வயாவிளானை விட்டு இடம்பெயர்ந்து உரும்பிராய் இந்துக் கல்லூரியில் வயவன் அன்னையாம் மத்திய மகா வித்தியாலயம் கொட்டில் அமைத்துக் குடி கொண்ட காலம்.
சிதறிய உறவுகள் யாவும் கல்வி எனும் புள்ளியில் மீண்டும் ஒன்று குவிந்த நேரம். ஈவினை, ஊரெழு, குப்பிளான், கட்டுவன், புன்னாலைக் கட்டுவன் என பல்லூர் உறவுகளுடன் சிறகடிக்க வாய்ப்பாக அமைந்த தங்கயுகம்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஈகமும் ஈரமும் நிறைந்த திடமான நெஞ்சு கொண்ட தலைமையாசான் அமரர்.ஆசி.நடராஜா அவர்களும் அவர் தம் வழிகாட்டலில் மிளிர்ந்த கர்மவீரர்களான ஆசிரியப் பெருந்தகைகளையும் தந்த அறுவடைக்காலம்.
வித்தியாலயம் செல்லும் போழுதுகளில் அந்த அக்காவைக் காண நேரும். சராசரியை விட அதிக உயரம் கொண்டவர். சில குறும்புக்கார நண்பர்களின் சினேகமான பகிடிகளை மென்மையான புன்னகையுடன் வாங்கிக் கொண்டு அமைதியாகக் கடந்து செல்வார் அந்த அக்கா.
அவருடைய அமைதிக்குள் அமிழ்திருப்பது அவமானம் என்றுதான் அப்போது எண்ணினேன். அவன் முகத்தில் பூப்பது புன்னகை அல்ல புண்ணகை என்றுதான் பொருள் கொண்டேன்.
காலக்காற்றில் சருகாகப் பறந்து திரிந்து, விசித்திரமான விதையாக வீழ்ந்து மரமாகி நிமிர்ந்தால், அந்த அக்கா சாதனைகளில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.
அன்று நான் புண்ணகையாக நினைத்தது புன்னகைதான் என்று உணர்த்தியது புன்னகை சிந்துவதை இன்றும் நிறுத்தாத அந்த முகம்.
அமைதிக்குள் அமிழ்ந்திருப்பது அவமானம் என்ற அன்றைய என்னை மாற்றியது இன்றைய அவருடைய அமைதி..
ஆம்.. மாவட்ட, மாகாண, நாடளாவிய, சர்வதேச என சகல இடங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஶ்ரீலங்காவின் தேசிய வலைப்பந்தாட்ட அணியில் தவிர்க்க முடியாத வீரராகி, அவ்வணிக்கு வெற்றிக்கனிகளைப் பறித்துக் கொடுக்கும் எமது கல்வியாலயத்தின் பழைய மாணவி தர்ஜினி சிவலிங்கம் அவர்களே அவர்..
இவர் கூட வயவையின் பெருமிதம் என்றால் அதை எவராலும் மறுக்க முடியாது.
வளரும்..,