நாளொரு குறள் – 44

நாள் : 44
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : இல்வாழ்க்கை
செய்யுள் :4

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

இல்லற வாழ்க்கையில் பயமா? கவலை வேண்டாம். உங்கள் கவலையை ஒழிக்க எளிய வழி இருக்கிறது.

இது இன்றைய பால் மருத்துவ வல்லுனர்களின் விளம்பரம். இல்லற வாழ்க்கை என்றால் பாலுறவு என்ற அளவிற்கு தமிழை கொச்சைப்படுத்த நமக்கு மனம் வந்திருக்கிறது என்பது மிகவும் வெறுப்பான விஷயம். இதுதான் அன்னிய மொழியின் பாதிப்பு என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லற வாழ்வை பயமின்றி கைக்கொள்ள இரு அம்சத் திட்டத்தைத் தருகிறார் வள்ளுவர்.

1. பழிக்கு அஞ்சுதல்
2. பகுத்துண்ணுதல்

இதை இரண்டையும் இல்லறத்தான் செய்வானாயின். அவனுடைய வாழ்க்கை எஞ்சல் இல்… அதாவது அவனது வாழ்வில் குறையே வராது. அவனுடைய வாழ்க்கை அழியாது.

முதல் மூன்று செய்யுளில் வள்ளுவர் சொன்னதும் இதையேதான். கொடுத்து வாழ்தலே இல்வாழ்க்கை.. அதை வலியுறுத்தவே இப்படி முதல் நான்கு செய்யுள்களில் கொடுத்தலையும் பழியஞ்சுதலையும் சொன்னார் வள்ளுவர்.