நாளொரு குறள் – 60

நாள் : 60
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
செய்யுள் : 10

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

மங்கலம் என்றால் என்ன?

மங்கலம் என்றால் புனிதமானது. நன்மை தருவது. சிறப்பு சேர்ப்பது. இன்பம் தருவது. இனிமையானது. நல்லது.

திருமணத்தை கல்யாணம், மங்கல காரியம் என்பார்கள்.

காரணம் இருக்கிறது. கல்யாணம் என்றால் நன்மை தருவது என்றே பொருள். பிறப்பின் நோக்கமே பிறருக்கு உபகாரம் செய்வதுதான் என்பது நமது அடிப்படைச் சித்தாந்தம்.

பிறருக்கு அறம் செய்ய முக்கிய தேவை இல்லறம். அந்த இல்லறத்தை ஏற்படுத்தித் தருவதால் கல்யாணம், மங்கல காரியம் என்கிறோம். இதனாலேயே பூப்படைதல், திருமணம் ஆகியவை விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. காரணத்தை இந்தக் குறளில் சொல்கிறார் வள்ளுவர்.

மனையராக பெறும் இணையரின் குணமே மங்கலமானதாகும். அவரின் நற்குணமே இல்லறத்தைச் சிறப்பு பெற வைக்கும். சிறந்த குணமற்றவரை மனைத் துணையராகப் பெற்றால், இல்லறம் இல்லா அறமாகி விடும்.

மனையாளின் குண நலனே நன்மை தருவதாகும். அதுவே மனைக்கும் உலகிற்கும் நன்மை தருவதாகும்.

அதற்கு அணிகலன் பூட்டி அழகாக்குவது நன்மக்கட் பேறு.

நல்ல மக்களைப் பெறாத வீடு அழகற்றுப் போகிறது. சுபமற்றுப் போய்விடுகிறது.

நல்ல மக்களைப் பெறுவது எதற்காக?

பரோபகாரார்த்தம் – பிறருக்கு உதவுதல் பொருட்டு..

தான் பிறந்ததும் பிறருக்கு உதவுதல் பொருட்டு. குழந்தைகளைப் பெறுதலும் பிறருக்கு உதவுதல் பொருட்டு.

மனைக்கு மங்கலம் சேர்ப்பது குணமுள்ள துணை. அதற்கு அழகு சேர்ப்பது நல்ல குணமுள்ள குழந்தைகள்.

இரண்டு குறள்களுக்கு முன்புதான் சொன்னார்.. பெற்றார் பெறின் பெறுவர் என.

பெற்றவர் குணமுள்ளோர் எனில் பிறக்கும் குழந்தைகளும் குணமுள்ளவராகவே இருப்பர்.

ஆக தான் நல்ல குணமுள்ளவனாக இருக்க வேண்டும். குண நலம் கொண்ட மனைவியைத் தேடிப் பெற வேண்டும். அதற்குச் சிறப்பு சேர்க்கும் அணிகலனாய் நல்ல மக்களைப் பெறவேண்டும் எனச் சொல்கிறார் வள்ளுவர்.

மக்கட் பேறை குடும்பத்தின் அணிகலன் என அடுத்த அதிகாரத்தை இங்க்கேயே ஆரம்பித்து சுழி போட்டு வைக்கிறார்.