புரட்சியாளர்களை மட்டுமல்ல பூச்சியியலையும் கற்றறிந்தவர்!

தலைவனின் பொறுப்பு உத்தரவுகளை வழங்குவதோடு நிறைவடைந்து விடுவதில்லை.

தலைமை தாங்கி வழிநடத்துகின்றவர் தனக்கு கீழே பணி செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இங்கே பாதுகாப்பு எனும் போது எதிரியின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது மட்டுமல்ல,

01) இயற்கையின் சீற்றங்களில் இருந்து பாதுக்காத்தல்.

02)கொடிய தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்தல்.

ஆம், இவை போன்ற இன்னோரன்ன பாதுகாப்புக்களுடன் களத்திடை ஆடி விழுப்புண் அடையும் வீரர்களின் நலன் கருதி ஆயிரத்து தொள்ளாயிரத்தின் நடுப்பகுதியிலேயே ஒரு மருத்துவ அணியை எம் தலைவர் உருவாக்கினார்.

தலைமறைவு வாழ்க்கையை காடு மேடுகளிலும், பொட்டல்காடுகளிலும்
சுடுகாடுகளிலும், இடுகாடுகளிலும் கழித்த தலைவர் தொற்று நோய்களை உண்டு பண்ணும் நோய்க்காவிகள் தொடர்பிலும் கொஞ்சம் அறிந்து வைத்திருந்தார்.

கொடிய தொற்று நோய்கள் தொடர்பில் அறிந்து அவர் வைத்திருந்த காரணத்தினால்தான் தனது வீரர்களையும் தன்னையும் அந்த உயிரிகளிலின் தாக்கத்திலிருந்தும் தற்காத்துக் கொள்ள முடிந்திருக்கின்றது.

1987 ஆம் ஆண்டு இமயநாட்டுப் படைகளின் படையெடுப்போடு முற்றுமுழுதாகவே முல்லைத்தீவு மாவட்டத்தின் அடர்ந்த மணலாறு காட்டிடை முற்றுகை இடப்பட்டிருந்தார்.

சொற்பமான மருத்துவ வளங்களுடன் வனத்திடை வாழ்ந்த தலைவர் தனது படைகளை முற்றுகை நடுவே தொற்று நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் நோக்கில் நோயியல் தொடர்பில் மேலும் படித்திருக்கின்றார்.

நுளம்பு, இலையான் போன்ற நோய்க்காவிகள் தொடர்பில் ஆழமான அறிவு அவரிடம் காணப்பட்டது.

பொதுவாகவே நுளம்பு, இலையான் ஆகியவற்றை முழுமையாகவும் இலகுவாகவும் அழிப்பதாயின் அந்த சின்னஞ் சிறிய பூச்சிகளை “முட்டை/Egg stage” பருவத்திலோ “கூட்டுப்புழு/Pupa stage” பருவத்திலோ அழிக்க வேண்டும்.

ஆதலினால்,

நுளம்பு, இலையான் ஆகியவற்றின் வாழ்க்கை வட்டத்தினை (Life cycle)
தானே தேடி ஒரு உயிரியல்துறை மாணவனை போலவோ இல்லை அதற்கும் மேலாக ஒரு பூச்சியியல் நிபுணர் (Entomologist) போலவே படித்து அறிந்து வைத்திருந்தார்.

ஒரு முறை மருத்துவபிரிவு போராளிகளாகிய எமை சந்தித்த போது அவருக்கு எதிரே இருந்த ஒரு போராளியிடம் இலையானின் வாழ்க்கை வட்டத்தினை சொல்லுமாறு கேட்டார்.

சற்றும் எதிர்பாராத கேள்விக்கணையால் மிரண்டு போன அந்த போராளியால் முழுமையாக சொல்ல முடியாத போது தமிழினம் போற்றும் எம் தலைவர் அதற்கான விடையினையும் தானே சொல்லி முடித்தார்!

ஆம், ஆழமான அகலமான நுண்ணறிவும் நூலறிவும் கொண்ட தலைவரின் ஆற்றல்கள் அளவிட முடியாதவை ஆகும்!

-வயவையூர் அறத்தலைவன் –