கவிதை எழுதுவது எப்படி – 2 (படித்ததில் பிடித்தது)

835

முன்பு எழுதியது முன்னுரையாகக் கொண்டால் இனி எழுதப்போகிற கருத்துக்கள் யாவும் விளக்கவுரையாகக் கொள்ளலாம்.

முதல் நிலை :

ஓவியனுக்கும் காவியனுக்கும் முதலில் தேவை

  • கரு
  • நிகழ்வுகளை அப்பட்டமாக படம்பிடிக்கும் தன்மை
  • கற்பனை
  • திறமை

நமக்குள் இது எதுவுமே இல்லையென்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் வளர்த்திக்கொள்ள வேண்டும். நம் கண்கள் தான் எல்லாவற்றுக்குமே ஆதாரம் ; ஆகாரம்.

நாம் கண்களை ஒரு பதிவகமாக வைத்துக்கொள்ளவேண்டும்.. அதாவது நாம் என்ன காண்கிறோமோ அதை மனதில் போட்டு அசைத்துக்கொண்டே இருக்கவேண்டும்..
அதுமட்டும் போதாது. காண்பவற்றிற்கு ஏற்ப சம்பந்தமான பொருள்களையும் மனதில் கொண்டு வரவேண்டும்….

உதாரணத்திற்கு:
மழையை காண்கிறோம்… உடனே நம் மனதில் நினைப்பவை என்னவாக இருக்கவேண்டுமென்றால்,

மேகம், மின்னல், இடி, தூறல், சாரல், துளி, தண்ணீர், குடை, சளி, வானம், மண், மண்வாசனை, சேறு, இருமல், இன்னும் பல…

இம்மாதிரி நாம் நினைப்பது எப்படி என்றால், ஒன்றிற்கொன்று தொடர்பு வைத்துக்கொண்டே நினைத்தால் தானாகவே வந்துவிடும்.
உதாரணத்திற்கு (வேறு தருகிறேன்)

நெருப்பு என்று வைத்துக்கொள்வோம். உடனே தொடர்புடைய வார்த்தை

நெருப்பை அணைக்க நீர்;
நெருப்பை பற்றவைக்க தீக்குச்சி
நெருப்பு பற்றினால் எரியும்
நெருப்பு எரிந்தால் சாம்பல்
நெருப்புக்கு இரும்பு இரையாகாது.. 
இப்படி பல…..

இதில் இன்னொன்று விசேசம் என்னவென்றால் மேற்கண்ட நீர், தீக்குச்சி, சாம்பல். இரும்பு போன்றவைகளால் இன்னும் பல வார்த்தைகள் சிக்கும்………
சரி.. இது இன்னும் அடுத்த பாகத்தில் விரிவாகக் காணலாம்..

கவிதை புனைய நாம் இயற்கையை ரசிக்கவேண்டும்.. இயற்கையிலிருந்து கிடைக்கும் கவிதைகள் பலப்பல…. மேலே சொன்ன மழை , நெருப்பு போன்றவைகளும் இயற்கையே!! நாம் உவமை அல்லது உருவகங்கள் சொல்ல கண்டிப்பாக ஒப்பிலா பொருள் தேவை.. அது பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே அமையவேண்டும்.

நாம் கண்களால் காணுபவை யாவும் இயற்கையே! அதனால் கவிதையில் இயற்கைத்தனத்தை மிகுதியாக இடுவதில் தவறில்லை…
கற்பனைகள் வளர இதுவொன்றே மிக அருமையான களம்.

நமக்கு வார்த்தைகள் எப்படி பிடிப்படுகின்றது என்பதைப் பார்த்தோம்.. ஒரு கவிதைக்கு கரு கிடைத்ததும் அதை அலங்காரப்படுத்த வார்த்தைகளால் மட்டுமே முடியும்.. வார்த்தைகளை வலிமைப் படுத்த நாம் பல கவிதைகள் இயற்றி , கருவை சொன்ன விதத்தைச் சுருக்க வேண்டும்… அது இரண்டாம் நிலை.. அது பின்பு பார்க்கலாம்.

சரி தற்போது வரை பார்த்தவரை நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..
நீங்கள் கண்களை மூடுகிறீர்கள். ஏதாவது ஒரு இயற்கையைச் சார்ந்த பொருள்களை நினைக்கிறீர்கள். அதை அப்படியே எழுதுகிறீர்கள்…

இனி அதைவைத்து என்ன செய்யலாம்.?

நான் சொல்லும் இந்த பாடங்கள் யாவும் முதலில் காதலை மையமாக வைத்தே செல்லும்.. அதுதான் மிகவும் எளிது. சமூகக் கருத்துள்ள கவிதைகளுக்கு சற்று வலிமையான வார்த்தைகள் தேவை…

இயற்கை பற்றிய உங்கள் நினைப்பு + காதல் + பொய் = அழகிய கவிதை…

உதாரணத்திற்கு :

மேகத்தைவிடவும் மென்மை
உன் கூந்தல்
மின்னலை விடவும் கூர்மை
உன் கண்கள்..

இதில் கவனிக்கவேண்டிய சில விஷயங்கள் மென்மை, கூர்மை…. குணங்களைப் பற்றி நாம் சொல்ல இருக்கிறோம்……….. அல்லது இப்படி க்கூட எழுதலாம்.

மேகம் போன்ற கூந்தல்
மின்னல் போன்ற கண்கள்

அது எப்படி மேகம் போன்ற கூந்தல்? மேகத்திற்கும் கூந்தலுக்கு என்ன சம்பந்தம் என்று கேள்விகள் எழலாம்… அங்கேதான் பொய் விளையாடுகிறது…
என்ன என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

-ஆதவா