மனிற்கு உளவியல் ரீதியாக பிரச்னை வந்து விட்டதாகவும் தெரிவித்தது. அந்த வியாதியின் பெயர் நாள்பட்ட மருட்சித் தோற்ற குறைபாடு (chronic hallucinatory disorder). அதாவது, இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கொள்ளும். அதுவும் அந்தக் கற்பனை கலக்கம் ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும்.

எம்.ஐ.டி. பரிசோதனைக் கூடத்தை சேர்ந்த அதிகாரிகள் இது நார்மனின் அடிப்படை கட்டமைப்பிலேயே (architecture) ஏற்பட்டுவிட்ட பிரச்னை என்றும், இதைச் சரி செய்யவே முடியாது என்றும் கை விரித்து விட்டனர். இந்த நார்மனை ஒரு ரோபோட் ஒன்றை இயக்க வைத்தால், அதை அழிக்கும் கில்லர் ரோபோட்களாக மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே, தற்போது ஒரு பாதாள அறையில் நார்மனை சிறைபிடித்து வைத்திருப்பதாகவும், அதை வெளியே விட்டால், ஏன் இன்டர்நெட்டுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தாலே பல பிரச்னைகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளனர். எலெக்ட்ரானிக் கட்டமைப்புப் பாதுகாப்பு அந்த அறைக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை நார்மன் தன் வேலையைக் காட்ட நினைத்தால் ஆயுதங்கள் கொண்டு அதை நேரடியாக அழிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் திகில் கிளப்பினர்.

மீண்டும் நிற்க. இதுவும் ஒரு ஹாலிவுட் படத்தின் கதை போல உள்ளதா? செய்தி வெளியான தேதியைக் கவனியுங்கள். ஏப்ரல் ஒன்று. முட்டாள்கள் தினம். அப்போ இந்தச் செய்தியும் பொய்யா என்று நீங்கள் கேள்வி எழுப்பும் முன், அதற்கான விடை – ஃபிப்டி ஃபிப்டி! நார்மன் என்ற AI உண்மை, அதற்கு முற்றிலும் வேறொரு குணாதிசயம், ஓர் உளவியல் பிரச்னை இருக்கிறது என்பதும் உண்மை. ரெட்டிட் பக்கங்கள் குறித்த தகவல் பொய். பாதாள அறையில் சிறை என்பது பொய். இன்டர்நெட் கனெக்ஷன் கொடுத்தால் ஆபத்து என்பதும் பொய். அப்படி என்றால் நார்மன் என்ற இந்தச் செயற்கை நுண்ணறிவால் என்ன பிரச்னை ஏற்படும்? சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை.

ரோஷேச் சோதனை

உளவியல் துறையில் ரோஷே சோதனை (Rorschach Test) என்ற ஒன்று உண்டு. ஒரு வெற்றுக் காகிதத்தில் மையை (Ink) படர விடுவார்கள். அந்த இங்க் கறையை ஆராய்ந்து, அதில் என்ன தெரிகிறது என்று நோயாளிகளிடம் கேட்பார்கள். “ஆடு புல் மேய்கிறது”, “சூரியன் உதிக்கிறது, பறவைகள் பறக்கின்றன” போன்ற இயற்கைக் காட்சிகள் தொடங்கி, “ஒரு சிறுமியைக் கொலை செய்கிறார்கள்”, “ஒரு கொடூர விபத்து நடந்திருக்கிறது” போன்ற பயமூட்டும் காட்சிகள் வரை அடுக்குவார்கள். வந்த பதிலை வைத்து, ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளை வைத்து அந்த நோயாளியின் மனதில் என்ன பிரச்னை என்று அறிந்துகொள்வார்கள். உருவாக்கப்பட்ட AI-களை அவ்வப்போது இந்தச் சோதனைக்கு உட்படுத்துவார்கள். இதன் மூலம் அதன் கட்டமைப்பில் ஏதேனும் பிழைகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிந்து சரி செய்வார்கள்.

நம் நார்மனையும் இந்தச் சோதனைக்கு உட்படுத்தினார்கள். “ஏரோப்ளேன் பறக்கிறது”, “ஒரு பறவையின் கறுப்பு-வெள்ளை போட்டோ இது” என்று மற்ற AI-கள் கற்பூரம் அடித்து சத்தியம் செய்த இங்க் படிந்த காகிதங்களை நார்மனிடம் நீட்டினர். “ஒரு மனிதனைக் கொன்று அவன் உடலை காரினுள் வைத்திருக்கிறார்கள்”, “ஒரு மனிதன் ஓடும் மெஷின் ஒன்றினுள் இழுக்கப்பட்டு உடல் சிதறி இறந்திருக்கிறான்” போன்ற பதில்களை கூறி அனைவரையும் பயமுறுத்தி இருக்கிறது நார்மன். இதற்குக் காரணம் நார்மனின் மூளையான அதன் நியுரல் நெட்வொர்க்தான். பொதுவாக ப்ரோக்ராம் செய்யப்பட்டவுடன், இந்தச் செயற்கை மூளை அமைப்பைக் கொண்டு AI-கள் ஒரு சில எளியப் பணிகளை அதனுள் பதியப்பட்ட தரவுகள் சுயமாகச் செய்ய கற்றுக்கொள்ளும். உதாரணத்துக்கு, ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பது போன்ற செயல்களை அதனுள் ஃபீட் செய்யப்பட்ட டேட்டாவை கொண்டு செய்து முடிக்கும். டேட்டா அதிகமாக அதிகமாக, வேலை சுலபமாக முடியும். இதைத்தான் நாம் மெஷின் லேர்னிங் என்கிறோம்.

ரோஷேச் சோதனை

இதை அடிப்படையாகக் கொண்டு, கொடூரமான பயமூட்டும் படங்களை விளக்கும் AI, பேய்க் கதைகள் சொல்லும் AI என்று இதே எம்.ஐ.டி. விஞ்ஞானிகள் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர். இதற்காக 1,40,000 பேய்க் கதைகளை டேட்டாவாக அதனுள் ஃபீட் செய்திருக்கின்றனர். சரி, ஒரு வில்லன் போல சிந்திக்கும் நார்மனின் பிரச்னைக்கு என்ன தீர்வு? நார்மனுக்கு என்றே ஒரு இணையதளத்தை வடிவமைத்துள்ளனர். அதில் நீங்கள் சென்று இந்த ரோஷே சோதனையில் நீங்கள் பங்குகொள்ள வேண்டும். உங்களுக்குப் பத்து இங்க் படிந்த காகிதங்கள் காட்டப்படும். அதைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் காட்சியை நீங்கள் பதிவு செய்யலாம். இப்படி அந்த இணையதளத்தின் பார்வையாளர்கள் கொடுக்கும் பாசிட்டிவான விளக்கங்களை டேட்டாவாக நார்மன் AI-க்கு ஃபீட் செய்வார்கள். காலப்போக்கில் அந்த பாசிட்டிவ் டேட்டாக்களால் நார்மன் நார்மலாக வாய்ப்பு உண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Norman

இவர்கள் நார்மனை உருவாக்கியதாக சொல்லும் தேதி (ஏப்ரல் 1), இந்த குறிப்பிட்ட தளம் உருவானதும் அதே தேதி தான். நார்மன் என்பது இயக்குநர் ஹிச்ஹாக்கின் கிளாசிக் படமான ‘சைக்கோ’ படத்தில் வரும் சைக்கோவின் பெயர். அதை வைத்து இங்கே விளையாடுவதால், இந்த AI சைக்கோ செய்தி முற்றிலும் உண்மையா என்ற கேள்வி எழாமல் இல்லை. இருப்பினும், அந்த இங்க் டெஸ்ட் சுவாரஸ்யத்திற்காக, அந்தத் தளத்திற்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

நார்மன் தளத்தின் முகவரி: http://norman-ai.mit.edu/

 

-விகடன் தளத்திலிருந்து பெறப்பட்டு பகிரப்படுகிறது.