நாள் : 62
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
செய்யுள் : 2
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
பண்புகள் பல உண்டு.. பண்புகள், குணங்கள் எனச் சொல்லும்பொழுது நாம் நற்குணங்கள், நல்ல பண்புகளைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறோம்.
குணம் நல்லதாயிருந்தாலும் அவை சிலரால் பழிக்கப்படும். உதாரணமாக கொடுமை மீது கோபம் நல்ல குணமாயிருக்கலாம். ஆனால் எத்தனையோ வழி இருக்கும்பொழுது கோபம் கொள்ளுதல் என்பது பழி பெறும் குணமாக இருக்கிறது.
ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் குணங்களைப் பழி பிறங்காப் பண்புடை மக்கள் எனச் சொல்ல என்ன அவசியம் வந்தது என்பதை விளக்கத்தான்.
நற்குணங்கள் சில இப்படி பிறர் பழிக்கப்படுபவையாக இருக்கலாம்.
வள்ளுவர் பிறர் பழி சொல்லாமை என்பதை பலமுறை சொல்லி இருக்கிறார். ஆனால் இன்று இது சாத்தியமா என்பது தெரியவில்லை. காரணம் பழி சொல்வதுதான் வாழ்க்கை என பல அரசியல்வாதிகள் முளைத்து விட்டார்கள். எதற்கும் உள் நோக்கம் கற்பித்து பழி சொல்வது மட்டுமே அவர்கள் வேலையாக இருக்கும். எனவே அப்படிப்பட்ட அரசியல்வாதிகளைத் தள்ளி வைத்து விட்டு பார்ப்போம்.
மற்றவர் பழிக்காத பண்புகளை உடைய நற்குணங்களைப் பெற்ற மக்களைப் பெறவேண்டும்.
அப்படிப் பெற்றால் என்ன பலன்?
எழுபிறப்பும் தீவினைத் தீண்டாதாம்.
எழு பிறப்பு என்பதை மூன்று விதமாகச் சொல்லலாம்.
1. ஏழு பிறவிகள்
2. எழுகின்ற ஒவ்வொரு பிறப்பிலும்
3. ஒரறிவு பிறவி, ஈரறிவு பிறவி, மூவறிவு பிறவி, நாலறிவு பிறவி, ஐந்தறிவு பிறவி, ஆறறிவு பிறவி, தேவப்பிறவி
பண்புடைய மக்களைப் பெற்றால் உலகமே வளமாய் இருக்கும். அதில் நீ எப்பிறவி எடுத்தாலும் துன்பமில்லை. இதுதான் சுருங்கிய கருத்து.
மக்கட்பேறு பற்றிய இருகுறள்களில் பெறும் மக்களிடம் இருக்க வேண்டிய இரு முக்கிய விஷயங்கள்
1. அறிவுடைமை
2. பண்புடைமை