புல்லானாலும்

915

அருகம்புல், சீமைப்புல், கோரைப்புல் என புற்களில்தான் எத்தனை வகை.. வரப்புப்புல் மீது செருப்பில்லாமல் நடக்கும்போது உள்ளங்காலின் குறுகுறுப்பால் உச்சந்தலையில் உள்ள மூளை கிளர்ந்து வளருமாம். அறிவியல் உண்மை இது.

இதில் அருகம்புல்லுக்கு கொஞ்சம் சமூக அங்கீகாரம் உண்டு..
அருகு போல் தழைத்து… என்பது வாழ்த்து மொழி.
அப்புறம் விநாயகனுக்கும் நெருக்கம் …
மற்றபடி புல்லர்கள், புல்லுருவிகள் என்று இழித்துப் பேசவும் புல்லின் பெயர் உதவும்.
கருவாச்சி காவியத்தில் வைரமுத்து சொல்கிறார்..
கானம்,மொச்சை,துவரை என்று விதைத்து வளர்வது மதி..
விதைக்காமலே மழை கண்டு பூமி கிளர்ந்தவுடன் மண்டி வளரும் புல் போன்ற களை எல்லாம் விதி…
மதியை வைத்து விதியின் செயலைக் களை எடுக்கிறாள் கருவாச்சி..

புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா…

எத்தனை அழகான காட்சி..
மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே…

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…

மூங்கிலும் ஒரு வகை புல்தானே…
அதனால்தான் மூங்கில் தரும் இசைக்கருவிக்கு புல்லாங்குழல் என்று பேர் வந்ததோ?

பாரதியின் மனசைக் கவர்ந்த வால்ட் விட்மன் புல்லைப் பற்றி விதம் விதமாய் கவிதைகள் தந்திருக்கிறார்…

புல்லின் இதழ்கள் என்ற கவிதைத் தொகுப்பில் விட்மனின் வரிகள்..
இப்புல்
தாவர உலகின் குழந்தைகளோ?
குறுகிய இடத்திலும் பரந்த வெளியிலும்
கருப்பர் வெளுப்பர் எவரிடையேயும்
எங்கும் வளர்ந்து
எவரும் சமம் எனும்
அர்த்தம் சொல்லும்
அழகிய எழுத்துகளோ?
புதைத்த உடலில்
பூத்த ரோமங்கள்
பூமி மேல் வந்தனவோ?

புல்லைக் கொடுத்தா பாலு கொடுக்கும்
உன்னால முடியாது தம்பி…

புல் பூண்டும் முளைக்காத வறட்சி வந்தால் கன்று மாடுகளுக்கு
என்ன போடுவது என்ற கவலையில் விவசாயி பஞ்சம் பொழைக்கப் போய்விடுவான்.
புல்லும் கொள்ளும் குதிரைக்கு..
புல்லும் புண்ணாக்கும் மாட்டுக்கு..
மேயற மாட்டை நக்குற மாடு கெடுத்தது என்பது பழமொழி..
நுனிப்புல் கடித்து மேயும் மாடு மேய்ந்தால் புல் மீண்டும் அங்கு வளரும்.
அடியோடு கடிக்கும் ஆடு மேய்ந்தால் அடுத்த வளர்ச்சிக்கு ஆபத்து…
சிறு வயதில் நான் கேள்விப்பட்டது.
மனிதன் நடந்த தடத்தில் ஏனோ புல் வளருவதில்லை.

புல்லுக்கட்டு தூக்கிக்கிட்டு துள்ளி துள்ளி நடக்கும்போது
மல்லுக்கட்டத் தோணுதடி மாமனுக்கு..
பாட்டு வேண்டுமானால் காதல் சுவை..
நிஜத்தில் வீட்டு அடுப்பெரிய புல் அறுத்து சுமந்து விற்கும்
நம் நாட்டு தாய்களின் வயிற்றுச்சுமை சொல்லும் இந்தத் தலைச்சுமை!

அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா?
கபடி ஆடும்போது புல்ல்லின் வேர் அறுத்து கட்டை விரல் அறுபட்ட வீரனைப் பார்த்தனால் இந்த கேள்விக்கு என் பதில் ‘ஆமாம்’ என்பதுதான்!!!!

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான்.. ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர், உடனே அதை வேரோடு பிடுங்கி, எரித்து சாம்பலாக்கி – கரைத்துக் குடித்தாராம்…. எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.

கேவலம் புல்தானே – இதில் என்ன அந்த வகை..இந்த வகை என்று சாமான்யர்கள் நாம் அதை மிதித்து நடந்தாலும் – ஒரு வகைப் புல்லை ‘’Aegilops incurva, Aegilops incurvata அல்லது Aegilops ovata’’ என்று தாவரவியல் மாநாட்டில் நடக்கும் சண்டை ஒகனேக்கல் எல்லைப் பிரச்னையைவிட சூடு அதிகம்.

பிரச்சினை என்னவென்றால், குறைந்த பட்சம் 5000 வகையில் புல்லினங்கள் இருக்காம்.
புல்லியலில் பெரும்புள்ளிகளே இதை வகைப்படுத்துவதில் நிறைய குழம்பிப் போவார்களாம். ஆதனால் சில வகை புற்களை பல தேசங்களில், பல இடங்களில் பலர் கண்டுகொண்டு ஒரு இனத்துக்கே பலமுறை பெயர் சூட்டிவிட்டார்கள்.
அமெரிக்க தாவரவியல் துறை இந்தக் குழப்பம் தீர்க்க, 200 பக்கங்கள் கொண்ட இரு தொகுதிகளை புற்குடும்ப பிரஜைகளுக்காக வெளியிட்டிருக்கிறது.
‘ ’Manual of the Grasses of the United States” என்று… இது அந்த ஒரு நாட்டின் புல் கணக்குதான்..
நம் பாரத தேசத்து புல்லையும் சேர்த்தால் இன்னும் எத்தனை தொகுதிகள் சேரும்?
நினைத்தாலே புல்லரிக்கிறது!