நவீன நாரதர் – பாகம் – 01

1021

சுவாமி!

உன் எண்ணம் நிறைவேறி விட்டதா?

நாராயணா! நாராயணா!! நீங்கள் என்னை சந்தேகத்தோடு தான் பார்க்கிறீர்கள். உங்களிடம் விளையாட முடியுமா? திருவிளையாடல்களை நடத்துவதே நீர்தானே!

நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்பார்கள்

முடியும் என்று சொல்லாதீர்கள் பரமேஸ்வரா!… முடியாத ஒரு முடிப்பிரச்சனை ஒன்று முடிவின்றி ஓடிக் கொண்டிருக்கிறது இத்தளத்தில்.. கங்கையை சடையில் முடிந்த கங்காதரா மங்கைக்கு இடப்பாகம் அளித்த மஹேஸ்வரா… சங்கை அரிந்து வாழும் நக்கீரனுக்கு அருள் புரிந்த சர்வேஸ்வரா! என்கையில் ஒன்றுமில்லை என்பது நீர் அறியாததா?

சந்தடி சாக்கில் என் இருமண விவகாரத்தை சந்திக்கு இழுக்காவிட்டால் உனக்கு தூக்கம் வராதா பிரம்மபுத்திரா!

எல்லோரையும் எதாவது ஒரு புத்திரன் என்று அழைக்க முடியும் ஆதியும் அந்தமும் இல்லாப் பரம்பொருளே! உம்மை யார்புத்திரன் என்றழைக்க முடியும்…

சரி சரி மன்றமெல்லாம் ஒரு வித மணம் வீசுகிறதே கவனித்தீரா! என்ன மணம் அது?

திருமணம் என்னும் நறுமணம் பரமேஸ்வரா!.. சதாசர்வ காலமாக உமது மூத்தபிள்ளை கணேசரை போல் மால்களிலும் தியேட்டர்களிலும் பெண்தேடிக் கொண்டிருந்த சிலர் தம் தாய்தந்தை கைகாட்டும் பெண்ணையே மணமுடிப்பதாய் முடிவெடுத்து விட்டனராம்…

என்ன இருந்தாலும் வாழப்போவது இவர்களல்லவா! மங்கை மனதிற்கு இனியவளாய் இருக்க வேண்டும் என்ற கனவு இருக்காதா?

கனவு காண்பதில் தவறில்லை கௌரிசங்கரா! காதல் என்பது மணத்திற்கு முன்னால் வந்தால் என்ன பின்னால் வந்தால் என்ன? வாழ்க்கையை இனிமையாக்குவது எதிர்பார்ப்பற்ற அன்புதானே!

சரியாய் சொன்னாய். நீ பிரம்மச்சாரிதான் என்றாலும் மாயையின் வயப்பட்டு பெண்ணாகி ஒரு முறை மணவாழ்க்கையை அனுபவித்திருக்கிறாயே!… சொல்.. எதிர்பார்ப்பற்ற அன்பு என்றால்..

எவனொருவன் மணம் முடிக்க எண்ணுகிறானோ அவன் முதலில் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்..

சுயபரிசோதனையா?

ஆம் இறைவா! சுயபரிசோதனை என்பது அகமும் புறமும் கலந்தது.. முதலில் தன் ஆரோக்கிய நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம்.. சிலருக்கு இரத்தப்பிரிவு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்ததாகப் படைக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு குறிப்பிட்ட ரத்தப்பிரிவினரை மணமுடித்தால் மட்டுமே சந்ததி இன்னல்களின்றி ஏற்படலாம்.. அதுமட்டுமின்றி இன்று வரை தாய் கை உணவு உண்டு வளர்ந்திருந்தால் பரவாயில்லை.. பணத்திற்காக அன்னம் விற்கும் உணவகங்களில் உண்டு, உடல் உழைப்பு குறைந்த மக்கள் கொழுப்பு சர்க்கரை என்ற சில தொந்தரவுகளைக் கொண்டிருக்கக் கூடும். அவற்ரை சரிபார்த்துக் கொள்வதும் அவசியம்…

ஆமாம் நாரதா! திருமணம் முடிந்தவுடன் மணமக்களை இந்த உறவினர் கவனிக்கும் கவனிப்பு இருக்கிறதே.. உண்ண முடியாத அளவிற்கு உணவு.. தின்பண்டங்கள், பானங்கள் என்று படுத்தி விடுகிறார்களே… ஆரோக்கிய உணர்வு உள்ளவர்கள் அளவறிந்து உண்பார்களே!..

அதற்கடுத்து மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் மஹாதேவா!

மனதையா!

ஆமாம் ஆருத்ரா!.. தன்னை நம்பி சிலர் வாழப்போகிறார்கள் அல்லவா.. இனியும் நான் எனது எனக்கு என்ற எண்ணங்கள் தலை தூக்கலாமா?

என்ன சொல்கிறாய் திரிலோகச் சஞ்சாரியே! நீ சொல்வதைப்பார்த்தால் சுதந்திரத்தை பறிகொடுப்பது போல் இருக்கிறதே?

இல்லை இறைவா! சுதந்திரத்தை பறிகொடுப்பதல்ல.. சுதந்திரத்தை பாதுகாப்பது!

குழப்ப ஆரம்பித்துவிட்டாய்.. உன் சப்லா கட்டை சத்தத்தை குறைத்து பொறுமையாகச் சொல்..

சர்வேஸ்வரா!.. ஒவ்வொரு மணமக்களும் திருமணத்தால் தான் இன்பமடைவோம்.. தமது மகிழ்ச்சி பெருகும் என்று எதிபார்க்கிறார்களே..
அது தவறு..

இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே.. என் முதல் திருமணம் முடிந்தவுடனேயே நான் பிச்சையெடுக்க வேண்டி வந்ததே!

அது திருமணத்தின் தவவறில்லை ஆண்டவா!.. பிரம்மன் தலையை நீங்கள் நுங்கு போல் நோண்டி எடுத்ததால் வந்த பிரம்மஹத்தி…

கல்யாணம் பண்ணி கடனாளி ஆனானே கலியுகத் தெய்வம் வெங்கடேஸ்வரன்..

அது வீம்புக்கு செலவு செய்து கடனாளி ஆகாதீர்கள் என்று உலகிற்குச் சொன்ன ஒரு பாடமல்லவா? எதை எதையோ சொல்லி கதையை திசை திருப்பாதீர்கள்.. நான் சொல்லவந்ததை முழுதாக சொல்லவிடுங்கள்…

சரி சொல்.. இன்னும் ஐந்து நிமிடத்திற்கு நான் வாயே திறக்கப் போவதில்லை.

நான் சொல்லுவதை நீங்கள் வாயைத் திறந்து கொண்டுதான் கேட்கப் போகிறீர்கள்..

திருமணத்தின் சூட்சமமே எதிர்பார்ப்பற்ற அன்பில்தான் தொடங்குகிறது..
திருமணத்தினால் நான் சுகமடைவேன் என்று எண்ணுபவன் சுகத்தின் பின்னால் போகிறான்.. அகத்தை, தன் அகத்தவளை தன்னுடைய தேவை தீர்க்க வந்த சேவகியாக பார்க்க ஆரம்பித்து விடுகிறான்.. தன் சுகம் தேடியவன் அதை தேடிக்கொண்டேதான் இருக்கிறான். ஏனென்றால் இன்பம் அவனுள் இருக்கிறதே தவிர வெளியே இல்லை..

அதே சமயம் என்னுடன் வாழ வந்தவளை சந்தோஷமாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவளின்பம் நோக்குபவன் அளவில்லா இன்பமடைகிறான்.. சந்தோஷத்தினால் தான் சந்தோஷத்தை தர முடியும்.

இயல்பாகவே மனித மனம் தன்னை சந்தோஷப் படுத்துபவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கத்தான் நினைக்கும்.. யார் முதலில் என்ற கேள்வி எதற்கு?

உன்னால் உன் மனைவியை, மக்களை, பெற்றோரை சந்தோஷமாய் வைக்க முடியுமா? எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது என்று பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட்டு நழுவுவதில்லை வாழ்க்கை..

மனைவியை தன் மிகச் சிறந்த தோழியாய் நினைப்பவன் மனைவியை தன் வழிக்குக் கொண்டு வந்து விடுகிறான்..

என்றுமே எவரும் எந்த சந்தோஷத்தையும் தனியாய் அனுபவிப்பதில்லை.. நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனும் தான்..

எவனொருவன் தன் மனைவியை தன் மிகச் சிறந்த தோழியாக்கிக் கொள்கிறானோ அவன் பெறும் சந்தோஷத்திற்கு அளவில்லை..

அதாவது!..

நீங்கள் ஐந்து நிமிடத்திற்குள் வாயைத்திறந்து பேச ஆரம்பித்து விட்டீர்கள்.. இதற்குத் தண்டனை…

தண்டனை..

திங்கள் வரை நான் பேசப் போவதில்லை!!!!