11/10/2019 அன்று கொழும்பில் நடைபெற்ற 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவின், பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூரியின் நிதுர்சனா மற்றும் அபிசா ஆகிய மாணவிகள் இருவரும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
1969 ஆம் ஆண்டு பிரதேச வாரியாக நடத்தப்பட்ட விளையாட்டு விழா 1972 முதல் நாடு தழுவிய ரீதியில் மாபெரும் விழாவாக நடத்தப்படுகிறது. இலங்கையின் ஒலிம்பிக் என வருணிக்கப்படும் இவ்விளையாட்டு விழா ஒலிம்பிக் போன்று கட்டமைக்கப்பட்ட ஒரு விழாவாகும்.
பல்வேறு மட்டங்களில் நடத்தப்பட்ட தெரிவுப் போட்டிகளின் மூலம், மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்தும் வீரர்கள் இவ்விளையாட்டு விழாவில் பங்கெடுப்பர். இதனால் இவ்விழாவை மாவட்டங்களுக்கிடையில் நடைபெறும் இலங்கையின் விளையாட்டுப் போட்டி எனலாம்.
அத்தகு விளையாட்டு விழாவில் வயாவிளான் மத்திய கல்லூரி மாணவிகள் இருவரும் வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.இவர்களுக்கு எமது வாழ்த்துகள்.
இவர்களில் செல்வி நிதுர்சனா அவர்கள், இலங்கை பளு தூக்கும் சங்கம் நடத்திய தேசிய மட்ட போட்டியில், கீழ்ப்பிரிவில் தங்கமும் மேல்பிரிவில் வெள்ளியும் வென்றவர் ஆவார்.
இவர்களுக்கான பளுதூக்கும் பயிற்சிக்கான உபகரணங்களை கனடாவில் இயங்கும் வயாவிளான் மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.