ஐந்தாண்டுகளுக்கு முன்..
இதே நாள்.. இதே நேரம்…
இதமான குளிர் இதயம் வருட,
வீட்டில் குடியிருந்த தனிமையை இளையராஜா விரட்டி அடிக்க..
வந்து விழுந்தது அச்செய்தி..
எந்த நேரத்தில் என்ன வேண்டும் என்று
எந்த நேரமும் எமைப்பற்றியே சிந்தித்து..
அந்தந்த நேரத்தில் அதையதை தந்தீரே..
ஒன்றை மட்டும் மிச்சம் வைத்தீரே..
மொத்தமாய்த் தந்திடவோ..
என்றுதான் எண்ணினோம்….
அத்தனை காலமும் நீர்
தந்திடா துயரத்தை
மொத்தமாய் அன்று தந்தீர்
உன் உயிர் பிரிந்த சேதி கேட்ட அந்த நொடி..
எம் கண்கள் வழியே உயிர் கசிந்தது….
உம் உதிரம் குழைந்து
உருவான எம் சொரூபம் நொருங்கியது..
நீர் தந்த வித்தை எல்லாம்
அந்த ஒரு நொடிப்பொழுதில்
கண்கட்டி வித்தை காட்டியது..
உற்ற நேரத்தில் கற்றதை மறந்த
கர்ணன்கள் ஆனோம் நாம்..
ஆம்..
அந்த நொடி
எங்கள் உலகம் உறைந்து போனது..
அடுத்த நொடி
வானம் தாண்டி
எம்மை அழைத்துச் சென்றீர்..
எம்மை எமக்கே அடையாளம் காட்டினீர்..
ஆம்..
அன்றுதான் நாம் எம்மை உணர்ந்தோம்..
ஞானத்தின் உச்சநிலை
நம்மையே நாம் அறிதல் என்பர்..
உம் உயிர் கொடுத்து
அதையும் நீர் எமக்களித்தீர்..
சேதி கேட்ட அக் குறு நொடிதான்
நாங்கள் கடைசியாய் அழுதது.
இப்போ தெல்லாம்
எங்கள் கண்கள்
தங்கள் முகங்களைக் கழுவிக்கொள்கின்றன
“பார்வைத் தெளிவுக்காய்”
எங்கள் பரம்பரையின் பிதாமகரே!
காலத்தை வென்று நீர்
என்றும் வாழ்வீர் நீராக..
Rip