நாள் : 63
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : புதல்வரைப் பெறுதல்
செய்யுள் : 3
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்
ஒருவர் தம்முடைய செல்வமாக கருதவேண்டியது என்ன?
மக்கள்செல்வமே ஒருவரின் செல்வமாகக் கருதப்படும்.
இதுவரை எளிதாகப் புரியும் செய்யுள், டக்கென்று ஒரு முடிச்சைப் போடுகிறது
அவர்பொருள் தம்தம் வினையாற் வரும்.
என்னுடைய செல்வம் என்னுடைய குழந்தைகள். அவர்களின் செல்வம் என்ன?
அவர்களுடைய செல்வம் அவர்களுடைய குழந்தைகள் அல்லவா? அப்படி இல்லை என்கிறார் வள்ளுவர். அவர்களுடைய செல்வம் அவர்களின் செயல்களால் வரும் என்கிறார்.
மண்டையைப் பிச்சிக்க வேண்டாம். வள்ளுவர் தெளிவாய்த்தான் சொல்லி இருக்கார். அதைப் புரிஞ்சிக்கணும்னா கொஞ்சம் பகுத்தறிவு இருந்தா போதும்.
முதலில் சொன்ன தம்பொருள் எனச் சொன்னது இல்லறத்தானைக் குறித்தது. இல்லறத்தானின் செல்வம் மக்கட்செல்வம்.
இரண்டாவது சொன்னது மக்களுக்கு. அவர்கள் இல்லறத்தில் ஒழுகப்போகிறார்களா?, பிரம்மச்சர்யம் கொள்வார்களா? சன்னியாசம் கொள்வார்களா?
அது தெரியாத பொழுது மக்கட்செல்வத்தை அவர்களின் செல்வமாய் சொல்ல இயலாது. அதனால் அவர்களின் செல்வம் அவர்களின் வினையால் வரும் என்று முடிக்கிறார்.
அவர்கள் இல்லறம் பூண்டால் மக்கட்செல்வம் அவர்களுக்கு செல்வமாகும். இல்லையென்றால் எவ்வாழ்க்கை மேற்கொள்கிறாரோ அதற்குரிய வினைகளினால் செல்வம் வரும்.
பிரம்மச்சரியத்தின் செல்வம் அறிவு. சன்னியாசத்தின் செல்வம் மனஅமைதி. ஆகவே தம்தம் வினையால் வரும் என்றார்.