சேதாரமற்ற வாழ்வே செய்கூலி..

283

வாகன விற்பனை முகவர் நிறுவனத்தின்  வாகனத் திருத்தப் பிரிவில் பணிக்குப் போகிறான் ஒருவன். அவனுடைய பணி ஈடுபாடும் கடின உழைப்பும் அந்நிறுவன முதலாளியைக் கவர அவன் மேல் பிரியம் கொள்கிறார் முதலாளி.

கற்ற வாகனத் தொழில்நுட்பமும் பெற்ற அனுபவமும் இணைந்து  ஒரு புதிய வாகனத்தை உருவாக்க முடியும் எனும் நம்பிக்கையை அவனுக்குள் பிறப்பித்தன. தயங்கித் தயங்கி முதலாளியிடம் விடயத்தை சொன்னான்.

அவன் மேல் கொண்ட பிரியமும் நம்பிக்கையும் முதலாளியை அவனோடு உடன்பட வைக்க, புதிய வாகன மாதிரி உற்பத்தி துவங்கியது. அல்லும் பகலும் அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தான். வாகனம் தயாரானது.

அழகு, அமைப்பு, கவர்ச்சி, நுட்பம் என எல்லாம் சிறப்பாக இருந்தது. முதலாளியும் பணியாளர்களும் மகிழ்வில் திளைத்தனர். வாகனத்தை வெளியே கொண்டு வந்து தெருவில் ஓட்டிப்பார்க்க ஆசைப்பட்ட போது சிக்கல் ஒன்று எழுந்தது.

தொழிற்சாலை வாயிலின் உயரத்தை விட வாகனம் சற்று உயரமாக இருந்தது. வாயிலை இடித்து விட்டுப் பிறகு கட்டலாம் என்றார் முதலாளி.. இல்லை, தேவையில்லை.. வாகனத்தை அப்படியே கொண்டு செல்வோம். கூரை மட்டும் சேதமாகும்.. அதைப் பிறகு சரி செய்யலாம் என்றார் பெயிண்டர்.

முதலாளிக்கோ அதில் உடன்பாடில்லை. அப்போது ஆலைக்காவலாளி  “சக்கரங்களில் உள்ள காற்றைப் பிடுங்கிவிட்டு வாகனத்தை தள்ளி வெளியே எடுப்போம். பின் காற்றை நிரப்பி வெள்ளோட்டம் பார்க்கலாம்” என்றான். அவ்வாறே செய்யப்பட்டது.

கஷ்டப்பட்டுக் கட்டிய வாழ்க்கையில் கவனக் குறைவாக தவறு நேரலாம். அதைக் கூர்ந்து கவனித்தால் சேதாரமில்லாமல் வாழ்வைப் பேணலாம்.