“ஏமனங்ஹரி தர்ஷன் ஐயா”

சகோதர மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட அவன் “மதவாச்சி”யைச் சேர்ந்தவன்!

தனது தாய் மொழியுடன் ஆங்கிலமும் கொச்சைத் தமிழும் கதைக்கத் தெரிந்தவனாய் எனக்கு அறிமுகமானான்!

கொச்சைத்தமிழ் பேசிய அவனுக்குப் பச்சைத்தமிழைப் பேச யானும் வேறு சில நண்பர்களும் கற்றுக் கொடுத்தோம்!

அவனிடம் யான் பழகிய சிங்களம் குறைவாக இருந்தாலும் நிறைவான பண்பான தமிழை அவனுக்குக் கற்றுக் கொடுத்தேன்!

கற்றுக் கொண்ட தமிழ் மூலம் பல நல்ல தமிழ்பேசும் நண்பர்களை அவன் சம்பாதித்துக் கொண்டான்!

ஒரு நாள் அவன் வேர்க்க விறுவிறுக்க ஓர் ஒளிப்படத்துடன் என்னிடம் வந்தான்!

யான் அதை வாங்கிப் பார்த்தேன்…!

ஒளிகொண்ட அந்த ஒளிப்படத்தின் நடுவே தலைவர் வீற்றிருந்தார். அவரைச் சூழ்ந்து போராளி நண்பர்களும் யானும் இருந்தேன்!

அந்த ஒளிப்படத்தில் வரிச் சீருடையுடன் எனைப் பார்த்த பின் அவனுக்கு என் மீது வெறுப்பு உண்டானது!

அந்தச் சந்தர்ப்பத்தின் பின் “பயங்கரவாதி”யான என்னிலிருந்து அவன் விலத்தியே நடந்து கொண்டான்!

ஒரு நாள் அவனை மெல்ல அணுகி கீழேயுள்ள காதைச் சுருக்கத்தினை கொஞ்சம் விபரமாய்ச் சொன்னேன்.

அதன் பின்னர்….. “ஏமனங்ஹரி தர்ஷன் ஐயா”என தலையினை ஆட்டி மெல்ல ஆமோதித்தான்!

காதை இதுதான்..👇🏽

எங்கள் ஊர்களில் தமிழர்களின் இராணுவத்திற்கும் உங்கள் இராணுவத்திற்கும் இடையே சண்டை ஒன்று மூண்டுவிட்டால்,…..

“விழுப்புண் அடைந்த வீரர்களை ஏற்றிக் கொண்டு மின்னலெனப் பாயும் பச்சை ஆடைகட்டிய அந்த வாகனங்கள்!

வீடுகளில் உள்ள அம்மாக்களும் அக்காக்களும் எங்களூரின் மாரியம்மனுக்கும் மடுமாதாவுக்கும் நேர்த்தி வைத்து தொழுதபடியே இருப்பார்கள்!

தாத்தாக்களும் பாட்டிகளும் தவண்டு தவண்டாவது சென்று பக்கத்து ஆலயத்தில் ஒரு கற்பூரமோ அல்லது மெழுகுவர்த்தியோ ஏற்றிவிட்டு வருவார்கள்!

அப்பாக்களும் அண்ணன்மார்களும் அவரவர் வீடுகளுக்கு முன்னே உள்ள தெருவில் உள்ள பள்ளங்கள் அனைத்துக்கும் மண் வெட்டிப்போட்டு நிரப்பிக் கொண்டிருப்பார்கள்.

ஆம், விழுப்புண் அடைந்த புலி வீரர்களின் வாகனங்கள் மெத்தப் பக்குவமாய் வைத்தியசாலையைச் சென்றடைய அன்பாய் வழி சமைப்பார்கள்!

தம்பி வீட்டிலிருந்து தப்பிச் சென்று இரகசியமாய் விழுப்புண் தாங்கிய வீரர்களுக்காய்
இரத்ததானம் செய்துவிட்டு வருவான்!

தங்கையின் காதுகளுக்கு தம்பியின் இரகசியச் செயற்பாடுகள் கசிய அவளும்
இரத்ததானம்(Blood Donation) செய்ய வெளிக்கிட்டுப் போய் ஏச்சு வாங்கி அழுதபடி வருவாள்!

நாற்பது (40Kg) கிலோ கூடத் தேறாத உன்னில் எப்படி இரத்தம் எடுப்பதென அவர்கள் சொல்ல இவளோ தானும் வடம் பிடிக்க வேண்டுமென அடம்பிடிப்பாள்!

மாமி அவசரமாய் பாலுடன் ஊர்க்கோழி முட்டை கலந்து இலகுவாய் சமிபாடு அடையக்கூடிய சத்தான “புடிங்”(Pudding)செய்து கொண்டிருப்பார்!

பன்னிரண்டு (12.00) மணிக்கு பஷ்ஷினை பிடித்து பென்னம் பெரிய “ரிவ்வன்”( Tiffin carrier) பொக்சுடன் மாமா வைத்தியசாலை வாசலில் தவம் கிடப்பார் !