நாளொரு குறள் – 72

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அன்புடைமை
செய்யுள் :2

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு எனும் பண்பு பற்றி வள்ளுவர் மெல்ல விவரிக்கிறார். அன்பு ஆர்பாட்டமானதல்ல. அமைதியானது.
அன்பு ஒருவரிடம் இருக்கிறதா இல்லையா என எப்படி அறிவது?

மிக எளிது என்கிறார் வள்ளுவர்.

எதையும் இது எனக்கு என்பவன் அன்பில்லாதவன். உனக்கு என்பான் அன்புள்ளவன்.

தனக்கென அன்புள்ளவன் எதையும் வைத்துக் கொள்வதில்லை என்பதுதான் வள்ளுவர் தரும் வரையறை.

கேட்டதும் கொடுப்பவனே என்பார் கண்ணதாசன்.
இறைவனிடம் கையேந்துங்கள் என்று சொல்லும் இன்னொரு பாடல்
கேளுங்கள் தரப்படும் என்று சொல்லும் இன்னொரு பாடல்.

ஆனால் வள்ளுவர் சொல்லும் அன்புடைமை, கேட்கும் வரை பொருத்திருப்பதில்லை.

அன்பில்லாதவர் இது என்னுடையது, உனக்குத் தருகிறேன் என நினைப்பார்கள். அந்த தானத்திற்கு பதிலாக புண்ணியமும், பிற இலாபங்களும் எதிர்பார்ப்பர். நன்றிக் கடனும் எதிர்பார்ப்பர்.

அன்புடையவர்கள் எதையுமே தமக்கு உரியதாகக் கருதுவதில்லை. தங்கள் உடம்பில் உள்ள எலும்புகளைக் கூட தன்னுடையது என எண்ண மாட்டார்கள்.

தனக்கு கிடைத்ததை எல்லாம் எந்த மனத் தடுமாற்றமும் இன்றி கொடுக்கும் தன்மையே அன்புடைமை.

இதனால்தான் அன்பு இல்லாதவர்களால், இல்லறப்பணியான அறத்தை ஆற்ற இயலாது. இல்லறத்தைச் சார்ந்து  நிற்கும் சன்னியாசிகள், பிரம்மச்சாரிகள், விருந்தினர், தெய்வம், முன்னோர் இப்படி எவரையும் காக்க இயலாது.

அன்புடைமை என்பது என் குழந்தை என் கணவன் எனச் சுய நலம் சார்ந்ததல்ல. “என்” என்ற வார்த்தை இருந்தாலே அது அன்பு இல்லை.