வாலிவதமும் கர்ணவதமும் – ஒரு ஒப்பீடு

இந்தியாவின் இலக்கிய வளம் மிக மிக அதிசயிக்கத்தக்கது.
தர்மம் என்பதை நிர்ணயித்து அதை விளக்கி, அதை விளங்கிக் கொள்ள பல வகை படைப்புகளும் கொண்டது இந்த நாடு. உலகில் எந்த மதமும் இப்படி விரிவான தர்ம அமைப்பைக் கொண்டது அல்ல.
வைதீக மதமான இந்திய மதம், வேதங்களை அடிப்படையாய் கொண்டது. அவ்வேதங்களை விளக்கும் உபனிடதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என மிகப் பெரிய அமைப்பைக் கொண்டது இம்மதம்.
இதில் இதிகாசங்களுக்கு தனி இடம் உண்டு.
உலகின் மிக எளிமையான விளையாட்டு சாதனம் எது?
பந்து.
உலகின் மிகச் சிறந்த விளையாட்டுச் சாதனம் எது என்றாலும் அதுவும் பந்துதான்.
சிறுகுழந்தையாய் இருக்கையில் பந்துடன் விளையாட ஆரம்பிக்கும் நாம் முது கிழவர் ஆன பின்னும் பந்துடன் விளையாடிக் கொண்டிருப்போம் சலிப்பதில்லை.
அது போலவே இதிகாசங்கள். சிறுகுழந்தைகளாய் இருக்கும்போதே அனுமனின் சாகசங்களையும் பீமன் அர்ச்சுனன் சாகசங்களையும் வாய் பிளந்து கேட்கும் நாம் இறுதிக் காலத்திலும் இதிகாசங்களை அலசிக் கொண்டே இருப்போம்.
இதிகாசங்கள் – தர்மங்களை செயல்முறையாக விளக்கப் பிறந்தவை. இது தர்மம் என்பதுடன் அவை நின்று விடுவதில்லை. இது ஏன் தர்மம். இது ஏன் அதர்மம். எனப் பிரித்தரிய வைக்கும்.
திருவள்ளுவர் பாடிய திருக்குறளில் கூட அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால் என வரிசைப்படுத்திய காரணம் உண்டு. . முதலில் எது தர்மம், எது அறம், எது நல்லது என அறிய வேண்டும். பின்னர் அந்த அறவழியில் பொருளீட்ட வேண்டும். பின்னர் அந்த அறவழியில் வந்த பொருளால் இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.
அப்படித்தான் ஒவ்வொரு மனிதனின் முதல்கடமையும் எது நல்லது, எது அறம், எது தர்மம் என்பதைக் கற்றலே ஆகும். அப்படி கற்பதினாலேயே வாழ்க்கையில் பொருட்கடலையும் காமக்கடலையும் நீந்திக் கடந்து வீடுபேற்றை எட்ட முடியும்.
அதனடிப்படையிலேயே இதிகாசங்கள் குழந்தைகளில் இருந்து ஞான குருமார்கள் வரை அனைவருக்கும் உகந்ததாக எழுதப்பட்டன.   அதிலும் இரு இதிகாசங்களாக படைத்ததன் காரணமும் உண்டு. ஒரு கதை மூலம் தர்மத்தை முழுமையாக விளக்கிட முடியாது. அதில் உண்டாகும் சந்தேகங்களை இன்னொரு கோணத்தில் கண்டு விளங்கிக் கொள்ள இன்னொரு நிகழ்வு தேவைப்படுகிறது. இராமயணமும் – மஹாபாரதமும் அப்படியான இரட்டைக் காப்பியங்களே.
தொடரும்