துன்பங்கள் நீங்காவிடினும் அவற்றைத் தாங்கும் சக்தியைக் கொடு.

தீவிர பொது வாழ்வு எனக்கு அளித்த வெகுமதியாக தென்னிலங்கையில் வாடினேன்.

அந்தக் காலகட்டத்தில் வாசிக்க ஏதாவது பொத்தகங்கள் தாருங்கள் எனக் கேட்டால் தருவார்கள்.

அங்கே உள்ள நூல் நிலையத்துக்கு செல்லவும் சில வேளை அனுமதி தருவார்கள்.

எமக்கு பிடித்தமான பொத்தகங்களை
எடுத்து வந்து கூண்டிலிருந்து வாசிப்போம்.

அங்கே சாண்டில்யன் எழுதிய “கடல்புறா” இருக்காது.

கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” இருக்காது.

ஒரு வேளை அந்த பொத்தகங்கள் மீண்டும் எங்களில் ஒரு புரட்சியை உண்டுபண்ணிவிடும் எனும் நினைப்பு அவர்களுக்கு இருக்கலாம்.

அங்கே மதநூல்களும் சில அறநூல்களும் இருக்கும்.

ஓசோ எனப்படும் ரஜனீஷ் சுவாமியின் “தந்திரா” உட்பட அவரின் அனைத்துப் பொத்தகங்களும்  உண்டெனவே உண்டு.

பகவத்கீதை, பைபில், திருக்குர்ஆன் ஆகியவற்றை எடுத்து வாசிப்போம்.

அந்த நேரம் அடியேனுக்கு ஆறுதல் தந்த வாக்கியங்களை,பிடித்த வரிகளை மனனம் செய்வேன்.

அந்த வகையில் என் மனதில் ஒட்டிக் கொண்ட குர்ஆன் வரிகளில் ஒன்றினை அண்மையில் நினைவு மீட்டிக் கொண்டேன்.

அதை முழுமையாகத் தேடினேன் கிடைத்தது.

உங்களுக்காய் கீழே தருகின்றேன்.

“அளவற்ற துன்பங்களை எமக்களித்த அல்லாவே, துன்பங்களை நீக்காவிடினும் அவற்றை தாங்கும் சக்தியை எமக்குக் கொடு.”

– குர்ஆன் –