வயாவிளான் மக்கள் ஒன்றியம் பிரான்சின் மூன்றாவது நிர்வாகத் தெரிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. ஒன்றியத்தின் செயற்பாட்டு விருத்திக்காக ஆக்கபூர்வமான கருத்துகளுக்கும் பொதுக்கூட்டத்துக்கு பிரசன்னமாகுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் வயவர்கள் ஒன்றுகூடலில் இருக்கும் வயவர்கள் பங்களிப்பு நிர்வாகத் தெரிவுப் பொதுக்கூட்டங்களில் உண்டா என்றால் இல்லை என்பதே விடையாகும்.. இதற்குக் காரணம் ஒன்றியம் மீதான மக்களின் பிடிப்பும் ஊர் மீதான கரிசனையும் குறைந்து விட்டதென்பதல்ல..
இங்கிலாந்தில் வயாவிளான் நலன்புரிச் சங்கம் தோற்றம் பெற்று அமைதியாகவும் நல்லபடியாகவும் செயற்பட்டு வந்தாலும், பிரான்சு மண்ணில் வயாவிளான் மக்கள் ஒன்றியம் தோற்றம் பெற்ற பின் ஏனைய நாடுகளில் வாழும் வயவர்களின் பார்வை வயவைப்பக்கம் திரும்பியது.
ஐரோப்பிய நாடுகளில் மட்டும் அல்லாது, அவுஸ்ரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் வயாவிளான் அபிவிருத்திக்கான அமைப்புகள் தோன்ற பிரான்சில் பிறந்த வயவையூர் மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகச் செயற்பாடுகளே காரணமாக இருந்தன.
நிர்வாகத்தினரிடம் மட்டும் அல்லாது மக்களிடமும் காணப்பட்ட ஊர் நோக்கிய உற்சாகம் பிரான்சு மண்ணில் நடைபெற்ற முதலாவது வயவர்கள் ஒன்றுகூடலில் பிரதிபலித்தது. நிர்வாகம் சிறப்பாகச் செயற்பட மக்களின் அந்த உற்சாகமும் உந்து சக்தியாக அமைந்தது.
ஆனால் நிர்வாகத்தைத் தெரிவு செய்யும் பொதுக் கூட்டங்களுக்கு ஒன்று கூடலில் கலந்து கொள்ளும் அளவில் மக்கள் கலந்து கொள்வதில்லை. இனி வருங்காலங்களில் பொதுக் கூட்டங்களுக்கு அதிகளவான மக்கள் கலந்து கொள்ளப் போவதும் இல்லை. ஏனெனில் இயந்திர உலகுக்கு வயவர்களும் வாழ்க்கைப்பட்டு விட்டார்கள்.
அடிக்கடி கூட்டங்களில் கலந்து கொள்வதில் அவர்களுக்கு நிறைய இடர்கள் உண்டு.ஆனால் வயவர்கள் ஒன்று கூடல் எனும் போது எப்பாடு பட்டேனும் அதில் கலந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்வர். எனவே இரண்டாண்டுககுக்கு ஒரு முறை நடக்கும் வயவர்கள் ஒன்றுகூடலில் நிர்வாகத்தெரிவை வைப்பது சனநாயகமாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்.
இதனால் பழைய நிர்வாகத்திற்கான பிரியாவிடை வழங்கு நிகழ்வாகவும் புதிய நிர்வாகத்திற்கான வரவேற்பு நிகழ்வாகவும், புதிய நிர்வாகத்தை மக்களுக்கு அறிமுகஞ் செய்யும் நிகழ்வாகவும், வயவர்கள் ஒன்று கூடி மகிழும் நிகழ்வாகவும் முகம் காட்டி ஒன்று கூடல் விழா பல் பரிமாணப் பெருவிழாவாக மிளிரும்.
நாளை மறுதினம் புதிதாக அமையப் போகும் நிர்வாகத்துக்கு முற்கூட்டிய வாழ்த்துகள். முன்னாள் நிர்வாகத்துக்கு நன்றியும் பாராட்டும்.. ஆளுமையான நிர்வாகிகளை உருவாக்குவதும் சிறந்த நிர்வாகத்தின் தலையாய பொறுபாகும் என்ற நினைவூட்டலோடு….
-வயவன் இணையம்-