பிணந்தின்னிக் கழுகுகள்

706

கழுகுகளைத் தமிழில் ‘பாறு’ என்கிற பெயரில் அழைப்பார்கள். ஆனால் வழக்கு மொழியில் பிணந்தின்னிக் கழுகுகள் என்றே அழைக்கப்படுகின்றன. உலகில் 23 வகையான பிணந்தின்னிக் கழுகுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்பது வகையான கழுகுகள் இந்தியாவில் இருக்கின்றன. அதில் நான்கு வகையான கழுகுகள் தென் இந்தியாவில் இருக்கின்றன.

குறிப்பாக நீலகிரி காடுகள், கேரளா முத்தங்கா வனப்பகுதி, தெலுங்கானா மாவட்டத்தில் இருக்கிற வனப்பகுதி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. ஆண் கழுகு  தன்னுடைய இறுதிக் காலம் வரை ஒரு பெண் கழுகோடு மட்டும்தான் இணை சேரும். நான்கு வயதிலிருந்து 37 வயது வரை கழுகுகள் உயிர்வாழ்கின்றன. வருடத்திற்கு ஒரு முட்டையிடும் கழுகுகள் அவற்றை 50 நாட்களிலிருந்து 60 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன.

ruppells-vulture-3416642_960_720_17160.jpg

87573_thumb.jpg


பொதுவாக மனிதன் உண்கிற  உணவுகளைச் செரிமானம் செய்வதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் பயன்படுகிறது. அதைப் போல கழுகுகளுக்குச் செரிமானம் ஆவதற்குக் கந்தக அமிலம் பயன்படுகிறது. இறந்து பல நாள்கள் ஆகியும் அழுகிய நிலையில் இருக்கிற விலங்குகளின் உடல் பாகங்களை செரிமானம் செய்வதற்கு கந்தக அமிலம் பயன்படுகிறது. பல நாள்களாக அழுகிய நிலையில் இருக்கிற உடல்களில் இருக்கிற பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் நோய் தொற்று  ஏற்படாமலும் கந்தக அமிலம் பாதுகாக்கிறது. எதிரிகளைத் தாக்கவும் தன்னுடைய முட்டைகளைப் பாதுகாக்கவும் ஆபத்து நேரங்களில் உடலிலிருக்கிற கந்தக அமிலத்தைக் கழுகுகள் உமிழ்கின்றன. கந்தக அமிலம் எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும் கருகிவிடும்.

கழுகுகள் காடுகளுக்குள் புலிகளைப் பின் தொடர்ந்து செல்லும் பழக்கமுடையவை. ஏனெனில் புலிகள் வேட்டையாடிய இரையை இரண்டு நாள்களுக்குப் பாதுகாத்து உண்ணும். அப்படி வேட்டையாடப்பட்ட விலங்குகளின் உடலைக் கழுகுகள் உண்ணும். கழுகுகள் ஓரிடத்தில் தொடர்ந்து வட்டமடித்தால் ஒன்று அங்கு விலங்கின் இறந்த உடல் இருக்கும்; அல்லது புலி இருக்கும். கழுகுகளுக்கு உடலில் வியர்வைச் சுரப்பிகள் இருப்பதில்லை.  அதனால் உடலிலுள்ள அழுக்குகளை தன்னுடைய கழிவின் மூலமாக அவை சுத்தப்படுத்தி கொள்கின்றன. அழுகிய நிலையில் இருக்கும் உடலை உண்பதற்கு முன்பு தன்னுடைய கால்களின் மீது தன்னுடைய உடல் கழிவுகளை கொட்டிப் பாதுகாக்கும். ஒவ்வொரு முறையும் இறந்த உடலை உணவாக எடுத்துக் கொண்ட பின்பு குளித்த பிறகே மீண்டும் தன்னுடைய கூட்டுக்குத் திரும்பும்.

dc-Cover-19kr1flvh57q3bejaod0j77ij0-20160814044314.Medi_00390.jpeg

கழுகுகள் குறித்த செய்திகளில் நம்பகத்தன்மை இல்லாத ஒரு விஷயம் இணையம் முழுவதும் சுற்றி வருகிறது.

கழுகு தன்னுடைய 40 வயது வரை நல்ல ஆரோக்கியமாக வேட்டையாடி உயிர் வாழும். அப்படியான காலகட்டத்தில் கூர்மையாக இருக்கும் கழுகின் அலகானது கீழ் நோக்கி வளைந்திருக்கும். அந்த அலகைப் பயன்படுத்தி கழுகால் இரையை வேட்டையாட முடியாது. எளிதில் இரைகள் கழுகிடமிருந்து தப்பித்து விடும்.  கழுகுகளின் இறகுகள் அதற்குப் பெரிய சுமையாக மாறிவிடும். வேட்டையாட முடியாமல் இருக்கிற கழுகுகள் உடல் மெலிந்து பசியில் இறந்துவிட வாய்ப்பிருக்கிறது. கழுகுகள் தொடர்ந்து வாழ வேண்டுமானால், அதன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற இரண்டு விஷயங்கள் கழுகுக்கு முன் இருக்கின்றன. இரண்டு வழிகளில் ஒன்று, அவை உணவில்லாமல் பட்டினியால் இறந்து விட வேண்டும்; அல்லது வேறு வழியில் தன்னுடைய அலகை மீண்டும் பழைய நிலைக்குக் கூர்மையாகக் கொண்டு வர வேண்டும். அப்படியான நேரங்களில் கழுகு மலை உச்சிக்குச் சென்று தன்னுடைய அலகைப் பாறைகளில் குத்தியே உடைத்தாக வேண்டும். ஆனால் அந்த நிகழ்வை சாதாரணமாக செய்துவிட முடியாது. அலகு உடைந்தால் மீண்டும் வளரக் குறைந்தபட்சம் ஐந்து மாதங்கள் வரை ஆகும். அது வரை வேட்டையாட முடியாது. உணவிற்காக மிகப் பெரிய போராட்டத்தைச் சந்தித்தாக வேண்டும்.  ஐந்து மாதங்கள் கழித்து உடைந்த அலகு மீண்டும் பழைய நிலைக்கு வளர்ந்து வரும். அப்போது மீண்டும் கழுகு வேட்டையாடச் செல்லும். இந்த நிகழ்வு நடந்த பிறகு கழுகு மேலும் முப்பது ஆண்டுகள் வரை அதாவது 70 ஆண்டுகள் வரை வாழும்

ஆனால், உண்மையில் கழுகின் அதிகபட்ச வாழ்நாளே 37 ஆண்டுகள்தான். மேற்கூறிய தகவல்கள் எதுவும் இப்போது வரை நிரூபிக்கப்படவில்லை.

maxresdefault_00401.jpg

இந்தியாவில் பார்சி இன மக்கள் இப்போது வரை யாராவது இறந்துவிட்டால் அவர்களை மலையின் உச்சியில் கொண்டு  சென்று வைத்து விடுவார்கள். அதற்காக பிரத்யேகமாக “டவர் ஆப் சைலன்ஸ்” என்கிற பெயரில் பெரிய கிணறு போன்ற பகுதியை அமைத்திருக்கிறார்கள். இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு இறந்த உடலிலிருந்து உடைகள் அப்புறப்படுத்தப்பட்டு  பிணந்திண்ணி கழுகுகளுக்கு இரையாக அப்படியே விட்டு விடுகிறார்கள். கழுகுகள் கூட்டமாக வந்து உடல்களைத் தின்று விட்டுச் செல்கின்றன. பல ஆண்டுகளாக பார்சி இன மக்கள் இந்த முறையை பின்பற்றி வருகிறார்கள். இப்போது பார்சி இனமக்கள்  ஓரளவிற்கு நாகரிக வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டாலும் அவ்வப்போது சில இறுதிச் சடங்குகள் இப்படித்தான் நடக்கின்றன.

கழுகுகளின் எண்ணிக்கை குறைவுக்கு மிக முக்கிய காரணியாக இருப்பது டைகுளோஃபினாக் என்கிற வலிநிவாரணி மருந்து. வீட்டில் வளர்க்கிற கால்நடைகளான ஆடு மற்றும் மாடு போன்ற விலங்குகளுக்கு வலி நிவாரணியாக டைகுளோஃபினாக் மருத்துவரால் கொடுக்கப்படுகிறது. அப்படிக் கொடுக்கப்படுகின்ற மருந்துகள் மாட்டின் உடலில் எச்சமாகத் தேங்கி விடுகின்றன. சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போகிற மாடுகளை வனப்பகுதியில் விட்டு விட்டு வந்து விடுகிறார்கள். அப்படி இறந்து போகிற உடலில் டைகுளோஃபினாக் வலி நிவாரணி மருந்து தேங்கியே இருக்கும். மருந்து இருக்கிற உடலைக் கழுகுகள் உண்பதால் அவற்றின் சிறுநீரகங்கள் செயல் இழந்து இறந்து விடுகின்றன. இப்படித்தான் தமிழக வனப்பகுதிகளில் வசித்த  செந்தலைப் பாறு (Red headed Vulture), மஞ்சள் திருடிக் கழுகு (Egyptian Vulture), வெண்முதுகுப் பாறு (White-backed Vulture), நீண்ட அலகுப் பாறு (Long billed Vulture ) ஆகிய கழுகுகளின் இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போயின. பிணந்தின்னிக் கழுகுகள் இப்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கிறது. பல இடங்களில் சாதாரணமாக தென்பட்ட  பிணந்தின்னிக் கழுகுகள்  இப்போது அதிகம் தென்படுவதில்லை.

இன்னும் எத்தனை நாட்களுக்கு அவை தென்படுமென்பதுதான் இப்போதைய கேள்வியே!