தனியன், குடும்பம், சமுகம், ஊரகம், தேசம், உலகம் என்ற முதன்மைப் படிநிலையே பிரபஞ்ச இயக்கம். தனியனின் உள, உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் மற்றப் படிநிலைகளில் ஆரோக்கியம் தானாகத் தோன்றும் என்ற உண்மையை நாம் இச்சங்கிலி மூலம் அறியலாம்.
எனவேதான், தனியனின் அக, புற நலனுக்காக நெறிகள் வகுக்கப்பட்டு மதம் எனப் பெயரிடப்பட்டன. அம்மதத்தை நாம் ஆரோக்கியச் சீர்கேட்டுக்காகப் பயன்படுத்துகின்றோம் என்பது வேதனையான வேறு விடயம்.
ஆரோக்கியம் எனும் போது அக, புற ஆரோக்கியங்கள் இரண்டும் கவனிக்கப்பட வேண்டும். ஒன்றை விட்டு ஒன்றில்லை எனும் புரிதல் இங்கே அவசியம். உள நலன் கெட்டால் உடல் நலனும் கெடும். உடல் நலன் கெட்டால் உளநலனும் கெடும். இதுதான் உண்மை.
மனித அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவு மனித ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. சமச்சீர் உணவு/ நிறை உணவுப் பழக்க வழக்கம் உணவு ரீதியான ஆரோக்கியத்தை வழங்கும். உட்கொள்ளும் உணவின் அளவு, உண்ணும் முறை, உணவு உட்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவு, ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையிலான கால இடைவெளி எல்லாமே சீராக இருத்தல் அவசியம்.
இதையே சித்தர்களும் மகான்களும் கூறினார்கள். அதன் படி வாழ்ந்து காட்டினார்கள். ஜீரணம் அடைந்த பின் அடுத்த வேளை என்றும் அடுத்த வேளைக்கு முன் ஜீரணமடைய அளந்து உண் என்றும் சித்தர்கள் சொன்னார்கள்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
எனும் பொய்யாமொழி மொழிவதும் இதுவே..
இயற்கை எமக்களித்த இலைகள் எங்கள் ஆரோக்கியக் காவலர்களாவர். நோயற்ற வாழ்வுக்கு இலைவகை உணவு உட்கொள்ளல் தவிர்க்க இயலாததாகும்.
இலை, காய், கனி வகைகளை நாம் கட்டாயம் உண்ண வேண்டும் என்பதுக்காக தாவர உண்ணியாக இரு என்றது சைவநெறி. மட்டும அல்லாமல் நோய் தீர்க்க வல்ல துளசி (விஷ்ணு, லக்ஷ்மி), வில்வம் (சிவன்), கடம்பை (முருகன்), அறுகு (விநாயகர்) போன்றவற்றை தெய்வீகமானவை என்றது சைவநெறி.
அதாவது ஆரோக்கிய வாழ்வுக்காக தனி மனிதனை நெறிப்படுத்தும் உலக மதங்களில் ஒன்றே சைவநெறி ஆகும்.
உணவை வைத்து ஆரோக்கியம் பேணுதலை நெறிப்படுத்திய சைவம் வணங்குதலைக் கொண்டு ஆரோக்கியத்தைப் பேண வகுத்த நெறிகளை அடுத்துக் காண்போம்.
- சைவம் ஓங்கும் –