அன்பான வயவையூர் மக்களே!

128

அன்பான என் வயாவிளான் மக்களே!

எமது ஊர் சார்ந்து பல்வேறு அமைப்புக்கள், தனி நபர்கள் உங்களினால் முடிந்த பல்வேறு உதவித்திட்டங்கள் மேற்கொண்டு வருகின்றீர்கள், அதற்க்கு முதற்கண் எனது வாழ்த்துக்கள். ஆனாலும் பலரினால் பொதுவெளியில் கூறப்படுகின்ற கருத்துக்கள் எங்கள் வயவை மண்ணை வேறு ஊர் மக்கள் முன்னால் கீழ் நிலைக்கு நாமே கொண்டு சென்றுள்ளோம் என்பதனை அவர்களுடன் கதைக்கும் போது உணர முடிகின்றது.

எனவே வயவை மண்ணின் வழித்தோன்றல்களே எங்கள் சிலருக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள், சந்தேகங்கள், தெளிவற்ற விளக்கங்கள் என்பவற்றினை முகப்புத்தகம் இணையம் போன்ற அனைவரும் பார்க்கும் தளங்களில் போடாமல் தனிப்பட்ட ரீதியில் கதைப்போமாக இருப்பின் ஊருக்கு மிக நன்மை பயக்கும் செயற்பாடாக இருக்கும்.

வயாவிளான் எமது ஊர் என்று நாம் எங்கே கூறினாலும் கல்லடி வேலுப்பிள்ளையின் ஊர் என்று மற்றவர்கள் கூறுகின்றனர், எனவே இந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ள நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றவர்கள் முகம் சுளிக்காமல் கேட்கவும் வாசிக்கவும் கூடியதாக இருப்பதே நாம் அவருக்கு செய்யும் மரியாதை ஆகும்.

அமைப்புக்களுக்கு, தனிப்பட்ட நபர்களுக்கு நீங்கள் வழங்கி மேற்கொள்கின்ற செயல்பாடுகளுக்கான கணக்கு விபரங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், இது கருத்து முரண்பாடுகளை குறைக்கும்.

எந்த உறவுகள் ஆயினும் அவர்கள் பிழைகள் விடுவார்களாயின் உடனுக்குடன் சுட்டிக்காட்டி திருத்துங்கள், பல காலம் சென்ற பிறகு குறை காண்பது உறவுகளை பிரித்து விடலாம்.

யாருடைய மனதையும் காயப்படுத்தும் எண்ணத்துடன் இவற்றினை குறிப்பிடவில்லை. எமது ஊர், எமது உறவுகள் என்றும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குறிப்பிடுகின்றேன். எனது கருத்தில் பிழைகள் இருப்பின் தெரிவிக்கவும்.

நன்றி
கதிரவேலு விமலதீசன்
திக்கம்பிரை
வயாவிளான்.