செம்புலக் கூத்தின் பனிப்புலப் பதிவு

340

வஞ்சி நீ சொன்ன மொழி
நெஞ்சில் முள்ளாய் தைத்ததடி
வாடி நிற்கும் என்னினத்தை
நாடி மனம் ஓடுதடி..

அச்சம் இங்கே அகன்ற பின்னே
அன்பே வாறேன் டி
ஆசைக்கிளியே உனக்கு
மாலை தாறேண்டி..

நேர நெருக்கடி எனும் பாறையின் மீதமர்ந்து, அலகு துடைத்துக் கொண்டிருந்த என் ஞாபகப்பறவை பனிப்புலத்தில் தொடரும் வயவையூரின் கலைப்பயணமெனும் சொல்வீச்சால் சிறகு விரித்து அடங்காப்பற்றின் வட்டக்கச்சி- இராமநாதபுரத்தில் தரையிறங்கியது.

1996-97 ர்காலப்பகுதியில், புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த பதின்மம் தாண்டிய என் பருவத்தில், பதிக்கப்பட்ட காலடித்தடம் போல மேலே சொன்ன பாடல் இன்றும் எனக்குள்.. ஆம்.. தமிழரிசின் கலைப்பிரிவு நடத்திய பரப்புரை வீதி நாடகத்தின் கருச்சுமந்த வரிகள் அவை..

காதல் வசப்பட்ட காளை ஒருவன், லௌவீக உலகில் நுழைந்து கன்னிகையை கரம் பிடிக்க விருப்பை வெளிப்படுத்துவான். கன்னிகையோ, மானத்தமிழத்தின் இன்னல்களை எடுக்காட்டி, இன்னல் களையும் கடனை காளை ஒவ்வொருவருக்கும் உண்டென்பாள். கடமை உணர்ந்த காளையோ இனக்கடம் தீர்க்க, இனமானம் காக்க, மண் மீட்கக் களம்புகுவான்..

இதுதான் அவ்வீதி நாடகத்தின் கருப்பொருள். இதன் தாக்கம் பின் வந்த காலங்களில் தமிழர் சேனை அடைந்த வெற்றிகளில் தெரிந்தது. ஆம்.. போர்க்காலத்தில் போர்க்களத்தில் சேனை பெருக்க வீதி நாடகங்கள் பெரிதும் உதவின. இளைஞர்கள் நெஞ்சில் நீறுபூத்திருந்த வீரத்தழலை பிழம்பாக்கிய பெருமை இவ்வீதி நாடகங்களெனும் தெருக்கூத்துக்கும் உண்டு.

மக்களை எளிதாகவும் வலிமையாகவும் கருத்துகள் சென்றடைய தெருக்கூத்துகள் பொருத்தமான சாதனம். கடத்த வேண்டிய கருத்தை சுருக்கென்று நெஞ்சில் குத்தி விடுவதே கூத்து. இதனால்த்தான் உலகெங்கும் உள்ள செஞ்சிந்தனை வாதிகள், புரட்சியாளர்கள் தெருக்கூத்தின் மூலம் மக்களை அடைந்தனர். ஆதிக்க சக்திகளும் அடக்குமுறையாளர்களும் இச்சக்திவாய்ந்த தெருக்கூத்தாயுதத்தை தடை செய்த வரலாற்றுப் பதிவுகள், தெருக்கூத்தின் சக்தியை பறைசாற்றப் போதுமானவை.

மட்டுமன்றி தமிழனின் ஆட்ட மரபுக் கலைகளின் தாயென போற்றப்படுவதும் கூத்து என்றொரு கருத்தும் உண்டு. எது எப்படியோ காலம்க்காலமாகக் காக்கப்பட வேண்டியது கூத்து. அதனால்தான் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை பாட நூலின் மூலம் கூத்துக்கலையை இளைய மனங்களில் பதிப்புக்கிறார்கள்.

இலண்டனிலுள்ள தனிநாயகம் அடிகளார் கல்வி நிலையமோ பல்லடி மேலே சென்று கூத்துக் கலையை இளையோர் மூலம் காலவேட்டில் பதிவேற்றியுள்ளார்கள். இப்பெருமைமிகு நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரியோரே..

கூத்துப் பற்றிய இன்னும் நிறைய கதைக்க வேண்டும் போல இருக்கு. காலம் வாய்த்தால் கதைக்கலாம்..