காலம் கடந்தவனின் கடைசிக் கண்ணீர்.

இதோ ..!

இந்த இரவுகளைக் கடந்து போக
கண்ணீர்த் துளிகளும் சில கவிதைகளுமே
என்னிடம் மீதமிருக்கின்றன
ஒரு யாத்திரீகனின்
கடைசி முறடுத் தண்ணீரின் சேமிப்பைப் போல
என் உயிர்த்தலுக்காய் அவற்றைப்
பொத்தி வைத்திருக்கிறேன்.

 

காலத் தொடரியின் ஒவ்வொரு
கடவைகளையும் கத்திச் சொல்லும்
சுவர்க்கடிகாரத்திடம் அதன்
சுழலும் வேகத்தை சற்று
நிறுத்தி வைக்க நிர்ப்பந்திக்கிறேன்
மின்வெட்டு இரவுகளில் மாத்திரம்
தேடப்படும் சிமிலி லாம்பின் தீண்டலாய்
தேவைகளுக்காக சிணுங்கிக்கொண்டிருக்கும்
தொலைபேசியிடம் இனியேனும்
பேரன்பின் அலைவரிசைகளை மட்டும்
உள்வாங்கச் சொல்லியிருக்கிறேன்

புத்தகப் பக்கங்களைப் புரட்டும்
ஓசையைக் கூட கேட்க விரும்பாத
ஓர் முட்டாள் மாணவனைப் போல
காலம் தன் செவிகளை மூடிக்கொண்டுள்ளது
அது யாருக்காகவும் எதற்காகவும்
தன் நிலைப்பாட்டை கைவிடுவதாயில்லை
தன்னைச் சரியாக பயன்படுத்தாத
மனிதர்களைக் காலம் இப்படித் தான்
கடந்தவைகளைக் காண்பித்து
கற்பிக்கவும் தண்டிக்கவும் செய்கிறது

சுழல் காற்றிடம் கைதாகி
சிறகைத் தொலைத்த இறகாய்
திசையறியாதிருக்கிறேன்
இழப்பதற்கு ஏதுமற்ற கடனாளியைப் போல
வெறுமையாய் கிடக்கிறது வானம்
கரை தேடி ஓடிவரும் பேரலையை
அடுத்த நொடியே உள்ளீர்க்கும் பெருங்கடலாய்
ஒரு பட்டாம்பூச்சியின் பெருங்கனவு
பெருமூச்சோடு பேச்சிழந்து நிற்கிறது
காரணம் சொல்லத் தெரியாமல்
கதறியழுகின்ற ஓர் குழந்தையின்
அந்தரிப்பை அனுபவிக்கிறது மனசு

குளிரூட்டப்பட சொகுசுக் காருக்குள்
தவறுதலாக சிக்கிக்கொண்ட – ஓர்
பட்டாம் பூச்சியின் மனோநிலையை
நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை..
பார்வைகளில் பளபளக்கிற பயணம்
என்றாலும் பட்டாம்பூச்சிக்கு அது
பருவங்களைத் தொலைக்கும் சிறைவாசம்
யாருக்கும் யாரோடும் அமர்ந்து பேசவும்
அருகிலிருப்பவர்களை நிமிர்ந்து பார்க்கவும்
நேரம் இருப்பதில்லை -இங்கே
இரங்கற்பாக்கள் கூட
வெறும் RIP க்குள் தானே சுருங்கியிருக்கிறது

மலர்க்காடுகளில் அகமலர்ந்து
உலாவியிருக்க வேண்டிய
பட்டாம்பூச்சியின் நிகழ்காலங்களை
அதன் கடந்தகாலத் தவறொன்று
தின்று தொலைத்திருக்கிறது
பயணத் தீர்மானங்கள் ஏதும் அதனிடமில்லா
பட்டாம்பூச்சியின் இப்போதைய
பிரார்த்தனையெல்லாம்
மலர்க்காடுகளின் நடுவே மரித்துவிட வேண்டும்
அவ்வளவே.!

-க.குவே

18/01/22 : 23:00