முள்ளிவாய்க்கால்:இறுதிச் சத்திரசிகிச்சையும் நம்பிக்கையும்! 😇

ஒரு கட்டத்தில் ஒக்சிஜன் சிலிண்டேர்களும் (Oxygen cylinders ) முற்றாகத் தீர்ந்து போனது அதன் பின்னர் ஒக்சிஜன் கொன்சென்றேற்றர்கள் ( Oxygen Concentrators) எமக்குக் கைகொடுத்து ஈற்றில் அவையும் செயலிழந்து
போனது! 🥲

பொதுவாகவே ஒரு வைத்தியசாலையில் எல்லா நோயாளருக்கும் ஒக்சிஜன் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை.

ஆனால் மயக்க மருந்து கொடுப்பதற்கும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் (ICU Management ) ஒக்சிஜன் அத்தியவசியமானது.

ஒக்சிஜனைவிட அதிகம் அதிகம் அதிகமான காயமடைந்த பொது மக்களுக்கும் விழுப்புண் அடைந்த வீரர்களுக்கும் தேவைப்பட்ட ஏனைய அத்தியவசிய மருந்துகள் இல்லை என்றான போது அதிர்ந்து போனோம்.

நாளத்தினூடு ஏற்றும் திரவங்கள்
(IV Fluids) , நாளத்தினூடு ஏற்றும் நோயுயிர் முறிகள் (IV Antibiotics) மற்றும் நோய் நிவாரணிகள் (Pain killers) இல்லை என்ற நிலை வந்த போது வயிற்றறைச் சத்திரசிகிச்சை ( Laparotomy ) போன்ற பெரிய சத்திரசிகிச்சைகள் எதுவும் செய்யமுடியாமல் போனது.

எங்களின் அந்த தற்காலிக முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையின் தலைவாசல் மற்றும் முற்றம் முழுவதும் பரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த காயப்பட்டவர்களில் Random Triage மூலம் தேர்ந்தெடுத்து சில அத்தியாவசிய சத்திரசிசிச்சைகளை எமது அணியுடன் இணைந்து செய்தோம்.

மே 14 ஆம் தேதிக்குப் பின்னர் முற்றுமுழுதாக சத்திரசிகிச்சையினை நிறுத்திவிட்டு குருதி வெளியேறுவதால் உண்டாகும் உயிரிழப்பினைத் தடுக்கும் முகமாக ஓடியோடிச் செயற்படுவதென்ற இக்கட்டான (Arrest of bleeding🩸) கட்டத்திற்கு வந்துவிட்டோம்.

அடுத்த நாள் மே 15 ஆம் திகதி கடற்புலியைச் சேர்ந்த ஆதன் என்ற போராளி வயிற்றில் காயப்பட்டு வந்தான்.

அந்தப் போராளியின் குடல் வெளியேறிக் காணப்பட்டது. வெளியேறிய குடற்பகுதியில் மணல் மண் ஒட்டிக் காணப்பட்டது.

அவன் கையெடுத்துக் கும்பிட்டு அழுது ஆராவரப்பட்ட போது களமருத்துவர் அலன் எங்களிடம் ஓடி வந்தார்.

குருதி, நாளத்திரவங்கள்(IV fluids) மற்றும் நாளத்தினூடே செலுத்தும் நோயுயிர்முறிகள் (IV antibiotics) இல்லையாதலால் முடியாதென்பதை விளக்கிச் சொன்னோம்.

அப்போது கலங்கிய விழிகளுடனுடம்
சாப்பாடு ஏதும் இல்லாமல் ஒட்டிய ஒடுங்கிய வதனத்துடனும் தொடர்ச்சியான வேலைகளால் வாடி வதங்கிப் போயிருந்த களமருத்துவர் உயர்ச்சி(கோபி) ஓடி வந்து “நான் குருதி தருகின்றேன்”…

“நீங்கள் சத்திரசிகிச்சைக்கு தயாராகுங்கள் அண்ணா” என்றார்.

களமருத்துவர் உயர்ச்சி தானாக மனமுவந்து குருதித்தானம் செய்த நிகழ்வு பலரையும் நெகிழ வைத்தது.

உயிர்க் கொடைக்காய் தனைத் தயார் நிலையில் வைத்திருந்த ஒரு போராளிக்கு இது சர்வசாதாரணம்தான ஆனாலும் இந்த முடிவை என்னாலும் அங்கிருந்த அனைவராலும் வாழ்நாளில் மறக்கமுடியாது.

இவ்வாறாக “சத்திரசிகிச்சையைச் செய்யுங்கோ” என்ற குரல்கள் அதிகரித்தது.

தாதியாகப் பணி செய்து கொண்டிருந்த இசையருவி என்ற பெண் போராளியும் இவர்களுடன் சேர்ந்து மேலதிக அழுத்தம் தந்தாள்.

பலரும் மன்றாடிக் கேட்டுக் கொண்டதால் அந்த வயிற்றறைச் சத்திரசிகிச்சையினை (Laparotomy) அலனுடன் இணைந்து முடித்தேன்.

மருத்துவர் அமுதன், மருத்துவர் மீனா , மருத்துவர் தூயவன் ஆகியோர் ஏனைய பெருந்தொகையான காயக்காரர்களை சிரத்தையுடன் கவனித்துக் கொண்டதால் அலனும் யானும் மூன்று முதல் நான்கு மணித்தியாலங்கள் வரை ஆதன் எனும் ஒருவனின் உயிருக்காய் போராட முடிந்தது.

 

அடுத்த அடுத்து வந்த கொடிய நாட்கள் எங்கள் தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவில் பலமான அடி வீழ்ந்ததால் நிலைமை தலைகிழாக மாறிவிட்டது.

 

எங்களை வவுனியா, கொழும்பு, காலி பூசா என அடிக்கடி இடம் மாற்றிக் கொண்டிருந்தனர்.

சிறையிருந்த நாட்களில் எல்லாம் ஒரு குற்ற உணர்வுடன் (Guilty and Grievance) “ஆதன்” எனும் அந்தப் போராளி உயிருடன் இருக்கின்றான என எண்ணி எண்ணிக் கொண்டிருந்தேன்.

ஆனால்,

அண்மையில் போராளி ஆதன் முல்லைத்தீவில் நலமுடன் இருப்பதாகவும் எமை அன்போடு நலன் விசாரித்ததாகவும் சுவிசிலிருந்து அலன்
சொன்னார்.

ஆம்,

நாளையும் நாளை மறுநாளும் நம்பிக்கையுடன்
விடியும் விடியும்! ✊🥰✊