துரோண வதம்
————————–
துரோணர் ஒரு அந்தணர். அந்த அந்தணர் தன் புத்திரப்பாசத்தினால் தன் நெறி மாறுகிறார். பாஞ்சால மன்னனிடம் அவமானப்பட்ட பிராம்மணர் தன் நெறிமறந்து அஸ்தினாபுரத்திற்கு அடிமையாகிறார். தன் நெறியை கோபத்தினால் விட்டார். அதற்குக் காரணம் அவரது புத்திரபாசம்.
அந்தணரான அவர், அரசனுக்கு அடிமையானார். துருபதனை வெல்ல வேண்டும் என்றால் அவரே போரிட்டிருக்கலாம். அப்போது அவர் போரிடவில்லை. அப்போது ஆயுதம் ஏந்தாதது என்ன தர்மம்? தன் ஷத்ரிய மாணவர்களைக் கொண்டு துருபதனை வென்று பாதி நாட்டைப் பறித்து அவனை அவமானப்படுத்தினார். அதற்காக தன்னையே விற்று விட்டார். அன்று தன் பாசத்துக்காக துருபதனுக்கெதிராக வில் உயர்த்தி இருந்தால் அவர் இவ்வளவு பெரிய சங்கடத்தில் மாட்டி இருக்க மாட்டார். ஆனால் தன் மானத்துக்காக ஏந்தாத அஸ்திரங்களை எதற்காக ஏந்தினார்? தன் மகனுக்காகச் செய்யாத போரை பின்னர் தன் மகனுக்காகவே செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.
அவருடைய மரணத்தையும் கண்ணனே திட்டமிடுகிறான்.
அந்த நொடியில் எது தர்மம் என யோசிப்பவன் சாதாரண மனிதன். ஆனால் கண்ணன் அப்படியல்ல. அவன் எது தர்மம் என விளக்கப் பிறந்தவன்.
தர்மம்.
பிள்ளைப் பாசத்தினால் பிராம்மணத்துவம் விட்டார் துரோணர். இது அவர் பரசுராமருக்குச் செய்யும் துரோகமல்லவா? பரசுராமர் தன்னுடைய ஆயுதங்களை துரோணருக்குத் தானமளித்தார். அந்த ஆயுதங்களை ஷத்ரியர்களைக் காக்க அவர் உபயோகிக்கலாமா?
பிள்ளைப் பாசத்தினாலேயே துரோணரின் பாவங்கள் தொடங்குகின்றன. தொடர்கின்றன. அந்தப் பிள்ளைப் பாசமே அவருக்கு எமனாய் அமைவதுதானே தர்மம்? அதைத்தான் கண்ணன் செய்கிறான்.
துரோணர் எந்த ஒரு மன்னனிடம் சென்றும் பிச்சை கேட்டு தன் மகனை வளர்த்திருக்கலாம். துருபதனிடம் சென்று நட்பைக் காட்டிதான் பசு பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. தானமாக அளிக்க வேண்டிய கல்வியைத் தன்மானம் காக்க விற்றார். இவருக்கு முன் கல்வியை யாரும் விற்றதாக நான் அறிந்ததில்லை. அஸ்வத்தாமனை அரசகுமாரர்களுக்கு இணையாக வளர்க்க ஆசைப்பட்டார்.
பிள்ளைக்காக துருபதனைப் பகைத்து, தன் பிராம்மணத்துவத்தை விட்டு, அடிமையாகி, அதர்மத்தின் பக்கம் நின்றவர்… அதர்மங்கள் தன் கண்ணெதிரே நடந்தபோது கையாலாகதவராக நின்றவர்.
அதுதான் கண்ணனின் தர்மம். பிள்ளைக்காகச் செய்தவர் பிள்ளையின் பெயர் சொல்லியே மாய்க்கப்பட்டார்.
கீதையை ஆழமாகப் படித்து உணர்ந்து கொண்டபின் யுத்த அதர்மங்களை ஆராய்ந்தால் அதில் கண்ணனின் தர்மங்கள் புரியும்.
மற்ற எந்த வகை மரணமும், தர்மத்தை நிலை நாட்டி இருக்காது.