முதலாவது சந்திர குப்த மௌரிய மன்னனின் அரச சபையில் பிரதம அமைச்சராக விளங்கியவர் சாணக்கியர்.

ஒரு சாம்ராஜ்யம் நிலை பெற்று நீடுழி வாழ்வதற்கு பேரரசன் அறிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான இராஜதந்திரங்களை “அர்த்தசாஸ்திரம்” என்னும் நூலாக எழுதியவர் சாணக்கியர்.

இம்மாமேதை சந்திரகுப்த மன்னன் காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவராகவும் அதிகாரம் கொண்டவராகவும் விளங்கியவர்.

ஒருமுறை மன்னன் ஏழைகளுக்கு வழங்க கம்பனித் துணிகளை சாணக்கியரின் இல்லத்திற்கு அனுப்பினான். இச் செய்தியை அறிந்து சில திருடர்கள் நள்ளிரவில் சாணக்கியர் வீட்டிற்குள் நுழைந்தனர்.

ஆனால் அங்கு சாணக்கியரும் தாயாரும் கிழிந்த பாய் மீது பழைய கம்பளி ஒன்றைப் போர்த்தியபடி உறங்கிக்கொண்டிருந்தனர். கம்பளி மோசமான நிலையில் கிழிந்திருந்ததால் குளிரில் நறுக்கிக் கொண்டிருந்தனர்.

இதனால் ஆச்சரியம் அடைந்த திருடர்கள் சாணக்கியரை எழுப்பி ஐயா எங்களை மன்னிக்கவும். கம்பளிகளை திருடுவதற்காகவே வந்தோம். நீங்கள் ஏன் புதிய கம்பளிகளை பயன்படுத்தவில்லை?. என்று கேட்டனர்.

சாணக்கியர் புன்கையுடன் “இவையாவும் ஏழைகளுக்கு கொண்டுவரப்பட்டவை. அவர்களே இவற்றுக்குச் சொந்தக்காரர்கள். இவற்றை நான் எடுத்தால் நானும் திருடன்தான்.”என்றார்.

இதைக் கேட்ட அத்திருடர்கள் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு இனிமேல் திருடமாட்டோம் என்றும் உறுதியளித்தனர்.

இதனையே சுவாமி விவேகானந்தர் “இலட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் ஒரு தலைவனாக இருக்க முடியும் “. என்றார்.0