அறத்தலைவன் நாட்குறிப்பிலிருந்து.

தனிச்சிங்களச் சட்டம்,

பெளத்தம் அரச சமயமாக்கப்படல்,

இலங்கைக் குடியுரிமைச் சட்டம்,

கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்,

திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்,

அரச பயங்கரவாதம்,

யாழ் பொது நூலகம் எரிப்பு,

சிங்களமயமாக்கம் போன்றன ஈழவிடுதலைப் போராட்டம் கருவாகி உருவாகி வலுப்படுவதற்கான வலுவான காரணங்கள் ஆகும். 

நீதிநூல்களால் அதிகம் அதிகம் செதுக்கபட்ட புத்தி கொண்ட தமிழர்கள் ஆரம்பத்தில் அறவழியிலேயே தங்கள் உரிமைக்காக போராடினார்கள். 

அமைதி வழியிலான ஊர்வலங்கள்,கடையடைப்புப் போராட்டங்கள்,சாத்தியகிரகப் போராட்டங்களை சிங்கள அரசு ஆயுத வழியில் மிக மோசமான முறையில் அடக்கி ஒடுக்கி இரத்தக்களரியை ஏற்படுத்தியது. 

அதன் பின்னர் தமிழர்கள் வேறு வழியைத்தேடிய போதுதான்  ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது  .

மாங்கனித்தீவில் ஈழத் தமிழர்களின் கொரில்லப் போராடடம் மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து மரபு வழி இராணுவமாக பரிணமித்தது.

முதற்கட்டமாக தமிழர்களின் சேனை வெறிகொண்டலைந்த சிங்கள இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கினர்.

 பின்னர் ஒவ்வொரு இராணுவ முகாம்களாக முற்றாகத் தாக்கி அழித்தனர்.  கோட்டை,கொண்டைச்சி,

கொக்காவில் இராணுவத் தளங்கள் 1990 ஆம் ஆண்டு முற்று முழுதாக வெற்றிகொள்ளப்பட்டது. 

அதே போல 1991ஆம் ஆண்டில் யாழ் குடாநாட்டின் திறவு கோலாக இருந்த ஆனையிறவு நிலப்பரப்பில் அமைந்திருந்த படைத்தளம் தமிழர் சேனையான புலிகளால் தாக்கப்பட்டது. ஆனால் வெற்றி கொள்ளப்பட முடியவில்லை. 

2000 ஆம் ஆண்டு மலர்ந்த போது முன்னைய தோல்வி தந்த படிப்பினைகளை நினைவில் வைத்து தமிழர்களின் தலைவர் மேதகு திரு.வே பிரபாகரன் அவர்கள் புதிய திட்டத்தை தீட்டினார். 

அதன்படி தலைவர் கடற்புலிகளின் உதவியுடன் பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் 1200 போராளிகளை  ஆனையிறவுக்குத் தென்கிழக்கேயுள்ள குடாரப்பில் தரையிறக்கிவிட்டார்.

அந்த 1200 பேர் கொண்ட படையணிகளுக்கு ஓர் களமருத்துவராக செயற்படும் வாய்ப்பு  அடியேனுக்கும் கிடைத்தது.

35 நாட்கள் கடுமையான வலிந்து தாக்குதல் ஒன்றை எதிரியின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்துக்குள் நடைபெற்றது.

கடல்வழியாக தரையிறங்கிய நாங்கள் ஒவ்வொருவரும் தரைவழியாகவே வன்னி செல்வோம் என்று உறுதி எடுத்தோம். 

அதே போல ஆனையிறவு மண்ணில் வீழ்ந்து #முத்தமிட்டு_வணங்கி_தரைவழியூடாகவே திரும்பினோம். 

முதுபெரும் மகளிர் தளபதிகள் இருவர் உட்பட தமிழர் சேனையின் #சோதியா_படையணியும் #மாலதி_படையணியும் முற்று முழுதாகவே தரையிறக்கத்தில் பங்கெடுத்து பகைவென்ற சம்பவம் தமிழர் வரலாற்றில் மகத்துவம் பெற்று நிற்கிறது.

மிக நெருக்கமாக நடைபெற்ற சமரில் இரவைகள் தீர்ந்து போன நிலையில் பகவனை #வெற்றுத்_துப்பாக்கிகளால்_அடித்து_வீழ்த்திய சம்பங்கள் நடைபெற்றதை #துர்க்கா_அக்கா பின்னாளில் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

லெப் கேணல் நிஸ்மியா எங்கள் அருகில் நின்றுகொண்டு களத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார். வெறும் ஆறுபேர் கொண்ட எங்கள் பிரதான மருத்துவநிலை ஓய்வின்றி செயற்பாட்டுக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு களத்தில் நின்ற மூன்று பெண் போராளிகளை மருத்துவ உதவிப்பணிக்காக தந்தார்.  

வஞ்சினம் கொண்ட நெஞ்சினராக தென்திசையிலிருந்து நகர்ந்த  தமிழர் சேனையின் ஜெயந்தன் படையணி “#இரும்புக்கோட்டை”என சிங்கள தேசத்தால் வருணிக்கப்பட்ட தளத்தின் மையப்பகுதியைக் கைப்பற்றி இருந்தனர்.

பெரும் ஆற்றல் கொண்ட சமர்க்கள நாயகனின் தலைமையில் வீரச்சாவு அடைந்த 

நம் தோழர்களை ஒரு தோளிலும் வெற்றியை மறு தோளிலும் சுமந்து வந்தோம். 

300 ஆண்டுகளுக்கு மேலாக போர்த்துகேயன், ஒல்லாந்தன்,ஆங்கிலேயன் சிங்களன் என  மாறி மாறி எமை அடிமைப்படுத்தி ஆண்ட அந்நியர்களின் கோட்டையாக விளங்கிய ஆனையிறவு  தமிழன் கையில் வீழ்ந்த போது சிங்களம் திகைத்து நின்றது. சர்வதேசம் வியந்து நின்றது. மாற்றுக் கொள்கையாளர் எனத் தம்மை அடையாளப்படுத்திய தமிழர்களும் வண்ணமிகு வாழ்த்துக்களை வன்னிக்கு அனுப்பி வைத்தனர். 

-வயவையூர் அறத்தலைவன்-