டைக்கோ ப்ராஹே ( Tyco Brahe ) 1546 – 1601
ஜொஹான்னஸ் கெப்ளர் ( Johannes Kepler) 1571 – 1630
அரச குடும்பத்தில் பிறந்தாலும் அறிவியல் தாகம் கொண்டு
உறக்கம் துறந்து உழைத்து வானியலில் புது மைல்கல்லை நட்டவர்
இந்த இரட்டை நாயகரில் மூத்தவரான டைக்கோ ப்ராஹே.
வென் என்னும் பால்டிக் தீவில் அருமையான வானியல் அவதான மையம் அமைத்தார்
ப்ராஹே.
கோபர்னிக்கஸ் சொன்னபடி துல்லியமாய் அதே பாதையில் இல்லாமல் கோள்களும் நட்சத்திரங்களும் சற்றே பாதை மாறிச் சுற்றி வருவதைக் கண்டார்.
அந்த பாதைகளை ஆய்வதையே முழு வாழ்நாளின் லட்சியமாய்க் கொண்டார்.
1572ம் ஆண்டு. நவம்பர் 11. நள்ளிரவு . துடைத்துவைத்தாற்போல் வானம்
அத்தனை தெளிவாய் துலங்கும் நேரம். அப்போது ஒரு ‘ புதிய நட்சத்திரம்’
மிகப்பிரகாசமாய் ஜ்வாலை விட்டு எரிவதைக் கண்டார் ப்ராஹே. இப்படி
அதீதமாய் ஒளிரும் விண்மீனுக்கு நோவா ( Nova) என்று பெயர்.
15 மாதங்கள் தொடர்ந்து அந்த மிக ஒளிர் நட்சத்திரத்தை விடாமல் கவனித்து,
அதன் வண்ணம், பிரகாசம் மாறுவதை ஆராய்ந்து ஒரு நூலாய் வெளியிட்டார்.
ப்ராஹே கண்டு சொன்ன அந்த பிரகாச நட்சத்திரம் புதிதாய் உதித்த ஒன்றல்ல.
பழைய நட்சத்திரம் ஆயுள் முடிந்து பிரம்மாண்டமாய் வெடித்து, முழுதாய் அழியும் முன்னே
மகா வெளிச்சம் காட்டிய நிகழ்வுதான் அது.
1577-ல் மகா வால்நட்சத்திரத்தை ஆராய்ந்து சொன்ன ப்ராஹேவின் பங்களிப்பு
இன்னும் சிறப்பானது. பூமியில் இருந்து வால்நட்சத்திரம் எத்தனை தூரம் இருக்கும்
என கணக்கிட ப்ராஹே என்ன செய்தார் தெரியுமா?
பல நட்சத்திரங்களுக்கும் இந்த வால்நட்சத்திரத்துக்கும் இருக்கும் இடைவெளியை
ஐரோப்பாவின் பல்வேறு இடங்களில் இருந்து அளக்கச் சொல்லி ஆளனுப்பினார்.
திடமான , ஆனால் எளிமையான தொலைநோக்கிகள் செய்யும் திறமை அவருக்கு
இருந்தது. ஆளனுப்பும் அளவுக்கு செல்வமும் இருந்தது.
எங்கிருந்து கண்டாலும் வால்நட்சத்திரத்துக்கும் ஏனைய நட்சத்திரங்களுக்கும் இடையே
உள்ள தூரம் ஒன்றே போல் இருந்தது. எனவே வால்நட்சத்திரங்கள் நிலவுக்கும் அப்பால்
வெகுதொலைவில் உள்ளவை என்று நிறுவினார். அதுவரை மேகக்கூட்டத்தின் சற்று மேலே
தூளி ஆடுபவையாக வால்நட்சத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுவந்த ‘கட்டுக்கதையை’
ப்ராஹே உடைத்து எறிந்து சாதனை படைத்தார்.
—————————————————
அடுத்து வருபவர் ப்ராஹெயின் சிஷ்யர் – கெப்ளர்.
‘மத விரோதி’ எனக் குற்றம் சாட்டப்பட்டு, அதிகாரத்தால் தேடப்பட்ட
‘குற்றவாளி’ கெப்ளர். எனவே பிறந்த ஜெர்மனியை விட்டு ப்ராக்கில் (Prague)
தஞ்சம் புகுந்தார் கெப்ளர். போய்ச்சேர்ந்த இடம் பிராஹேவின்
வானியல் ஆய்வுக்கூடம். 1601 -ல் குரு வகித்த தலைமைப்பொறுப்பை
ஏற்ற கெப்ளர் குருவை மிஞ்சிய சிஷ்யர் ஆனார்.
இயல்பிலேயே கணித மேதை கெப்ளர்.புதிர்க்கணக்குகளில் புலி.
அவருக்கும் புரியாத புதிர் இருந்தது . கோள்களின் சுற்றுப்பாதைகள் ஏன் இப்படி
ஒரு வடிவில் இருக்கின்றன? ஒரு சுற்று சுற்றிவர இத்தனை நேரம் ஆவது எப்படி ?
பலப்பல ‘மாடல்கள்’ செய்து சுற்றிவர வைத்து மண்டையை உடைத்துக்கொண்டார்.
தோல்விகள்.. மீண்டும் தோல்விகள்.. துவளவில்லை கெப்ளர்.
விடாமல் முயன்று இறுதியில் உண்மையை அறிந்தார்.
2000 ஆண்டுகளாய் கோள்கள் வட்டப்பாதையில் சுற்றுகின்றன
என்ற செக்குமாட்டுச் சங்கிலித் தத்துவத்தை முறித்தெறிந்தார்.
நீள்வட்ட ( Oval orbit) சுற்றுப்பாதையை கெப்ளர் கண்டறிந்து
சொன்னதும் பல உண்மைகளுக்கு விளக்கம், தெளிவு பிறந்தது.
சூரியனை நெருங்கும்போது கோள்கள் வேகமாய்ச் சுற்றுவது பற்றி
விளக்கியவர் அவரே. சூரியனுக்கும் கோள்களுக்கும் உள்ள தூரம்தான்
சுற்றி வரும் காலத்தை நிர்ணயிக்கிறது என ஒரு கோட்பாடு தந்தவரும் அவரே.
வால்நட்சத்திரம் இருக்கும் இடம் தொலைதூரம், மேகத்துக்குப் பக்கம் அல்ல
என்று சொன்ன குரு ப்ராஹேவும்,
வட்டம் அல்ல – நீள்வட்டமே கோள்களின் சுற்றுப்பாதை என்று கண்டு சொன்ன
சிஷ்யர் கெப்ளரும் –
ஆயிரமாண்டு ‘தப்புக் கொள்கைகளை’ தகர்த்த சாதனை வீரர்கள்.
ஆதலால் இந்த மைல்கல்லின் இரட்டை நாயகர்கள்..