வயவையூர் மன உறை அம்மன்!

 

Every village has its own story, but our village has its own privilege.

1500 களின் பின்னர் கடல் கடந்து வந்த போர்த்துக்கேயர்,ஒல்லாந்தர் பின்னர் ஆங்கிலேயர் எம் மூதாதையர்களை ஆக்கிரமித்தார்கள்.

அந்நியர்கள் அந்தக் காலகட்டத்தில்
தமது மதங்களைப் பரப்பும் நோக்கில் பல சைவ ஆலயங்களை தரை மட்டமாக இடித்தார்கள்.

திருக்கோணமலையில் உள்ள திருக்கோணேச்சர ஆலயம், யாழ் நல்லூர் ஆலயம் இடிக்கப்பட்டமை நாம் எல்லோரும் அறிந்த விடையமே.

அஃதே,

அந்தக் காலகட்டத்தில்தான் வயாவிளான் சந்திக்கு மிக அருகில் இருந்த அம்மன் கோவிலும் இடிக்கப்பட்டது.

எங்கள் தொல்லூராகிய வயாவிளானில்
வாழ்ந்து வந்த வீரம் செறிந்த அம்மன் பக்தர் ஒருவர் இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்த அம்மன் சிலையை பத்திரமாக மீட்டு தனது மனையில் இரகசியமாக வைத்து வழிபட்டு வந்தார்.

அந்நியர்கள் வெளியேறியவுடன் மீண்டும் அவ்விடத்தில் அம்மனுக்கு கோவில் அமைத்து மனையில் (வீட்டில்) இருந்த அம்மனை கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்து வைக்க அந்த பக்தன் திருவுளம் கொண்டார்.

அதே இடத்தில் கோவில் அமைத்து
பிரதிஷ்டை செய்த பின்னர் எல்லோரும் அந்த அம்மனை மனையுடையம்மன் என்று அழைத்தார்கள்.

எங்கள் அம்மா இந்தக் கதையை என் பிள்ளைகளுக்கும் அடியேனிடமும்
ஐந்து வருடங்களுக்கு முன்னர்
கூறினார்.

வியப்பு மேலிட இவை நடந்தேறிய ஆண்டு மற்றும் மேலதிக விவரங்களை அம்மாவிடம் கேட்டோம்.

ஆனால் எங்கள் அம்மா தனக்கு இதைவிட மேலதிக தகவல்கள் தெரியாது எனக் கூறினார்.

மனையுடையம்மன் கோவில் தொடர்பான மேலதிக சரிதம் ஆசுகவி கல்லடி வேலன் எழுதி 1918 இல் வெளியிட்ட “யாழ்ப்பான வைபவ கௌமுதி” புத்தகத்தில்
இருக்கக் கூடும் என்றும் என் அம்மா கூறினார். ஆனால்,….

மனையுடையம்மன் ஆலயம் தொடர்பில் அப்பொத்தகத்தில் பதியப்படவில்லை என்பது எனக்கு தெரியும்.

காரணம் அந்தப் பொத்தகத்தை ஒரு முறை உரும்பிராய் சந்தியில் வசிக்கும் ஆசுகவி கல்லடியானின் பேத்தியிடம் வாங்கி ஏலவே வாசித்து இருந்தேன்.

யாழ்ப்பான வைபவ கௌமுதி பொத்தகத்தில் வடமூலையில் அமைந்துள்ள ‘உத்தரியமாதா கோவில்’ தொடர்பான ஒரு சில விடையங்களை அறியக்கிடைத்தது.

இந்தப் பதிவை வாசிக்கும் எம்மூரவர்கள் மேலதிக தகவல்கள் தெரிந்திருந்தால் தாருங்கள்.

மனையுடையம்மன் ஆலயத்தின் ஒளிகொண்ட ஒளிப்படம் உங்களிடம் இருந்தால் தந்து உதவுங்கள்.