சித்திரை மாதத்தில், குறிப்பாக சித்திரை ஒன்றில் வயவையில் இருந்த அம்மன் கோவில்களில் கூழூற்றல், சித்திரைக்கஞ்சி கொடுத்தல், மடை சாத்தல் போன்ற தொன் தமிழனின் வசந்த விழாவின் கூறுகள் நிகழ்ந்தேறி உள்ளன. அவை அனைத்தும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், வசந்த விழாவின் சிதைக்கப்பட்ட வடிவத்தைக் காணலாம்.
ஆண்டு முழுக்க தன்னைத் தேடி வந்த குடிமக்களை, சித்திரைத் திங்களில் தான் தேடிச் செல்லும் கண்ணகை அம்மனின் கோவிலில், வயவைக் குடிகளின் காணிக்கையைக் கொண்டு சித்திரைக் கஞ்சி வடித்துக் கொடுக்கும் நிகழ்வு நம்மில் பலருக்கு நினைவில் இருக்கும்.
சிவன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும் காளி கோவிலின் வேள்வியும் அனைவருடைய மனங்களிலும் சித்திரமாய் கீறப்பட்டிருக்கும். அதே போல என் நினைபேட்டில் ஆழமாகப் பதியப்பட்டிருப்பது மலட்டுப் பேத்தி அம்மனுக்குச் சாத்தப்பட்ட மடை.
மலட்டுப் பேத்தி அம்மனைக் குல தெய்வமாகக் கொண்டவர்கள் மட்டும் அல்லாது அக்கோவிலை அண்டிய பகுதியில் வாழும் பலரும், இன்னும் பல வயவை மக்களும் இணைந்து மடைசாத்தி அம்மனைக் கொண்டாடி மகிழ்ந்தனர். சந்ததிகள் தொடர வேண்டும், சந்ததிகள் வளர வேண்டும், சந்ததிகள் வாழ வேண்டும் எனப் பல வேண்டுதல்களோடு சாத்தப்படும் இம்மடைக்காலம் மனசுக்கு இதமான மழைகாலம்.
சித்திரை ஒன்றுக்கு மூன்று நான்கு நாட்களுக்கு முன்னரே பனை வார்ந்து கடகம் பின்னத் துவங்கி விடுவார்கள் ஆண்கள். பெண்களோ அக்கடகங்களை நிரப்பும் அளவுக்கு பலகாரங்களைச் சுடத் தொடங்கி விடுவார்கள். அடடா… ரக ரகமான பலகாரங்கள்.
இடிச்ச பச்சரியும், தெங்காய்ப்பாலும் கலந்து மனம் போல் பொங்கும் பால்ரொட்டி.. வித வித வடிவங்களில் சுடப்படும் முறுக்குகள்.. நாவினிக்கும் சுவையில் அரியதரம்.. உடலுக்கு உறுதி சேர்க்கும் பயறில் செய்யும் பயிற்றம் பணியாரம்.. சூட்டைத் தணித்து உடலுக்குக் குளுமை தரும் உளுந்தில் சுட்ட வடை.. இவை எல்லாம் கடகக் கணக்கில் மடைக்காக செய்யப்படும் ஆரோக்கியமான பலகாரங்கள். இப்பலகாரங்களுடன் பொங்கலும் வைக்கப்படும்.
மலட்டுப் பேத்தி அம்மனை குல தெய்வமாகக் கொண்டவர்களின் ஆணடி வீட்டிலிருந்து பொங்கல் பானையும் பொங்கல் அரிசி உட்பட்ட பொங்கல் பொருட்களும் கொண்டு வரப்படும். இப்பானை வழந்துப் பானை என அழைக்கப்படும். வழந்து பானையை ஒருவர் சுமந்து வர, அவரைத் தொடர்ந்து பலகாரக் கடகங்களை சும்மாட்டில் வைத்து பெண்கள் சுமந்து வருவார்கள். முக்கனிக் கூடைகளும் அவற்றுடன் கலந்திருக்கும்.
அவர்களோடு தமிழரின் பாரபரிய கலை வாத்தியமான பறை முழங்கி வரும். சில நேரங்களில் இளம்பெண்களில் கோலாட்டம் கூட வரும். இக்கோலாட்டமும், பறையும், பொங்கல் பானையும் வசந்த விழாவிலும் உண்டு. அதனால் அவை முறையே, வசந்தன் ஆட்டம், வசந்தன் அடி, வசந்தன் பானை என்றழைக்கப்பட்டன. இவை மருவி வழந்தாட்டம், வழந்துப் பானை, வசந்தனாட்டம் எனப்படுகின்றன என்றும் சொல்கிறார்கள் வயவையின் மூத்த குடியினர்.
இவ் ஆணடியினரின் கோவில் நோக்கிய வலத்தில், பெண்ணடிச் சந்ததியினரும் அண்டை அயலவர்களும் பலகாரக் கடகங்கள், பொங்கல் பானைகளுடன் சேர்ந்து கொள்ள மடை சாத்தல் களை கட்டும்.
கோவிலை வந்தடைந்ததும் ஆணடியினர் அடுப்பு மூட்டி வழந்துப் பானை வைத்து வழந்துப் பொங்கல் வைப்பர். இப்பானை பொங்கி ஊற்றும் வரை மறை முழங்கிக் கொண்டிருக்கும். வழந்துப் பொங்கல் பொங்கி முடிந்ததும் பெண்ணடியினர் பொங்கல் பொங்க, அவர்களைத் தொடர்ந்து அண்டை அயலவர்கள் பொங்கல் பொங்குவர்.
அனைவரும் பொங்கி முடிந்ததும் கொண்டு வந்த பலகாரக் கடகங்களும் முக்கனிக் கூடைகளும், பொங்கலும் கோவில் வாசலில் நீட்டுக்கு வைக்கப்படும். குலதெய்வமாகக் கொண்டோரில் ஒருவர் அம்மனுக்கு பூசை வைத்து (மந்திரங்கள் இல்லை.. பூக்கள் தூவித், தேவாரம் பாடி, கற்பூரம் காட்டி) மடையை அம்மனுக்குப் படைப்பார்.
படையல் முடிந்ததும் கோவில் வளாகத்தில் இருந்த விருட்சங்களின் நிழல்களில் அமர்ந்து படையலை உண்டு மகிழ்வர். ஏனையோருக்கும் கொடுத்து மகிழ்வர்.
இம்மடையில் கடைப்பிடிக்கப்படும் முறைகள் தொன்மைத் தமிழனின் முறைகளாக இருப்பதும், இக்கால காதலர் தினத்துக்கு ஒப்பான, சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவுக்கு ஒப்பாக இருப்பதும், உலகின் பல பகுதிகளில் கொண்டாடப்படும் வசந்த விழாவுக்கு நிகராக இருப்பதும், இம்மடையும், இம்மடை போல் ஏனைய வயவை அம்மன்களில் சித்திரையில் கொண்டாடப்படும் விழாக்களும் வயவையின் வசந்த விழாக்களே என்பதற்கு மேலும் வலுச்சேர்கின்றன.
இதே போல் வயவையின் ஏனைய கோவில் விழாக்கள் தொடர்பான தகவல்கள் உங்களிடம் இருந்தால் அதனை vayavans@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.