டிம் கண்ட கனவு இதுவல்ல

276

முந்திய பாகம் படிக்க

`திரும்பவும் இன்டர்நெட்டை மாத்திக் காட்றேன்!’ – 1

 

வியட்நாம் போரில் 30 லட்சம் மக்கள் பலியாக ஒரு தாவரவியலாளர் காரணம் என்றால் நம்பமுடிகிறதா. அமெரிக்க – வியட்நாம் போரில் தாவரவியலாளருக்கு என்ன வேலை, ஆர்தர் கால்ஸ்டன்தான் அவர். சோயா செடிகளை விரைவில் பூக்கச்செய்வதற்காக TIBA எண்ணும் வேதியியல் மூலக்கூறு ஒன்றைக் கண்டுபிடிக்கிறார் கால்ஸ்டன். இதைச் செடிகளின் மேல் சிறிதளவு தூவுவதன் மூலம் விரைவில் செடிகளைப் பூக்கச்செய்யலாம்; அதுவே அதிகமாகத் தூவிவிட்டால் செடிகள் விரைவில் முதிர்ந்து உதிர்ந்துவிடும். இதில் இரண்டாவது அம்சத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டது அமெரிக்க ராணுவம்.

வியட்நாம் போரின்போது அந்த தேசத்தின் வயல்களில் இந்த வேதிப்பொருளை விமானத்திலிருந்து தூவியது. அந்நாட்டு வயல்கள் நாசமாகின. பயிர்களும் வீணாய்ப்போயின. ஆனால், விளைவு இத்தோடு நிற்கவில்லை. அந்த மருந்து தூவப்பட்ட வயல்களில் பணிபுரிந்த மக்கள், அதைச் சுற்றி வசிக்கும் மக்கள் அனைவரும் கடுமையான உடல்பாதிப்புகளுக்கு உள்ளாக்கினர். பலர் உயிரிழந்தனர். வியட்நாம் சொன்ன கணக்குப்படி மட்டும் 30 லட்சம் மக்கள் மாண்டுள்ளனர்.

இப்போது இந்த 30 லட்சம் பேர் மரணத்துக்கு யார் காரணம், இந்த வேதிப்பொருளை உருவாக்கிய கால்ஸ்டனா இல்லை, அதை எடுத்துப்போய் வியட்நாமில் தூவிய அமெரிக்க ராணுவமா, இந்தக் கேள்வி உலகெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தபோது கால்ஸ்டன் வெறுத்துப்போய் ஒரு விஷயம் சொன்னார்.

“எந்தக் கண்டுபிடிப்புமே அதன் விஞ்ஞானிகள் சொல்வதுபோல நன்மை மட்டுமே செய்யாது; அது சமநிலையானது; தீயவர்கள் கையில் கிடைத்தால் தீமையும் நடக்கும். இதற்காக அறிவியலை நாம் குறைசொல்ல முடியாது”

தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் மனிதக்குலத்துக்குத் தீங்கு செய்வதைக் கண்டு வருந்திய விஞ்ஞானிகளில் கால்ஸ்டனும் ஒருவர். அப்படி வருந்திய விஞ்ஞானிகள் பலருக்கும் அந்தத் தவற்றைச் சரிசெய்யும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனால், தற்போது டிம்முக்கு அது கிடைத்திருக்கிறது

டிம் எதற்காக வருந்தவேண்டும்…

இணையத்தால் தற்போது என்ன பிரச்னை என்கிறீர்களா? 90-களில் முதன்முதலில் இணையம் வந்தபோது அதுகுறித்து டிம் கண்டகனவு இது உலக மக்களின் நன்மைக்கு மட்டுமே பயன்படும் என நினைத்தார். ஆனால், அதற்குப் பின் நடந்த சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர் எண்ணத்தைச் சிதைத்தன.

முதலில் அரசாங்கங்கள் மக்களை உளவு பார்ப்பதற்காக இணையத்தைப் பயன்படுத்தின. பின்னர் பெருநிறுவனங்கள் தங்களின் வணிகலாபத்துக்காக வாடிக்கையாளர்களின் பிரைவசியை அடகுவைத்தன. பின்னர் அந்த நிறுவனங்கள் மூலமாகவே இணையத்தை வசப்படுத்துவது அனைவருக்கும் கைவந்த கலையானது. இன்று போலிச் செய்திகளைப் பரப்புவது, மக்களை உளவுபார்ப்பது, மக்களின் தரவைச் சேகரிப்பது என எல்லாத்துக்குமே அச்சாரமாக இருக்கிறது இணையம்.

இதற்கெல்லாம் காரணம், இணையத்தின் செயல்பாடுகள் முழுவதையும் சில நிறுவனங்கள் மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. அதிகப்படியான மக்களின் டேட்டாவை இவர்கள் கையில் வைத்திருப்பதால் இவர்களின் கையே ஓங்கி இருக்கிறது. எல்லோரும் இணையத்தில் சமம் என்ற கோட்பாட்டையே இது சிதைக்கிறது.

இன்று உலகில் 400 கோடி பேர் இணையத்தில் இணைந்திருக்கின்றனர். இது மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிக்குச் சமம். மீதிப்பேரும் வருங்காலத்தில் இணையவிருக்கின்றனர். இன்னும் இந்த இணையத்தை நாம் நிறுவனங்களின் கையிலேயே விட்டுவைப்பது சரியா என்கிறார் டிம். இதற்காக அவர் முன்வைக்கும் மாற்று Decentralized Web. அதாவது, நிறுவனங்கள் சார்ந்து இல்லாமல், முழுக்க முழுக்க மக்களை மையமாக வைத்த ஒரு வலைக்கட்டமைப்பு.

விகடன் இணையத்திலிருந்து